மருத்துவ மூலிகை தொகுப்பு : வில்வம்..!!
வேறு பெயர்கள் : சாபி, கூவிளம், கூவிளை, சிவத்துருமம், நின்மலி, மலூரம்
Eng.name : Bael (tree)
Sansk.name : Bilva
பயன்படும் பாகம் : இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வேர், பிசின்
சுவை :
- இலை, பூ, பிஞ்சு, காய், வேர் : துவர்ப்பு, கைப்பு
- பழம் : துவர்ப்புடன் கூடிய இனிப்பு
வீரியம் : வெப்பம்
பிரிவு : கார்ப்பு
செய்கை
இலை :
- வியர்வைப்பெருக்கி - Diaphoretic
- காமம்பெருக்கி - Aphrodisiac
- வெப்பகற்றி - Febrifuge
பூ, பிஞ்சு, காய் :
- துவர்ப்பி - Astringent
- செரிப்புண்டாக்கி - Digestive
- பசித்தீத்தூண்டி - Stomachic
பழம் :
- துவர்ப்பி - Astringent
- மலமிளக்கி - Laxative
- பசித்தீத்தூண்டி - Stomachic
வேர், பிசின் :
- காமம்பெருக்கி - Aphrodisiac
குணம்
'' பல்லவம்பூ பிஞ்சின் பழநிரியம்சம் முறையே
வல்லவம் மேகம்மந்த மாகுன்மம் - செல்லுகின்ற
நோக்கமருள் விந்துநட்ட நூறு மடுத்தவர்கட்
காக்கமருள் வில்லுவத்தி லாம் ''
வில்வத் தளிர் - சகல மேகத்தையும், பூ - மந்தத்தையும், பிஞ்சு - குன்மத்தையும், பழம் - கண்ணிருளையும், பிசின் - விந்து நட்டத்தையும் நீக்கும்.
'' வில்லுவத்தின் வேருக்கு வீறுகுன்ம வாயுகபம்
சொல்லவொணாப் பித்தந் தொடர்சோபை - வல்லகப
தாகசுரம் நீரேற்றஞ் சந்நியொடு மெய்வலியும்
வேக மொடுநீங்கு மே ''
'' அக்கினி மந்தம் அரோசியதி சாரம்விக்கல்
நிற்கரிய பித்தசுரம் நீள்வாந்தி - சுட்கநோய்
ஆதியநோய் ஏகும் அழகோடு புஷ்டியுண்டாம்
கோதில்வில்வ வேரதனைக் கொள் ''
வில்வ வேருக்கு - வாதகுன்மம், வாயு, கபம், பித்தசோபை, கபதாகசுரம், நீரேற்றம், சந்நி, உடல்வலி, அக்கினி மந்தம், அரோசகம், அதிசாரம், விக்கல், பித்தசுரம், வாந்தி, சுட்கநோய் போகும். அழகும், தேகபுஷ்டியும் உண்டாகும்.
மருத்துவ பயன்பாடுகள்
இலை :
- இது சிவன் கோயிலில் அர்ச்சனை செய்யும் பத்திரங்களுள் சிறந்தது.
- இளந்தளிரை வாட்டித் துல்லிய சீலையில் முடிந்து ஒற்றிடமிட மேகத் தாலுண்டாகும் கண் சிவப்பு நீங்கும்.
- இலை 1 - க்கு நீர் 4 பங்கு கூட்டி நாலிலொன்றாக வடித்த கஷாயம் வயிற்றுக்கடுப்பு, மேகவாயுவைப் போக்கும். சுரத்திற்கும் உதவும்.
- இலைச்சாற்றைப் பிழிந்து உடனே அதில் மிளகுத்தூள் சிறிது சேர்த்துக் கொடுக்க, மலபந்தத்துடன் கூடிய சோபை, காமாலை தீரும். மேற்படி சாற்றுடன் நீர் அல்லது தேன் கூட்டிக் கொடுக்க சலதோஷம், சுரம் குணப்படும்.
- பசுவின் மூத்திரம் விட்டு இலையை இடித்துப் பிழிந்த சாற்றில் 1/2 - 1 ஆழாக்கு வீதம் கொடுத்துவர பாண்டு, சோபை, வீக்கம் போகும். புளி ஆகாது.
பூ :
- இதைக் கஷாய மிட்டேனும், உலர்த்திச் சூரணஞ் செய்தேனும் மந்தத்தைப் போக்க வழங்கலாம். ( கஷாயம் - 1/4 - 1/2 ஆழாக்கு ; சூரணம் 4 - 16 குன்றியளவாகும் )
பிஞ்சு :
- இளம் பிஞ்சை அரைத்து 1/2 - 1 1/2 வராகனெடை வீதம் எருமைத் தயிரில் கலந்து கொடுக்க வயிற்றுக்கடுப்பு, குன்மம், சீதபேதி நிற்கும். இம்முறை சிறு பிள்ளைகளுக்கே பெரும்பாலும் வழங்கப்பட்டு வருகிறது.
காய் :
- இதைப் பசுவின் பால் விட்டரைத்துத் தலைக்குத் தேய்த்து நீராட கபாலச்சூடு, கண்ணெரிச்சல் நீங்கி, கண்கள் குளிர்ச்சியடையும்.
- காயை வெட்டி வெயிலில் உலர்த்திப் பொடிசெய்து சிறுவர்கட்கு 1/4 - 1/2 வராகனெடை வீதமும், முதிர்ந்தவர்கட்கு 1/2 - 1 வராகனெடை வீதமும் தினம் இரு முறை கொடுத்துவர சீதபேதி, இரத்தபேதி நிற்கும். சிறுவர்களுக்கு நற்பயனைத்தரும்.
- காயுடன் இஞ்சி, சோம்பு சேர்த்து, குடிநீரிட்டு மூலரோகிக்குக் கொடுத்துவரலாம்.
பழம் :
- வில்வப்பழத் தைலம் :- பழச்சதை, கார்போகி, வெந்தயம் வகைக்குப் பலமொன்றெடுத்து பசுவின் பால் விட்டரைத்து, அரை வீசை எண்ணெயிற் கலக்கிச் சிறுதீயிட்டெரித்துப் பக்குவ பாகத்தில் வடித்து, தலை மூழ்கிவர, கண்ணெரிச்சல், கபால வலி, தேக அழல், மூளையைப்பற்றிய ரோகம் நீங்குவதுடன், உடலுக்கு அழகும் வன்மையு முண்டாகும்.
- பழச்சத்து :- பழச் சதையை ஒரு பாத்திரத்திலிட்டு, அது மூழ்கும்படி நீர் விட்டு ஒரு சாமம் வரையில் துடுப்பால் கிளறித் துழாவி கனத்த சீலையில் வடிகட்டி, நீரை மற்றோர் பாத்திரத்தில் சேர்த்துவிட்டு, வடிகட்டிய திப்பிக்கு அது மூழ்கும்படி மறுபடியும் நீர்விட்டு முன்போலவே செய்து வடிகட்டிய நீரை முன் வைத்துள்ள வடிகட்டிய நீருடன் சேர்த்து இப்படி மொத்தத்தில் 4 - 5 முறை செய்து, கடைசியில் அந்நீரை ஜலேந்திரத்தில் வைத்துச் சுண்டக் காய்ச்சி மெழுகு பதத்தில் எடுத்து வைத்துக்கொண்டு 1/2 - 1 வராகனெடை வீதம் நாள் ஒன்றுக்கு 2 - 3 முறையாகக் கொடுத்துவர, க்ஷயம், க்ஷயத்தில் காணும் இரத்தபேதி, பேதி, நாட்பட்ட சீதபேதி, அதிசாரம், கிரகணி, கண்ணிருளல், நாட்பட்ட மலபந்தம் தீரும்.
- பாணிதம் :- பழச்சதை ஒரு பங்கிற்கு இரண்டு பங்கு நீர்விட்டரைத்து வடிகட்டி சர்க்கரை ஒரு பங்கு அல்லது இனிப்பு அதிகம் வேண்டின் அதற்குத் தக்கபடி இலையைக் கஷாயமிட்டு ஆமணக்கு நெய் சேர்த்துக்கொடுக்க வாதநீர், பித்த நீர், மலக்கிருமி முதலியவை பேதியின் மூலமாய் வெளிப்பட்டு மேற்கூறிய நோய்கள் நீங்கும்.
மேலும் வில்வ இலையை வதக்கிக் கட்டிகளில் வைத்துக்கட்டக் கட்டிகளின் வீக்கத்தை குறைக்கும்.
இலையை நீரிட்டுக் காய்ச்சி, வாதநோயினர்களின் வீக்கங்களின் யாதாமொரு தைலத்தைப் பூசியபின் இந்நீரை விட்டுக் கழுவ வீக்கம் குறையும்.
இலையைச் சமையல் செய்தும், காயை வற்றலிட்டு வறுத்தும் உண்பது நாட்டினர் வழக்கமாக காணப்படுகின்றது.

Comments
Post a Comment