சித்தமருத்துவத்தின் "எண் வகைத் தேர்வு" அல்லது "பிணியறி முறைமை" என்றால் என்ன..?
விதியும் ஒழுக்கமும் :
இது,
- பொறியாற்றேர்தல் ;
- புலனாலறிதல் ;
- வினாதல் என்னும் விதிகளையும்,
1. பொறி
- மூக்கு
- நா ( வாய் )
- கண்
- தோல் ( மெய் )
- செவி என ஐவகைப்படும்.
2. புலன்
- நாற்றம் ( மணம் )
- சுவை
- ஒளி
- ஊறு
- ஓசை என ஐவகைப்படும்.
3. வினா
வினா என்பது கேட்டறிதல் என பொருள் கொள்ளப்படும்.
மேலும் பொறியாற்றேர்தல், புலனாலறிதல், வினாதல் என்பது பிணியுற்றோனிடத்தும், பிணி தீர்ப்போனிடத்தும் உள்ள பொறி, புலன்கள் பிணிகளைத் தெளிவாய் உணர்த்துமாகையால், மருத்துவன் தன்னை நோக்கி வந்த பிணியுற்றவனைப் பற்றி அறிய வேண்டியவற்றை அறிந்தும்; தன் பொறி, புலன்களால் பிணியாளனுடைய பொறி, புலன் வழியாய் உணர்வதைக் கேட்டும்; அவன் ஒருக்கால் எக்காரணத்தினாலோ தான் கேட்பதைச் சொல்லுவதற்கு இயலாதவனாயிருப்பின் அவன் சுற்றத்தாரைக் கொண்டு அறியக்கூடியவரை அறிந்தும்; பிணியைக் கணித்தலைப் பற்றியே குறிக்கும்.
எண் வகைத் தேர்வுகளாவன :
முற்கூறியபடி பிணியை அறியும்வழி, மருத்துவநூல் வல்லோர்களால் எண்வகையாய் வகுக்கப்பட்டுள்ளது.
'' நாடிப்பரிசம் நாநிறம் மொழிவிழி
மலம் மூத்திரமிவை மருத்துவராயுதம் ''
என்பதனாலும்,
'' மெய்க்குறி நிறந்தொனி விழிநாவிருமலம் கைக்குறி ''
என்னும் தேரையர் வாக்கினாலும் அறிய முடியும்.
அவை நாடி, ஸ்பரிசம், நா, நிறம், மொழி, விழி, மலம், மூத்திரம் என்பனவையாகும்.
இருமலம் :
மருத்துவன் பிணியாளனது கழிவுப் பொருள்களை ஈ, எறும்பு முதலியவற்றை கொண்டு அறியலாம்.
விழி :
மருத்துவன் தன் கண்களால் நோயாளியின் பொறிகளாகிய மூக்கு, நா ( வாய் ), கண், தோல் ( மெய் ), செவி மற்றும் சில அவயவங்கள் ஆகியவற்றின் இலக்கணங்களையும், கழிவுப் பொருள்களின் தன்மைகளையும் அறிதல் வேண்டும்.
எவ்வாறு அறியலாம் என்பதன் விளக்கம் வருமாறு :
- மலம் :- இதன் நிறம், நுரை, இறுகல், இளகல்
- நீர் :- இதன் நிறம், எடை, மணம், நுரை, எஞ்சல்
- சுக்கிலம் :- இதன் நிறம், இளகலாகிய தன்மை
- கண் :- இதில் காணும், நிறம், ஒளி, சாறும்பீளை, வழியும் நீர்
- காது :- இதில் கழியும் குறும்பி அழுக்கு, மலினநீர், சீ, இரத்தம்
- மூக்கு :- இதில் வெளிப்படும் சளி, குருதி, அழுக்கு, மற்றும் மலினங்கள்
- நா ( வாய் ) :- இதில் சுரக்கும் எச்சில், நிறம், வாயின் வழியாய் வெளிப்படும் கோழையின் நிறம், கனம், பேச்சின் தன்மை
- மெய் :- இதில் வடியும் வியர்வை, நிறம், தன்மை
- மயிர் :- நிறம், வளர்ச்சி, வெட்டு, வெடிப்பு, உதிர்ப்பு
- நகம் :- நிறம், கீற்று, வெடிப்பு, வளர்ச்சி, வழவழப்பு, மினுமினுப்பு
- உதடு :- நிறம், உருவம், வெடிப்பு
- நெற்றி :- நிறம், ஒளி, சுருங்கல்
- பல் :- நிறம், உடைச்சல், ஒளி படிந்துள்ள மாசு, சொத்தை, தேய்வு
- புருவம் :- ஏற்றம், இறக்கம்
- அண்ணம் :- நிறம், மற்றைய நிலைமை ( கிரந்திப் புண் உண்டாய் அழுகிக் குடைந்து நாசித் துவாரம் வரை தசை எடுபட்டிருத்தல் ) ஆகிய பண்புகளை கொண்டும் அறியலாம்.
மெய் ( தோல் ) :
மருத்துவன், நாடியைக் குறிக்கும் தாதுவின் இயக்க நிலைமையையும், தட்ப வெப்பங்களையும், மற்றுமுள்ள இதர உறுப்புகளின் தன்மையையும் தொட்டேனும், தடவியேனும், ஊன்றியேனும், விரலால் அழுத்தியேனும், அளந்தேனும் தெரிந்துகொள்ளுதல் வேண்டும்.
செவி :
மருத்துவன், தன் காதால் சுவாசசயம், இருதயம் போன்ற உறுப்புகளின் நிலைமையையும் பேச்சின் ஒலிக்குறிப்பையும் உணர்ந்துகொள்ளுதல் வேண்டும்.
சரிதை :
நோயாளியின் குடும்ப வரலாறு, அவனுடைய வயது, உடல் வன்மை, மனவுறுதி, பண்பு, செரிப்புத் தன்மை, இயற்கை, உணவு, தொழில், வாழுமிடம், அவ்விடத்தின் தன்மை, நோயின் வயது, நோய் தோன்றிய காலம், இடம், நோய் உண்டாவதற்கு முன் நோயாளியின் நிலைமை முதலியவற்றையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுதல் மருத்துவனது கடமையாகும்.
மேலும் நோயுற்றோன் பொருள்களின் மணத்தையும், பொருள்களைத் தொட்டும், தடவியும், அழுத்தியும், உணரும் அவனுடைய உணர்ச்சி எந்நிலையிலுள்ளது என்பதையும், தான் கேட்ட ஒலியைப் பிறருக்கு இயற்கையாய்த் தெரிவிக்கின்றானா, அன்றி வேறு வகையில் தெரிவிக்கின்றானா என்பதையும், அறிந்து கொள்ள வேண்டுவது மருத்துவனுக்கு இன்றியமையாததாகும்.
மலக்குறி :
மலத்தால் முக்குற்றமறிதல் ( வையித்திய சிந்தாமணி ) :
- கருத்த நிறமுள்ளதும், சிக்கலுள்ளதும், வாத நோய்க்குள்ள மலமாம்.
- சிறுத்தும், வெம்மையாயும், சிவந்தும், மஞ்சள் நிறமாயும் உள்ளவை பித்த நோய்க்குள்ள மலமாம்.
- சீதமாகவும், வெண்மையாகவும் உள்ளன சீதள நோய்க்குள்ள மலமாம்.
- எல்லா நிறங்களும் கலந்தன கலப்பு ( தொந்த ) நோய் மலமாம்.
மலப் பரிசோதனை ( தேரையர் யமகம் ) :
- மலமானது மஞ்சள் நிறமானால் வாதசேட்ப சுரம் அல்லது சுத்த வாத சுரம் என்றும்,
- மலமானது சங்கினது நிறமானால் பயித்தியம் அல்லது குன்மம் என்றும்,
- மலமானது முல்லைப் பூ நிறமானால், செவிப் புண் என்றும்,
- மலமானது மின்னலைப் பளபளப்பாயிருந்தால் நாட்பட்ட கொடிய ரோகம் என்றும்,
- மலமானது வாளினது உறையைப் போல உள்ளே குழலாக மேலே புன்மை நிறத்துடனே குழையாகக் கூராகிக் கீழே தொங்கிக்கொண்டு மலம் விழுமேயானால், அது சேட்ப தொந்தரோகமென்றும், கூறப்பட்டிருக்கின்றன.
மலக்குறியால் சாதல், சாவாமையறிதல் :
சாதல் குறி :
மலம் வெள்ளாட்டுப் புழுக்கையைப் பார்க்கிலும் உலர்ந்து கொட்டிப்பட்டு வறண்டிருக்குமானாலும், பிணவெடி நாற்றம் சார்ந்திருந்தாலும், அப்படி மலம் போகும் நோயாளி இறந்து போவான்.
சாவாமை :
- மலமானது கொஞ்சம் பக்குவமான குழம்பு போன்றும், இலைச் சாறு போன்றும், இருக்குமானால் நன்மை பயப்பதாகும்.
- கடினமும் தளர்ச்சியுமில்லாத செம்பாகமாய் இருக்குமானால் நன்மை பயக்கும். இதுவே திடமாம்.
- முன் மலத்தைப் பார்க்கிலும் மிகவும் செம்பையொத்த சிவந்த நிறமாயிருக்குமானால், நல்ல நடுத்தரமான மலமென்று அறியலாம்.

Comments
Post a Comment