மனமறியாத ரகசியங்கள்..!! (பகுதி-2)


(மனோமய கோசம்)
இதுவரை நம் மனம் அறிய முடியாத பல அபூர்வ ரகசியங்களை கடந்த பதிவில் அன்னமய, பிராணமய கோசங்கள் பற்றி பார்த்தோம். இதன் தொடர்ச்சியாக இந்த பதிவில் மனோமய கோசம் பற்றிய ஆழமான ரகசியங்களை பார்ப்போம்...
💠 (3) மனோமய கோசம் (Mental body)
ஐம்புலன்களுடன் மனம் என்ற மேலும் ஒரு கருவியுடன் கூடிய உடம்பு மனோமய கோசம். எண்ணங்களை உற்பத்தி செய்வது இந்த உடம்பே! உலகப் பொருள்களில் ஆசையைத் தூண்டி பாவ புண்ணியங்களைச் செய்ய வைத்து மீண்டும் பிறவியில் வந்து விழுவதற்குக் காரணம் இந்த மனமாகிய உடம்பே. இந்த மனம் அழிந்தால் எல்லாம் அழியும்.
பிறவிக்குக் காரணமாயும், பிறவியிலிருந்து விடுபடக் காரணமாயும், இருப்பது இந்த மனமே.
இந்த மனம் ராஜஸம், தாமஸம் என்னும் குணங்களால் அழுக்கு அடையும். சத்துவ குணத்தால் தூய்மை அடையும்.
(1) ராஜஸம்-எழுச்சி,
(2) தாமஸம்-மயல்(மயக்கம்),
(3) ஸாத்வீகம்-நன்மை(அமைதி).
புத்தி, அகங்காரம், மனம் மற்றும் சித்தம் என்ற நான்கு வகைபட்ட எண்ணங்களை கொண்ட நமது மனம் மனோமயகோசத்தை சேர்ந்தது. பிராணமயகோசத்தை சேர்ந்த புலன்களையும் கரணங்களையும் நேரடியாக கட்டுபடுத்துவது மனோமயகோசம் ஆகும்.
உணர்ச்சிகள், உணர்ச்சிகளுக்கு ஆதாரமான மனம், அதன் பல்வேறு அடுக்குகள், செயல்பாடுகள் ஆகியவை மனோமய கோசம் எனப்படும். மனித உணர்வுகளுக்கு அடிப்படை ஆதாரமாக விளங்குவது, மனம். அந்த மனதின் பல்வேறு அடுக்குகள், அவற்றின் செயல்பாடுகள் ஆகியவையே "மனோமய கோசம்" என்று வகைப்படுத்தப்படுகின்றது.
மனோமய கோசமானது மன எண்ணங்களால் உருவாவது. தர்மசாஸ்திரம் "மனநலனுக்கு" முக்கியத்துவம் தருகிறது. மனிதன் எதுவாக நினைக்கிறானோ அதுவாகிறான் என்கிறது நூல்கள். விஞ்ஞானமும் இதைதான் கூறுகிறது.
மனதோடு மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் பஞ்சஞானேந்திரியங்களும் சேர்ந்து சப்தம் முதலான விஷயசங்கல்ப தர்மங்களைச் செய்யும் போது மனோமய கோசம் என வழங்கப்படும். இதன் விருப்பம் - சங்கற்பம் முதலான தர்மங்களாகும். ஆத்மா என்னும் சச்சிதானந்தம் மனோமய கோசத்திலும் சேர்ந்திருப்பதால் இந்த மனோமய கோசத்திற்கும் ஆத்மாவிற்கும் சேர்க்கை உண்டாகிறது.
இது பிராணமய கோசத்திற்கு வேராக இருந்து, காமக்குரோதம் முதலான வியாபாரங்களை உண்டாக்கி, நான் எனது என்னும் விகாரங்களை உடையதாக விளங்கி இந்த பிரபஞ்சத்தில் பிறந்து இறந்து கணக்கில்லாமல் உழன்று கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள்.
சூட்சும திருஷ்டியினால் பார்க்கும் போது தேகம் வேறு தான் வேறாக காணுவீர்கள்! ஆகவே மனிதர்கள் தேகமே உண்மையென நம்பி காமாதி தச வர்க்கங்களை விருத்தி செய்து சிக்கி கொள்கிறார்கள்.
காமாதி தச வர்க்கமென்பன,
காமம் - குரோதம் - லோபம் - மோகம் - மத - மச்சர - டம்பம் - தர்ப்பம் - ஈர்ஷை - அசூயை !ஆகும். இதில் சிக்கி இதனால் துயரமடைந்தவரைகளை பற்றி மிக சுருக்கமாக பார்ப்போம்..!!
விரிவாக கான வேண்டின் - கிருஷ்ணார்ஜுன சம்ஹார ரூபமாய் எழுதிய பகவத்கீதை அத்தியாயம் -3 சுலோகம் 40 ,அ -6 சு 7,36., அ 16 சு 13 to 16 வரையில் பகவான் சொல்கிறார். கண்டறிந்து படிக்கவும்...
(1) காமமென்பது -
காமம் என்பது ஆசை. பணம், புத்திரர்களின் பேரில் அதிகமாக ஆசை வைத்தல்.
நாம் எந்தப்பொருள் மீதும் ஆசை வைத்தால், அந்தப் பொருளின் நினைவாகவே ஆகிவிடுகின்றோம். நம் உள்ளத்தில் எந்த நேரமும், அந்தப் பொருள் மீதே ஞாபகமாக இருப்போம். அதை அடைவதற்கு முயற்சி செய்வதும், அலைவதுமாக இருப்போம். அந்தப் பொருள் கிடைத்து விட்டால், மனதில் சந்தோசம் உண்டாகும். இல்லையென்றால் மனதில் சதா வேதனை ஏற்படும். இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. இதனால் தான், ஆசைக்கு அடிமை ஆகாதே என்கிறார்கள்.
இந்த குணத்துக்கு சிறந்த எடுத்துகாட்டாக, இதனால் துயரம் அடைந்தவர், நரகாசுரன் முதலியோர்..! இவர் தன்னுடைய பெற்றோர்களால் தான் மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரம் வாங்கியதாகவும், அதன் காரணமாக திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் பூமாதேவி சத்தியபாமாவாக பிறந்து நரகாசுரனை கொன்றதாகவும் நம்பிக்கை.
(2) குரோதமென்பது -
ஒருவருக்கு கெடுதி பிரயத்தனம் செய்ய ஆசை கொள்ளல் – அதாவது அடுத்தவனுக்கு கெடுதி செய்ய நினைத்தல்.
முன் பின் பாராமல், தாய், தந்தையர், சகோதரர்கள், உறவினர்கள் என்றும் சிந்திக்காமல், கொடூரமாகப் பேசுவதும், கேவலமான நிலைக்கு ஆளாக்குவதும் நேர்கின்றன. சிலர் கோபத்தில் கொலை கூடச் செய்துவிட்டு ஆயுள் முழுவதும் துன்பம் அனுபவிப்பார்கள். கோபத்தைப்போல் கொடியது உலகத்தில் வேறு எதுவும் இல்லை. கோபத்தால் அழிந்தவர்கள் கோடான கோடிப்பேர். கோபம் எழும் பொழுது நம் உடலில் உள்ள எத்தனையோ ஜீவ அணுக்கள் செத்து மடிகின்றன. நம் ஆயுளும் குறைந்து விடுகிறது. கோபத்தால் உணர்ச்சி வசப்பட்டவர்கள் எதையுமே செய்யத் துணிவார்கள். இவர்களால் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. இதனால் தான் கோபத்திற்கு அடிமை ஆகாதே என்கிறார்கள்.
இந்த பகாசுரன் மகாபாரதத்தின் உப கதை ஒன்றின் நாயகன். ஏகசக்கரம் என்ற கிராமத்தை அடுத்த காட்டில் வசித்து வந்த அரக்கன். பிறரை துன்புறுத்தி தன் தேவையை பூர்த்தி செய்பவன். இந்த குணத்துக்கு சிறந்த எடுத்துகாட்டாக, இதனால் துயரமடைந்தவர் பகாசுரன் முதலியோர்..!
(3) லோபமென்பது -
தனது சொத்திலிருந்து சல்லி பைசா கூட அடுத்தவனுக்கு கொடுத்து விட கூடாது என்று எண்ணம் இருத்தல்..! லோபம் என்பது சுயநலம். பிறரைப் பற்றிச் சிந்திக்காமலும், இரக்கம் என்பதே இல்லாமலும், சுயநலத்துடன் பொருள்களைச் சேர்த்து வைத்து அழகு பார்ப்பதும், கஞ்சத்தனமும், எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமும், தீய வழியில் பொருள்களைச் சம்பாதிக்கக் கூடிய நோக்கமும், வஞ்சனை செய்து, பிறர் பொருளை அபகரித்துத் தானே வாழ நினைக்கும் குணமும், எப்பொழுதும் தன் பொருள்களைப் பற்றுடன் பாதுகாப்பதும் எல்லாம் சுயநலமே.
இப்படிப் பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. அதனால் தான் சுயநலத்திற்கு அடிமை ஆகாதே என்கிறார்கள். இந்த குணத்துக்கு சிறந்த எடுத்துகாட்டாக, துரியோதனன் மகாபாரதம் கதையின் முக்கியமான பாத்திரமாவான்,
இதனால் துயரமடைந்தவர் துரியோதனன் முதலியோர்..!
(4) மோஹமென்பது -
ஒரு பொருளின் மீது ஆசை கொள்ளுதல், புத்திர களாத்திரர்கள் மீது அதீத ஆசை வைத்து தனக்கு உண்டாகி இருக்கும் பொருள் போதாது என்றும், இன்னும் கொஞ்சம் அதிகமாய் சம்பாதிக்க வேண்டும் என்றும், ஆசையை விருத்தி செய்து கொள்ளுதல்..!
இந்த குணத்துக்கு சிறந்த எடுத்துகாட்டாக, தசரதன், கோசல நாட்டு மன்னர் முதலில் தசரதன் - கோசலை தம்பதியருக்கு சாந்தா எனும் மகள் பிறந்தாள். சாந்தாவை அந்தநாட்டு மன்னருக்கு தத்து கொடுத்தார் தசரதன். பின்னர் சாந்தாவின் கணவரும், முனிவருமான ரிஷ்யசிருங்கர் நடத்திய புத்திர வேள்வியின் மூலம் தசரதனுக்கு - கோசலை, சுமித்திரை மற்றும் கைகேயி எனும் மூன்று மனைவியருக்கு, முறையே இராமர், பரதன், இலக்குவனன் மற்றும் சத்துருக்கனன் எனும் நான்கு குழந்தைகள் பிறந்தன. கைகேயி தசரதனிடம் பெற்ற வரத்தால், 14 ஆண்டுகள் இராமன் காட்டில் தவவாழ்வு மேற்கொள்வதை காணச்சகிக்க சக்தியில்லாத தசரதன் புத்திர சோகத்தால் உயிர்நீத்தான். இப்புத்திர சோகத்தால் துயரமடைந்தவர் தசரதமகாராஜன் முதலியோர்..!
(5) மதமென்பது -
பணம் பொருள் சேர்வதனால் இதரர்களை லட்சியம் செய்யாமல் பேசுவது, மதம் என்பது கர்வம் (ஆணவம்). ஒருவரையும் மதிக்காத மமதையோடு இருக்கும் நிலை.
எதையும் தான் ஒருவரால் மட்டுமே சாதிக்க முடியும் என்ற கர்வம் கொள்ளச் செய்யும். தான் என்னும் அகந்தையால் திமிர் பிடித்து அலைவதும் உண்டு. ஆணவ வெறியால் யாவரையும் துன்பப்படுத்தித் தான் மகிழ்ச்சி அடைவதும் உண்டு. இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. இதனால் தான் கர்வத்திற்கு அடிமை ஆகாதே என்கிறார்கள்.
கார்த்தவீரியார்ச்சுனன் சூரிய வம்சத்தில் பிறந்தவனாகிய கேகய நாட்டு மன்னன் திருதவீரியனின் மகன். பன்னிரண்டு வயதுக்குமேல், தாத்தாத்ரேயரிடம் ஞான உபதேசம் பெற்றுப் பலசாலியாக நாட்டை ஆண்டு வந்தான்.
ஒரு முறை இராவணனை சிறை பிடித்தான். இராவனனையே சிறை பிடித்த காரணத்தால் ஆணவம் மிகுதியானது. கார்த்தவீரியார்ச்சுனன் ஒருமுறை காட்டுக்கு வேட்டையாடச் சென்றபோது, அவனுக்கும் அவனது படையினருக்கும் கடும் பசி உண்டானது. அப்போது, ஜமதக்னி முனிவர், தன்னிடமிருந்த காமதேனு என்னும் தேவ பசுவின் உதவியால் அவர்கள் அனைவர்க்கும் அறுசுவை உணவளித்தார். மன்னன் என்ற திமிர் படைத்த கார்த்தவீரியார்ச்சுனன், "காட்டில் வாழும் முனிவருக்குக் காமதேனு தேவையில்லை. ஆகவே, அதை எனக்கே கொடுங்கள்" என்று கேட்டான். முனிவர் மறுக்கவே, மன்னன் அந்தத் தேவ பசுவைப் பலவந்தமாகத் தன் நாட்டுக்குப் பிடித்துச் சென்றான். இந்த குணத்துக்கு சிறந்த எடுத்துகாட்டாக இதனால் துயரமடைந்தவர் -
கார்த்தவீரியார்சுனன் முதலியோர்..!
(6) மாற்சரியமென்பது -
தன்னை போல பிறரும் சுகம் அனுபவிப்பது பார்த்து சகிக்க முடியாமை, மாற்சரியம் என்பது பொறாமை. பிறர் வாழ்வதைக் கண்டு பொறுக்க முடியாமல் வேதனைப்படுவது, எந்த நேரமும் நாம் நல்லபடியாக இல்லையே என்று தன்னையே நொந்து கொள்வது, எல்லாரும் சுகமாக இருக்கின்றார்களே, இவர்கள் எப்பொழுது கஷ்டப் படுவார்கள் என்று எண்ணுவது. இவை அனைத்தும் மாற்சரியம். தான் மட்டும் சுகமாக இருக்கவேண்டும் என்பதே இவர்கள் எண்ணம். பிறரைப் பார்க்கும் பொழுது தீய எண்ணங்களுடன் பெருமூச்சு விடுவார்கள். தாழ்வு மனப்பான்மையோடு, யாரைப் பார்த்தாலும் சகிக்க முடியாமல் எரிச்சலோடு இருப்பார்கள். இப்படிப் பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. இதனால் தான் பொறாமைக்கு அடிமை ஆகாதே என்கிறார்கள்.
இந்த குணத்துக்கு சிறந்த எடுத்துகாட்டாக, சிசுபாலன் பிறக்கும் பொழுதே நான்கு கைகளையும் மூன்று கண்களையும் உடையனாயிருந்தான். அப்பொழுது அனைவரும் இது என்னவென்று வியக்கும்போது ஆகாயவாணியார், யார் இவனைத் தொடுகையில் இவனது கைகளிரண்டும் மூன்றாம் விழியும் மறையுமோ, அவனால் இவனுக்கு மரணம் என்று கூறிற்று. கண்ணும் கண்ணபிரான் தொட்டதும் மறைந்தன. அதனால் "இவனைக் கொல்பவன் கண்ணனே" என்றறிந்த சிசுபாலனின் தாய், யாது செய்யினும் என் மகனைக் கொல்லலாகாது என்று கண்ணனை வேண்ட, அந்த அத்தையின் நன்மொழிக்கு இணங்கிய கண்ணன் "இவன் எனக்கு நூறு பிழைசெய்யுமளவும் இவன் பிழையை நான் பொறுப்பேன்" என்று கூறியருளினன். பின்பு சிசுபாலன், தனக்குக் கண்ணன் எதிரி என்பதை இளமையிலேயே அறிந்து பகைமையைப் பாராட்டி, எப்பொழும் கண்ணனை நிந்திப்பதே தொழிலாக இருந்தான். இவனுக்கு மணஞ்செய்து கொடுப்பதென்று நிச்சயித்து வைத்திருந்த ருக்மிணியைக் கண்ணன் வலியக் கவர்ந்து மணஞ்செய்துகொண்டது முதல் இவன் கண்ணனிடத்து மிக்க பகைமை கொண்டனன்.
சிசுபாலனின் அவமானங்களை பொறுத்துக்கொண்டிருந்த கண்ணன் ஒரு கட்டத்தில் அவனின் மரணம் நெருங்கி வருவதை உணர்ந்து அவன் மீது சக்கராயுதத்தை செலுத்தினார். அது சிசுபாலனின் தலையை உடலிலிருந்து அறுத்தெறிந்தது சகியாமை விளைவிக்கும் சித்தவிருத்தியை உண்டாக்குதல். இக்குணத்தால் துயரமடைந்தவர் சிசுபால தந்தவக்கிரன் முதலியோர்..!
(7) டம்பமென்பது -
பலர் மெச்ச வேண்டும் எனபதற்காகவே தானம் தர்மம் யாகம் செய்தல். வீண் தற்பெருமை, எதை செய்தாலும் ஆடம்பரமாய் செய்வது பிறர் மதிக்க வேண்டும் என்பதற்கா,
இதனால் துயரமடைந்தவர் புரூர சக்கரவர்த்தி (மகாபலிசக்ரவர்த்தி) டம்பம் (வீண் பெருமை): அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது. இப்படிப் பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. இதனால் தான் வீண் பெருமைக்கு அடிமை ஆகாதே என்கிறார்கள்.
இந்த குணத்துக்கு சிறந்த எடுத்துகாட்டாக, மகாபலி சக்கரவர்த்தி புராணங்களில் குறிப்பிடப்படும் ஒரு அரக்க அரசன், மகாபலியின் ஆட்சி அதன் உச்சத்தில் இருந்த போது இந்தியா நெடுகிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக, அப்பேரரசர் ஒரு ராஜசூர்ய யாகத்தை நடத்தினார். இந்தியாவின் அனைத்து பழங்குடி இனங்களையும் சாம்ராஜ்யங்களையும் அரசர்கள், குழுத்தலைவர்கள், ராசாக்கள், மகாராசாக்கள், ஆகியோர், அரசர்களுக்கெல்லாம் பேரரசரான மகாபலிக்கு சிறப்பு மரியாதை செலுத்துவதற்காக, முசிறியில் குழுமினர். சடங்கின் ஒரு பகுதியாக, தன்னிடம் யார் எதை கேட்டாலும் அவருக்கு அதை கொடுப்பதாகப் பேரரசர் மகாபலி அறிவித்தார். தனக்கு மூன்றடி நிலம் வேண்டும் என்று கேட்டு, ஓர் ஏழை பிராமணனாக மாறுவேடம் அணிந்து வாமான விஷ்ணு அங்கு வந்தான். தான் கொடுத்த வாக்கிலிருந்து பின்வாங்க விரும்பாத மகாபலி, அசுரத்தலைநகரில் தேவ பிராமணர்கள் தங்களது மதத்தை போதிப்பதற்கு அனுமதி கொடுத்தார். திருமால் ஓரடியால் மண்ணுலத்தை அளந்தார். இன்னொரு அடியால் விண்ணுலகத்தை அளந்தார். மூன்றாவது அடிக்கு மகாபலியை நோக்கி, "மகாபலி, நீ தாரை வார்த்துக் கொடுத்ததில் இது வரை இரண்டு அடிகள் மட்டுமே கிடைத்துள்ளன, மூன்றாவது அடிக்கு வழி சொல்வாயாக" என்றார். மகாபலி செய்வதறியாது திகைத்தான். தன்னுடைய செருக்கினை உணர்ந்தான். எனவே மகாபலி இறைவனை நோக்கி, "சுவாமி நான் என் செருக்கினை உணர்ந்து கொண்டேன் என் வாக்கு பொய்யாகி விடக்கூடாது. எனவே தாங்கள் தயவு செய்து என் சிரசினை மூன்றாவது அடியாகக் கருதி எனக்கு அருள் புரிய வேண்டும்" என்று மண்டியிட்டு வணங்கினான். வாமனரும் மகாபலி மீது இரக்கம் கொண்டு அவனது திருமுடி மீது தன் திருவடியைப் பதித்து அருள்புரிந்தார்.
(😎 தர்பமென்பது -
புத்திர, மித்திர களத்திர, தனதன்யாதி சம்பத்துக்களில் தனக்கு நிகரானவர்கள் யாருமில்லை என்கிற கர்வம். கர்வம் என்ற பாவம் அணு அளவேனும் நம்மில் வந்து விடாமல் காத்து கொள்வதே நமக்கு ஈடேற்றத்தைப் பெற்றுத் தரும். பிறரை மதிக்காமல் தன்னைப் பற்றி உயர்வாக எண்ணும் போக்கு- கர்வம் நானே செல்வத்தில் பெரியவன் எனக்கு நிகர் யாருமில்லை என எண்ணுதல்; ஐஸ்வர்யத்தால் கர்வித்து ராவணன் தேவர்களை உபத்ரவம் செய்ய அதை நாரத முனிவர் ராமனுக்கு அறிவிக்க சீதையால் நாசமடைந்தான். இப்படிப் பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. இதனால் தான் வீண் கர்வத்துக்கு அடிமை ஆகாதே என்கிறார்கள்.
இந்த குணத்துக்கு சிறந்த எடுத்துகாட்டாக,
பரசுராமர் அல்லது பரசுராம பார்கவர் என்பவர் இந்து புராணங்களில் விஷ்ணுவின் ஆறாவது அவதாரம் ஆவார். இவரது காலம் திரேத யுகம் ஆகும். இவர் ஜமதக்கினி - ரேணுகா இணையரின் மகன் ஆவார். பரசு என்றால் கோடாரி என்று பொருள். இவர் கடுந்தவம் செய்து சிவ பெருமானிடம் இருந்து ஒரு கோடாலியைப் பெற்றார்.
அதனால் இவர் பரசு-ராமர் என்று அழைக்கப்படுகிறார்.
பரசுராமன் இராமனை நோக்கி "இராமா, நீ ஒடித்த வில் ஊனமுற்ற வில். அது முன்னமே சிவனுக்கும் விஷ்ணுவுக்கு ஏற்பட்ட போரில் முறிந்து போன ஒன்று. அதை நீ முறித்ததெல்லாம் பெரிய வீரத்தில் சேர்த்தியில்லை என்று முழங்குகிறான் (ஒருவரால் முடியாத ஒரு காரியத்தை வேறொருவர் வெற்றிகரமாக முடித்து விட்டால், அந்த ஒருவர் அந்த வெற்றியை, வெற்றிச் செயலையும் எப்படி இழித்தும் பழித்தும் கூறுவாரோ அப்படியே பேசுகிறான் பரசுராமனும். அவனுக்கு ஆணவம் அழியவில்லையே, அதுதான் காரணம்)
அப்போரில் வெற்றிபெற்ற விஷ்ணுவின் வில் இதோ இருக்கிறது. இதை உன்னால் வளைக்க முடியுமா?” என்று சவால் விடுகிறான். நீ ஆற்றல் உள்ளவன் என்றால் உன்னோடு போர் செய்வேன். அதற்கு முன்னால், உன்னால் முடிந்தால் முதலில் இந்த வில்லை வளைத்துப் பார்” என்கிறான் பரசுராமன். ராமன் முகத்தில் எழுந்தன சிரிப்பு, செருக்கோடும் தவ வேகத்தோடும் கோபவெறியோடும் தோன்றிய பரசுராமன், தன் கையிலிருந்த விஷ்ணு தனுசை இராமன் கையில் கொடுக்க. இராமன் அதை வாங்கிச் சும்மா அநாயசமாக வளைப்பது கண்டு பரசுராமன் அப்படியே திகைத்துப் போய் நின்று விடுகிறான். ஆச்சர்யமும் நடுக்கமும் கொள்கிறான்.
"நாம நினைச்சது மாதிரி சாதாரண ஆள் இல்லையோ, உண்மையிலேயே விஷயம் உள்ளவன் தானோ" என எண்ணி, தனக்குள் வெட்கி, தலையைக் கவிழ்ந்து கொள்கிறான்.
ரிஷி புத்திரனாகிய நீ தவ வேஷத்தோடு விரதம் பூண்டிருக்கிறாய். இனியாவது நீ கொலைத் தொழில் விட்டு நல்வழிப்படுதல் கூடுமென்று நினைக்கிறேன். ஆகையால் உன்னை நான் கொல்லப் போவதில்லை. இந்த வில்லில் தொடுத்த அம்பு வீண் போவதன்று. எனவே இதற்கு இலக்கு யாது? விரைவாகச் சொல்” என்றான்.
பரசுராமன் எப்போது இராமன் அநாயசமாக நாணேற்றினானோ அப்போதே பரசுராமனின் கர்வம் அழிந்து விட்டது. ஆணவம் அகன்று விட்டது. இராமன் ஓர் அவதாரம் என்கிற உண்மையையும் உணர்ந்து விட்டான். இதனால் துயரமடைந்தவர் பரசுராமன் முதலியோர்..!
(9) ஈர்ஷைமென்பது -
தனக்கு நேர்ந்த துன்பம் அடுத்தவனுக்கும் நேர வேண்டும் என எண்ணுதல்.
அருணாக்ஷதன் தனக்கு வந்த துன்பம் தன்னிஷ்டனான வரணாசுரனுக்கு வரட்டும் என்று நினைத்ததால் தான் நாசமடைந்தான். பிறர் துன்பமடைய தான் அத்துன்பத்தை அடைய கூடாது என எண்ணுதல். இந்த குணத்துக்கு சிறந்த எடுத்துகாட்டாக, இதனால் துயரமடைந்தவர் அருணாக்ஷதன் போன்றோர்..!
(10) அசூயை என்பது -
கெடுதி செய்தவனுக்கு கெடுதி செய்ய வேண்டும் என எண்ணுதல் இதனால் துயரமுற்றவர் பவுண்ரீக வாசுதேவன் முதலியோர் – இந்த தீய குணத்தால் கெட்டோழிந்தவர் அநேகர்..!
மேலும், இந்த மனதால் ஏற்படும் அவஸ்தைகள் உண்டு அதையும் தெரிந்து கொள்வோம்.
ஜாக்ரதை - சொப்பன - சுஷிப்தி - துரீயா
அவஸ்தைகள் என்றால் என்ன ?
(1) சாக்கிரத்தில் சாக்கிரம் - சாக்கிரத்தில் சொப்பனம் - சாக்கிரத்தில் சுஷிப்தி - சாக்கிரத்தில் துரீயம்,
(2) சொப்பனத்தில் சாக்கிரம் - சொப்பனத்தில் சொப்பனம் - சொப்பனத்தில் சுஷிப்தி - சொப்பனத்தில் துரீயம்.
(3) சுஷிப்தியில் சாக்கிரம் - சுஷிப்தியில் சொப்பனம் - சுஷிப்தியில் சுஷிப்தி - சுஷிப்தியில் துரீயம்.
(4) துரீயத்தில் சாக்கிரம் - துரீயத்தில் சொப்பனம் -துரீயத்தில் சுஷிப்தி - துரீயத்தில் துரீயம் என ஒவ்வொன்றுக்கும் நந்நான்கு அவஸ்தைகள் உண்டு.
(1) சாக்கிரம் - நனவு,
(2) சொப்பனம் - கனவு,
(3) சுழுத்தி(ஸுஷுப்தி) - உறக்கம்,
(4) துரியம் - பேருறக்கம்(நிட்டை),
(5) துரியாதீதம் - உயிர்ப்படக்கம்,
ஜாக்ரதை - சொப்பன -சுஷிப்தி- துரீயா அவஸ்தைகள் என்றால் என்ன ?
சாக்கிரத்தில் சாக்கிரம் - சாக்கிரத்தில் சொப்பனம் - சாக்கிரத்தில் சுஷிப்தி - சாக்கிரத்தில் துரீயம்.
(1.A) சாக்கிரத்தில் சாக்கிரம்:-
வார்த்தைகளை கேட்கும் போதாகிலும், அல்லது வேதாந்த சிரவணம் செய்யும் போதாகிலும் மனதை வெளி விவகாரங்களில் போக விடாமல் நிறுத்தி, சொல்லும் சொற்களை சிரத்தையுடன் கேட்டு மறக்காமல் இருப்பது.
(1.B) சாக்கிரத்தில் சொப்பனம்:-
தான் கேட்கும் வேதாந்த விஷயங்களை சரியாய் கவனித்து கேட்காமல் பராமரிக்கையாய் கேட்பதனால், அவ்விஷயங்களில் சிலவற்றை மாத்திரம் ஞாபகத்தில் வைத்தும், சிலவற்றை மறந்தும் போவதனால், இதரர்களுக்கு சரியாய் சொல்லத்தெரியாமல் இருப்பது. இவ்வாறு உண்டாவதற்கு காரணம் என்னவென்றால் - சொல்லும் விஷயங்களை மனம் சில நேரம் கேட்கும். இவ்வாறு கேட்டுக் கொண்டே இருக்கும் சமயத்தில் மனம் வெளி விஷயங்களை நினைத்து சில நேரம் ஓடும். மனம் இவ்விரண்டு வேலை செய்வதினால் கேட்கும் போது ஞாபகமுள்ள விஷயங்களை சொல்லும். மனம் சொற்களை கேட்காமல் இருந்த போது, சொன்ன விஷயங்களை சொல்ல தெரியாமல் மறந்தது போல் இருக்கும். இது ஒவ்வொருவருக்கும் ஏற்படும் அனுபவமேயாம்.
(1.C) சாக்கிரத்தில் சுஷுப்தி:-
வேதாந்தத்தை கேட்க வேண்டும் என்று உட்கார்ந்து, மனதை அவ்விஷயங்களில் நிறுத்தாமல் வேறு எண்ணங்களை எண்ணி கொண்டு இருப்பதனால், கேட்ட விஷயங்களை இதரர்களுக்கு சொல்ல ஞாபகமே இல்லாமற் போவது ஆகும்.
(1.D) சாக்கிரத்தில் துரீயம்:-
தத்துவ ஞானங்களை விசாரணை செய்து, ஏகாந்த ஸ்தலத்தில் உட்கார்ந்து தான் கேட்ட விஷயங்களை எல்லாம் ஆலோசித்து கொண்டிருத்தல் ஆகும்.
சொப்பனத்தில் சாக்கிரம் - சொப்பனத்தில் சொப்பனம் - சொப்பனத்தில் சுஷிப்தி - சொப்பனத்தில் துரீயம்
(2.A) சொப்பனத்தில் சாக்கிரம்:-
சொப்பனம் (கனவு) கனவு கண்டு எழுந்த பிறகு, தான் சொப்பனத்தில் (கனவில்) கண்ட விஷயங்கள் யாவற்றையும் மறவாமல் சொல்லுதல், ஏனென்றால் கனவில் மனம் எந்த இந்திரியங்களுடனும் சேர்ந்து எதையும் பார்க்கா விட்டாலும் தான் கனவில் கண்ட விஷயங்களை எல்லாம் காலையில் மனம் எல்லோரிடத்திலும் சொல்வதற்கு காரணம் சொல்கிறேன்.
நமது இருதய கமலத்தில் அந்தர்யாமியாயும், சாஷி மாத்திரனுமாய் இருக்கும் ஆத்மாவானது. இரவு கனவில் கண்ட விஷயங்களை எல்லாம் காலையில் எல்லோரிடத்திலும் சொல்ல மனதிற்கு ஞாபகத்தை உண்டாக்குகின்றது. ஆத்மாவானது சாஷிபூதம் என்று வேதங்களிலும், சாஸ்திரங்களிலும், பாடல்களிலும், பெரியோர்களாலும், சொல்லி இருப்பதற்கு இதுவே உண்மை என்று அறிவீர்களாக... இது ஒவ்வொன்றும் பிரத்தியஷ அனுபவமாதலால், இக்கனவின் ரகசியம் தெரிவித்தோம். மேலும் ஆத்மா சாஷிபூதன் என்பதற்கு இந்த உண்மை போதுமானது. இவ்வாறான ஆத்மாவை மாயை எனும் களிம்பு (அழுக்கு) மூடி கொண்டிருப்பதனால், ஜனங்கள் ஆசை எனும் அகப்பட்டு மதிமயங்கி, அழிந்து போகும் சரீரமும், வஸ்துக்களுக்கு உண்மை என்று நம்பி மோசம் அடைகிறார்கள். அவ்வாறு மோஷம் போன பொருளை மீட்க வேண்டும்.
(2.B) சொப்பனத்தில் சொப்பனம்:-
சொப்பனத்தில் கண்ட விஷயங்களில் மனம், சிலவற்றை கவனித்தும் சிலவற்றை கவனிக்காமலும் இருந்தபடியால், அவைகளில் ஞாபகத்திலும், சிலதும் ஞாபகத்தில் இல்லாமல் இருப்பது.
(2.C) சொப்பனத்தில் சுஷிப்தி:-
சொப்பனங்கண்டு எழுந்திருந்து சொப்பனத்தில் தான் கண்ட விஷயங்கள் பூர்த்தியாய் ஞாபகத்திற்கு வராமல் இருப்பது.
(2.D) சொப்பனத்தில் துரீயம்:-
தான் சொப்பனத்தில் கண்ட நன்மை, தீமைகளை விசாரித்து சந்தோஷ படாமலும், துக்க படாமலும் இவை எல்லாம் மனோவியாபாரமென நிச்சயித்து கொண்டு ஆத்ம ஞானத்தை விசாரித்திருப்பது ஆகும்.
சுஷிப்தியில் சாக்கிரம் - சுஷிப்தியில் சொப்பனம் - சுஷிப்தியில் சுஷிப்தி - சுஷிப்தியில் துரீயம்.
(3.A) சுஷிப்தியில் சாக்கிரம்:-
நித்திரையை (உறக்கத்திலிருந்து) விட்டு எழுந்து, அந்நித்திரையின் சுகம் இன்னதென்று இதரர்களுக்கு சொல்லுதல்.
(3.B) சுஷிப்தியில் சொப்பனம்:-
நித்திரை விட்டு எழுந்து நித்திரையின் சுகம் இவ்வகை தான் என தோன்றியும் தோன்றாமல் இருத்தல்.
(3.C) சுஷிப்தியில் சுஷிப்தி:-
நித்திரை விட்டு எழுந்து, நித்திரையில் தான் கண்டது சிறிதேனும் தோன்றாமல் இருத்தல்.
(3.D) சுஷிப்தியில் துரீயம்:-
நித்திரை விட்டு எழுந்து இந்த நித்திரை அவஸ்தை அக்ஞானவிஷயம். இதற்கு சாட்சியான ஆத்மாவே சத்தியம் என தெரிந்து கொள்ளல்.
துரீயத்தில் சாக்கிரம் - துரீயத்தில் சொப்பனம் - துரீயத்தில் சுஷிப்தி - துரீயத்தில் துரீயம்.
(4.A ) துரீயத்தில் சாக்கிரம்:-
நிஷ்டையில் இருக்கும் போது சாக்கிர வியாபாரங்களாகிய பிரபஞ்ச விருத்தி உண்டாவது.
(4.B) துரியத்தில் சொப்பனம்:-
நிஷ்டையில் இருக்கும் போது சாக்கிர வியாபாரங்களாகிய பிரபஞ்ச விருத்தி தோன்றியும் தோன்றாமலிருத்தல்.
(4.C) துரீயத்தில் சுஷிப்தி:-
நிஷ்டையில் எவ்வித சங்கல்பங்களும் (எண்ணங்களும்) இல்லாமல் இருத்தல்.
(4.D) துரீயத்தில் துரீயம்:-
மேற் சொல்லிய 15 அவஸ்த்தைகளும் இல்லாமல் இருந்து, அகண்ட பரிபூரண பரப்பிரம்மமே தான் என்றும், தன்னை தவிர வேறு ஒரு வஸ்து இல்லை என்றும் தெரிந்து கொண்டு தானாகவே இருத்தல்.
இப்பதினாராவது பாகமே எல்லாவற்றிக்கும் சிரேஷ்டமான ஸ்திதி என தெளிவாய் தெரிந்து கொண்டால் சர்வமும் பிரம்ம சொரூபமே என அறிந்து கொள்வார்கள்..!!
இந்த மனதுடன், செவிகள் தேகசர்மம், கண்கள், நா, மூக்கு என்னும் ஞானந்திரங்கள் ஐந்தும் சேர்ந்து, சப்த முதலாகிய விஷய சங்கல்ப விஷயங்களை செய்யும் போது மனோமய கோசம் ஆகிறது.
இந்த மனோமய கோசத்திற்கும் பரமாத்மாவிற்கும் சம்மந்தம் எப்படி உண்டாகிறதென்றால்?
நான் விகல்பம், துக்கம், மோகம், காமம், குரோதம், துவேஷம், இச்சை, ராஜ குணமுடையவன், எதையும் கிரகிக்க பட்டவன், செவிடன், நாக்கு மூக்கில்லாதவன், முதலாகிய மனோமய கோச சங்கல்பாதி தர்மங்கள், ஆத்மாவிலும் ஆத்மா எனும் சச்சிதானந்த மனோமய கோசத்தில கலப்பத்தால் அவ்வாறு தோன்றுகின்றன. ஆதலால் மனோமய கோசத்திற்கும் ஆத்மாவிற்கும் சேர்க்கை உண்டாயிற்று!!
சரி இந்த மனோமய கோசத்தையே ஆத்மா என்று சொல்லி விடலாமா ?
இந்த தேகத்தில் "நான்" என்னும் அஹங்காரம், எனது எனும் அபிமானம் உண்டாக்கி, இக்கோசம் பிராணமய கோசத்திற்கு வேறாக இருந்து காமகுரோதங்களை உண்டாக்கி தன் நிஜ சொரூபத்தை மறந்து தேகத்தை பார்த்து நான் – எனது விகாரம் உடையதால் இந்த மனோமய கோசம் ஆத்மா அல்ல!!
அடுத்ததாக மூன்றாவது பகுதியில் விஞ்ஞானமயகோசம், ஆனந்தமய கோசம் பற்றி விரிவாக பார்ப்போம்...
தொடரும்...

Comments

Popular posts from this blog

மனைக்கு ஆகா விருட்சங்கள், இரவிற்கு ஆகா போசனங்கள்..

சூரிய நமஸ்காரம்- தமிழரின் யோக பயிற்சி..!! {பாகம்-03}

"தாய்ப்பால்" எனும் அருமருந்து!  உலக தாய்ப்பால் வாரம் !!