மனமறியாத ரகசியங்கள்..!! (பகுதி-3)


(விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம்)
இதுவரை நம் மனம் அறிய முடியாத பல அபூர்வ ரகசியங்களை பற்றி கடந்த பதிவில் அன்னமய, பிராணமய, மனோமய கோசங்கள் பற்றி பார்த்தோம். இதன் தொடர்ச்சியாக இந்த பதிவில் விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் பற்றிய ஆழமான ரகசியங்களை பார்ப்போம்...
💠 (04) விஞ்ஞானமயகோசம் (Intelligence body)
அறிவுருவான வெளிப்பாடான இந்த கோசம் மனோமயகோசத்தின் தொகுப்பாக அமைகிறது. நமது புலன்களின் மூலம் வெளியுலகை பற்றிய செய்திகள் மனதில் பக்குவபடுத்தப்பட்டு ஞானமாக விஞ்ஞானமயகோசத்தை சேர்கிறது.
மனதை கடலில் தோன்றும் அலைகளுக்கு ஒப்பிட்டால் ஆழ்கடலை விஞ்ஞானமய கோசத்திற்கு ஒப்பிடலாம். நமது மனதின் உளத்திண்மை, மனப்பக்குவம், மன உறுதி ஆகியவை நமது விஞ்ஞானமய கோசத்தின் அடிப்படையில் அமைகிறது.
ஐம்புலன்களுடன் புத்தி என்ற கருவியும் கூடியது விஞ்ஞானமய கோசம். ஒரு பொருளை அறிவதும், செயல் புரிவதும், இதற்கு நான்தான் கா்த்தா என்று சொல்லிக் கொள்ள வைப்பதும் இந்த உடம்பே ஆகும். எது சரி, எது தவறு? எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது? எது உண்மை, எது பொய்? எது நிலைக்காது, எது நிலைக்கும்? இதுபோன்ற தர்க்க ரீதியான தேடல்களை நம் பகுத்தறிவும் சிந்தனைத் திறனும் மேற்கொள்கின்றன. அறிவின் இந்த இயல்புகளும் செயல்பாடுகளும் அடங்கிய உறை விஞ்ஞானமய கோசம் எனப்படும்.
புத்தியால் அமைவது விஞ்ஞானமயகோசம். எண்ணில்லாத சிந்தனைகளுக்கு வடிவம் கொடுப்பதே புத்தியாகும். புத்தியோடு ஞானேந்திரியங்களான ஐம்பொறிகளும் சேர்ந்து அன்னமய பிராணமய மனோமய கோசங்களோடு கூடி, அந்தக்கரணத்திலுள்ள தியானம் மனம் முதலானவற்றின் விருத்தி எப்போது உண்டாகிறதோ அப்போது விஞ்ஞானமய கோசம் எனப்படும். நான் புத்திசாலி பக்தன், செயலாற்ற வல்லவன், ஆசையற்றவன் என்பன போன்றவையெல்லாம் இந்தக் கோசத்தின் கர்த்துருத்துவாதி குணங்களாகும்.
மேற்குறிப்பிட்ட பிராணமயம் மனோமயம் விஞ்ஞானமயம் என்னும் மூன்று கோசங்களாலும் சூக்ஷ்ம சரீரம் (நுண்ணுடல்) நிலைத்து நிற்கும். இதனை பகுத்தறிவு என்று எளிதாகச் சொல்லிவிட முடியும். எது சரி.. எது தவறு? எதைச் செய்யலாம்.. எதைச் செய்யக்கூடாது? எது உண்மை.. எது பொய்? எது நிலையானது.. எது நிலையற்றது? போன்ற விவாதத்திற்கு உரிய விஷயங்களை மேற்கொள்வதுதான், நம்முடைய பகுத்தறிவும், சிந்தனைத் திறனும். அறிவுசார்ந்த இயல்புகளும், செயல்பாடுகளும் அடங்கிய இடமே, ‘விஞ்ஞானமய கோசம்’ எனப்படுகிறது.
சரி – இதனை ஆத்மா என்று எடுத்து கொள்ளலாமா ?
இந்த விஞ்ஞானமய கோசத்தையே ஆத்மா என்று எடுத்து கொள்ளலாமா என்றால், மனோமயகோச அந்தரங்கத்தில் சப்த விஷயங்கள் இந்த கோசத்துடன் ஆத்மாவுடன் கூடி இருக்கும் புத்தியானது, சுஷிப்தி காலங்களில் தனக்கு காரணமாகிய அஞ்ஞானத்தில் அடங்கி ஜாக்கிரதையில் வியாபித்து அவஸ்தைகளை உண்டாக்கி இடைவிடாமல் எப்போதும் கூடியிருப்பதாலும் இதுவும் ஆத்மாவல்ல..!!
💠 (05) ஆனந்தமயகோசம் (Bliss body)
ஆனந்தமய கோசம் என்பது இந்த அடுக்குகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு இருக்கும் நிலை. இந்த நிலையை உணர்வதும் அடைவதும் ஆன்மீகத்தின் லட்சியம் என்று சொல்லலாம். நமது காரணவுடல் முழுவதும் ஆனந்தமய கோசம் என்ற பெயரில் வழங்கப்படும். பரமாத்மாவின் ஆனந்த மயத்தின் வெளிப்பாடு என்பதால் நமது காரண உடலுக்கு இந்த பெயர்.
மனித வாழ்வு என்பது இவை ஐந்தையும் உள்ளடக்கியது. ஐந்தாவது கோசம் நம் புலன் அறிவுக்கு அப்பாற்பட்டது. மற்ற நான்கு கோசங்களையும் நாம் உணரவும் அறியவும் முடியும். பரமாத்மாவின் பிரதி பிம்பமாய் இருப்பது ஆனந்தமய கோசம் ஆகும். தனக்குச் சுகம் கிடைக்கும்போதும் ஆழ்ந்த உறக்கத்தில் சலனமற்றுத் தூங்கும் போதும், அனைத்துப் புலன்களும் அடங்கிய நிலையில் பேரானந்த நிலை ஒன்று உள்ளது அல்லவா? அந்த ஆனந்தத்தை அனுபவிப்பது ஆனந்தமய கோசமே ஆகும். இந்த கோசங்களால் மனிதன் பெறும் மாறாத மகிழ்ச்சி - நிலைத்த இன்பம் ஆனந்தமயகோசம் ஆகும்.
மேற்கூறிய நான்கு கோசங்களும் அஞ்ஞானத்தோடு (அறியாமையோடு) சேர்ந்து நுட்பமான ஆல விதைக்குள் பெரிய ஆலமரம் அடங்கியிருப்பது போல் சொரூப சுகத்தில் தன் காரண ஞானம் அடங்கியிருக்கும் போது ஆனந்தமய கோசம் என வழங்கப்படும்.
பிரியம், மோதம், பிரமோதம் என்னும் விருத்திகளோடு கூடிய அஞ்ஞானம் முதன்மையாகவுள்ள அந்தக்கரணமாகும்.
பிரியம் - என்பது விருப்பமான பொருளைப் பார்த்ததும் உண்டாகும் ஆனந்தம்,
மோதம் - என்பது அப்பொருள் தன் கைக்குக் கிடைத்ததும் உண்டாகும் ஆனந்தம்,
பிரமோதம் - என்பது தன் கைக்குக் கிடைத்த பொருளை தான் அனுபவித்ததும் உண்டாகும் ஆனந்தம்.
ஆத்மா சச்சிதானந்தத்தோடு இருப்பதால் ஆனந்தம் தோன்றுகிறது. எனவே ஆனந்தமய கோசத்திற்கும் பரமாத்மாவுக்கும் சேர்க்கை உண்டாகிறது. இதற்கு இஷ்டமானவை போகத்துருத்வாதி விகாரங்களாகும். இவ்வைந்து கோசங்களோடு ஆத்மா சேர்ந்திருந்தாலும் பஞ்சகோசங்களுக்கு ஆத்மா வேறானதாகும். புளியை அதன் ஓடு மூடிக்கொண்டிருப்பது போல் இவ்வைந்து கோசங்களும் பரமாத்மாவையும் ஜீவாத்மாவையும் மூடிக் கொண்டு அவற்றைக் காணப்படாமல் செய்வதினால் இவை கோசங்கள் எனப்படுகின்றன.
யோகிகளும், ஞானிகளும் எப்போதும் தியானத்தில் தன்னை மறந்த லயத்தில் இருப்பார்கள். அவர்களின் மற்ற உடம்புகள் எல்லாம் அடங்கிய நிலையில் இந்த ஆனந்தமய கோசம் என்ற உடம்போடுதான் இருப்பார்கள்.
வேதாந்திகள் சொல்வது,
மனிதனுக்கு இருப்பது மூன்று உடம்புகள்தான். அவை
(1) தூல சரீரம்
(2) சூக்கும சரீரம்
(3) காரண சரீரம்.
இந்த மூன்றையும் சுற்றிப் போர்வை போல அமைந்தவை ஐந்து கோசங்கள் என்பது வேதாந்திகள் கருத்து.
தூல சரீரத்துக்குப் போர்வை போல இருப்பது அன்னமய கோசம். சூக்கும சரீரத்துக்குப் போர்வை போல இருப்பது பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம். காரண சரீரத்துக்குப் போர்வை போல இருப்பது ஆனந்தமய கோசம். விஞ்ஞான மருத்துவம் மேற்கண்ட பாகுபாட்டை இன்று வரை உணரவில்லை.
மரணத்துக்குப் பிறகு உயிர் தூல சரீரத்தை உதறிவிட்டு சூக்கும சரீரம், காரண சரீரம் என்ற இரண்டுடன் பயணத்தைத் தொடா்கிறது. பாவ புண்ணியங்களுக்கு ஏற்றபடி பல்வேறு பிறவிகளையும், உலகங்களையும் அடைந்து அலைகிறது என்கிறார்கள். உயிர் என்றைக்குக் காரண சரீரத்தை உதறுகிறதோ அப்போதுதான் நிரந்தர விடுதலை! அதுவரை மீண்டும் பிறப்பு! மீண்டும் இறப்பு! இப்படிச் செத்துச் செத்துப் பிறப்பதுதான் உயிரின் பயணம். இது ஒரு நீண்ட நெடிய பயணம். எண்ணங்களாலும், ஆசைகளாலும் நிரம்பியது காரண சரீரம். மனம் மற்றும் உணா்ச்சிகளின் இருப்பிடம் சூக்கும சரீரம். மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்பொறிகளாலும், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற புலன்களின் அறிவாலும் செயல்படுவது தூல சரீரம்.
மனிதன் ஒன்றை ருசிக்கும் பொழுது, முகரும் பொழுது, தொடும் பொழுது, கேட்கும் பொழுது, பார்க்கும் பொழுது தூல சரீரத்தினால் செயல்படுகிறான். கனவு காணும் பொழுது, கற்பனை செய்யும் பொழுது, ஒன்றைத் தீா்மானிக்கிற பொழுது சூக்கும சரீரத்தினால் செயல்படுகிறான்.
ஒருவன் யோகம், தியானம், தவம் போன்ற ஆன்மிகப் பயிற்சிகளில் இருக்கும் போதும், எண்ணும்போதும் காரண சரீரத்தில் செயல்படுகிறான். கனவுகளே இல்லாத ஆழ்ந்த உறக்கத்தில் மட்டுமே காரண சரீரம் பற்றி உணர முடியும். காரண சரீரம் மிக மிக மெல்லியது. மிக அதிகமான படைப்பாற்றல் கொண்டது. காரண சரீரம் இறைவனது படைப்புக்குத் தேவையான 35 எண்ணங்களின் சோ்க்கையால் ஆனது என்பா். சூட்சும சரீரம் 19 மூலப் பொருள்களால் ஆனது என்பா். தூல சரீரம் 16 மூலப் பொருள்களால் ஆனது என்பா்.
மரணத்தின்போது, இந்த உயிர் தூல சரீரத்தை உதறிவிட்டு சூக்கும சரீரத்தோடும் காரண சரீரத்தோடும் வெளியேறுகிறது. அவ்வாறு வெளியேறும் போது பந்தபாசம், ஆசைகள், ஆழ்ந்த நினைப்புகள், நட்பு, காதல், பழிவாங்கும் உணா்ச்சி, நிறைவேறாத ஆசைகள் முதலிய வாசனைகளோடுதான் வெளியேறுகின்றது என்றும் சொல்லுகிறார்கள்.
சூக்கும சரீரம் – ஞானிகளின் வாழ்க்கையில் நடந்த அனுபவ சூக்கும சரீர விளக்கம்.
தூல சரீரத்திலிருந்து சூக்கும சரீரம் பிரிந்து செல்லும் ஆற்றல் பெற்றது. அது மின்சாரம் போல அதி வேகத்துடன் செல்லும் சக்தி படைத்தது. சூக்கும சரீரம் வெளியில் உலவுகிறபோது தூல சரீரத்தின் உருவத்துடனும் அமைப்புடனும் உலவக் கூடியது என்கிறார் மறைமலை அடிகள். ஆனால் ஒரு வித்தியாசம். சூக்கும சரீரத்தின் கால்கள் மட்டும் நிலத்தில் படாது. அதனால்தான் பேய்களின் கால்களும், தேவா்களின் கால்களும் நிலத்தில் படுவதில்லை என்கிறார் அருள்திரு அடிகளார்.
ஒரு முறை தனக்கு இளமைக் காலத்தில் ஏற்பட்ட அனுபவம் ஒன்றினை அருள்திரு அடிகளார் தெ.பொ.மீனாட்சி சுந்தரம் அவா்களிடம் சொன்னார்கள். அடிகளார் தியானத்தில் இருக்கும்போது, தன் சூக்கும சரீரம், தூல சரீரத்தை விட்டுப் பிரிந்தது. நேரே அன்னையின் கருவறை நோக்கிச் சென்றது. அப்போது பூட்டியிருந்த கதவுகள் தானே திறந்து கொண்டன. சூக்கும சரீரம் அங்கிருந்த ஒரு தட்டில் கற்பூரம் வைத்துத் தீபாராதனை செய்து விட்டு மீண்டும் திரும்பி வந்து தூல சரீரத்துடன் இணைந்து கொண்டது. இது போன்ற அனுபவம் ஞானியா்களுக்கு மட்டுமில்லாமல் சாதாரண மனிதா்கள் சிலருக்கும் நோ்வது உண்டு.
புலவா் சொக்கலிங்கம் அனுபவம், ஒருமுறை புலவா் சொக்கலிங்கம் அது போன்ற அனுபவம் தனக்கும் கிடைத்தது என்று சொல்கிறார். "ஒரு விடியற்காலம் நான் படுத்திருந்த போது என்னிடமிருந்து என்னைப் போலவே ஒரு உருவம் உடம்பிலிருந்து வெளியேறியது. எங்கள் காந்திநகரைச் சுற்றி வந்தது. வீடு திரும்பும்போது பால்காரன் வந்துவிட்டான். அவன் உடம்பு பட்டுவிடுமோ என்ற அந்த உருவம் அஞ்சியது. என் உடம்பும் அஞ்சியது. இரண்டு சரீரத்திலும் ஒரே விதமான உணா்ச்சி! இது சற்றே வித்தியாசமான அனுபவம்" என்றார்.
பரமஹம்சர் யோகானந்தா் இதுபோன்ற அனுபவங்களை ஒரு யோகியின் சுயசரிதையில் எழுதியிருக்கிறார். உடலில் இருந்து வெளிப்படும் உயிர் அல்லது ஆன்மா அல்லது ஆவி எந்த உடலிலிருந்து பிரிந்ததோ அந்த உடம்பின் உருவத்துடனேயே இருக்கும். இரண்டாவதாக உடலிலிருந்து பிரிகிற உயிர் அல்லது ஆத்மா அல்லது அந்த ஆவி குறிப்பிட்ட எந்த வடிவும் பெறாமலும் இருக்கும். இரண்டாவது நிலையில் அந்த ஆவி பனிப்படலம் போலவோ, மின்சாரப் பொறி போலவோ தோற்றம் அளிக்கும் என்கிறார்.
இந்தத் தோற்றங்கள் புவியீா்ப்பு சக்தியால் பாதிக்கப்படுவதில்லை. பூதஉடல் எங்கே இருக்கிறதோ அதற்கு அருகாமையிலேயேதான் சுற்றிச் சுற்றி வரும் என்று சொல்கிறார்கள். இந்தச் சூக்கும சரீரங்கள் காலத்தையும், தூரத்தையும் வென்று வேகமாகச் செல்லும் சக்தி படைத்தவை. சுவா்கள் போன்ற தடுப்புகளை ஊடுருவிக் கொண்டு உள்ளே நுழையக் கூடியவை. இந்த சூட்சும சரீரங்களிலிருந்து தானாகவே ஒளி கசியும் என்கிறார்கள். இன்னும் சிலா் சூட்சும சரீரம் தூல சரீரத்திலிருந்து பிரிந்து எங்கே சென்றாலும் ஒரு நூலிழையினால் தூல சரீரத்தோடு இணைக்கப்பட்டிருக்கும் என்றும் இது குழந்தை தாயுடன் நஞ்சுக் கொடியினால் இணைக்கப்பட்டிருப்பது போல இருக்கும் என்று சொல்கிறார்கள்.
உடல் மரணம் அடையாமல் சூட்சும சரீரம் பிரிந்து செல்கிறபோது மட்டும்தான் இந்த இணைப்பு இருக்கும். ஆனால் மரணத்தின் போது சூட்சும சரீரம் பிரிந்து செல்கிறபோது இந்த இணைப்பு முற்றிலுமாக அறுந்து போகும் என்று சொல்கிறார்கள். இவை மேனாட்டு அறிஞா்கள் தங்கள் ஆராய்ச்சிகள் மூலம் வெளிப்படுத்தியுள்ள சில கருத்துக்கள் ஆகும்.
ஒவ்வொருவரும் உடல், மனம், அறிவு இதில் ஏதேனும் ஒன்றுடன் தம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். அதற்கு மாறாக இவை ஒவ்வொன்றும் ஒரே உடலின், ஒரே வாழ்வின் வெவ்வேறு அடுக்குகள் என்பதை உணர்ந்தால் ஒருங்கிணைந்த விதத்தில் நம்மை நாமே அணுகிப் புரிந்துகொள்ளலாம். எல்லாமே சேர்ந்ததுதான் நம் வாழ்வு என்பதையும் எந்த ஒன்றுடனும் நாம் நின்றுவிடக் கூடாது என்பதையும் அனுபவபூர்வமாக உணர்பவர் எல்லாக் கோசங்களையும் தாண்டி ஆனந்தமய கோசத்தை உணர முடியும் என்பது இதன் உட்பொருள்.
தைத்ரிய உபநிடதத்தில் எது பிரம்மம் என்னும் தேடலில் அன்னமே பிரம்மம் என்று முதலில் உணரப்படும். பிறகு இது படிப்படியாக நகர்ந்து பிராணனே பிரம்மம், மனமே பிரம்மம், விஞ்ஞானமே பிரம்மம் என்ற முடிவுகள் எட்டப்படும். கடைசியில் ஆனந்தம் பிரம்மணோ வியஜானாத் (ஆனந்தமே பிரம்மம் என அறிக) என முடியும்.
"கோசம்" என்பதற்கு "உறை" என்றும், ‘பஞ்ச’ என்பதற்கு ‘ஐந்து’ என்றும் பொருள். மனித உடலில் இருக்கும் ஐந்து விஷயங்கள் என்று இதனை எடுத்துக் கொள்ளலாம். உடலை இயக்கும் பஞ்ச கோசங்கள் அன்னமய கோசம்,பிராணமய கோசம்,மனோமய கோசம்,விஞ்ஞானமய கோசம்,இந்த ஆனந்தமய கோசம்,மேற்கண்ட நான்கு அடுக்குகளுக்கும் அப்பாற்பட்டு இருக்கும் ஒரு நிலையே, "ஆனந்தமய கோசம்" ஆகும்.
மற்ற நான்கு கோசங்களையும், நாம் உணரவோ, அறியவோ முடியும். ஆனால் ஆனந்தமய கோசம் என்பது நம்முடைய புலன் அறிவுக்கு அப்பாற்பட்டது. இந்த நிலையை உணர்வதும், அடைவதும்தான் ஆன்மீகத்தின் லட்சியமாகும். அந்த ஆனந்தத்தையே "பரப்பிரம்மம்" (அடிப்படை மெய்பொருள்) என்கிறார்கள்.
💥 ஏழு உடம்புகளில் எழும் ஆற்றல்கள் :
விஞ்ஞானம் எந்த இடத்தில் தொடர முடியாமல் தடுமாறி நிற்கிறதோ, அந்த இடத்திலிருந்து மெய்ஞ்ஞானம் புறப்படுகிறது என்பார் விஞ்ஞானி ஐன்ஸ்டின். விஞ்ஞானத்தால் விடைவிளம்ப இயலாத பல வினாக்களுக்கு மெய்ஞ்ஞானமே விடை கூறுகிறது. அப்படிப்பட்ட ஒரு புதிரான பொருள்தான் சப்த சரீரங்கள். போர்வை மேல் போர்வையாக ஏழு மேனிகளைப் போர்த்தி, உலகில் உலவும் ஜீவனே மனிதன் எனப்படுகிறான் என்பார் மெய்யறிவாளர்.
அவ்வுடல்களாவன:
(1) பருவுடம்பு,
(2) பிராண உடம்பு,
(3) இச்சையுடம்பு,
(4) உருவமான உடம்பு,
(5) அருவமான உடம்பு,
(6) விஞ்ஞானமய உடம்பு,
(7) ஆனந்தமய உடம்பு.
மனிதனுக்கு முதலில் உண்டான உடம்பு ஆனந்தமய உடம்பு (ஆனந்தமய கோசம்) என்பர். குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பது இங்கே நினைவுகூறத்தக்கது. ஆனால் அவனிடம் இறுதியாகச் செயல்படுவதும் இந்த ஏழாவது உடம்பான ஆனந்தமய உடம்பேயாகும். இந்த மேனியின் அனுபவங்களை அனுபவத்தால் தான் உணர முடியுமே தவிர வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்பர்.
இந்த உடலின் இயக்க அனுபவத்தில் சர்வம் பிரம்மமயம் என்ற உணர்வு உண்டாவதாக உரைக்கப்படுகிறது. இந்த உடம்பானது தபோலோகத்தில் வேலை செய்வதற்காக வழங்கப்பட்டது. தபோலோகத்தில் ஒற்றுமையுணர்ச்சியைத் தவிர வேறெதற்கும் இடமில்லையாதலால் சித்தர், ஜீவன் முக்தர் போன்றோர் மட்டுமே இவ்வுடலில் செயல்பட வல்லவர்.
நரம்பியல் கருத்துக்களின்படி, குழந்தை உருவாகும்போது, உடலமைப்பில் முதல் பகுதியாக உருவாவது மூளையில் உள்ள 4வது வென்ட்ரிகள் எனும் பகுதியாகும். மரணத்தின் போது மனிதனின் நினைவு இறுதியாக மறைந்து போவதும் இந்தப் பகுதியிலேயாகும் என்று நரம்பியல் நிபுணர்கள் கண்டறிந்து உரைக்கின்றனர். எந்த வாயிலில் உயிர் உடலுள் நுழைந்ததோ, அதே வாயிலிருந்து அது உடலைவிட்டு வெளியேறுகிறது. என்னே சிருஷ்டி கர்த்தாவின் அற்புதம்! இக்கருத்தை நோக்கும் போது மூளையின் 4வது வென்ட்ரிகிள்தான் 7வது உடம்பான ஆனந்தமய உடம்போ என்று கருத வாய்ப்புண்டு. நினைவுணர்ச்சி 4வது வென்ட்ரிகளில் இருந்து மறையும்போது உடலின் எடை அரை - முக்கால் அவுன்ஸ் குறைகிறது என்று கண்டறிந்துள்ளனர் உயிரியல் அறிஞர்கள். இந்த உண்மை நிரூபிக்கப்பட்டு, நூற்றாண்டுகளுக்கு மேலாகியும் எடை ஏன் குறைகிறது என்பதற்கான காரணம் இதுவரை புரியாத புதிராகவே இருக்கிறது.
பஞ்சபூத அணுக்களின் சேர்க்கையால் ஆன எலும்பும் தோலும் போர்த்தப்பட்ட இந்த பருவுடம்பை பூதவுடல் என்றும், அன்னவுடல் (அன்னமய கோசம்) என்றும் வழங்குவர்.
இந்த யாக்கை கண்ணுக்குத் தெரியும் பருப்பொருளான பூலோக அணுக்களின் சேர்க்கைகளால் ஆக்கப்பட்டது. எனவே இவ்வுடலை பருவுடம்பு என்பர். இதன் செயல்பாட்டை மட்டுமே யாவராலும் பார்க்க இயலும். இதனை ஸ்தூல உடம்பு என்றும் கூறுவர். இந்த முதல் உடம்பான பருவுடம்பை ஒட்டியிருக்கும், கண்ணுக்குப் புலப்படாத 2வது உடல் பிராண உடம்பு (பிராணமய கோசம்) எனப்படும். இதனை ஆவியுடல் என்றும் வழங்குவர். பருவுடலைப் போலவே இருக்கும் இது அன்னவுடலின் நுண்ணிய பாகமாக இருந்த போதிலும், இது பருவுடம்பை விட்டு 2 முதல் 3 செமீ. வரை வெளியே சற்று விரிந்திருக்கும். இவ்விரு உடம்புகளையும் ஒரு மிக நுண்ணிய கம்பி போன்றதொரு பொருள் இணைந்திருக்கும்.
மயக்க மருந்து, லாகிரி வஸ்து, மெஸ்மெரிஸம், ஹிப்னாடிஸம் போன்றவற்றால் மனிதன் மயக்கநிலையில் இருக்கும்போது, பிராண உடம்பின் பெரும் பகுதி பருவுடம்பை விட்டு ஒரு வரையறைக்கு உட்பட்டுப் பிரியும். அப்போது வலியுணர்ச்சி, தொடுவுணர்ச்சி, தட்பவெப்ப உணர்ச்சி போன்ற உணர்ச்சிகள் எதுவுமே தெரியாது. மயக்கநிலை குறையக் குறைய பிராணவுடம்பு திரும்பவும் கீழே கிடக்கும் பருவுடம்புடன் சேர்ந்து விடும். மரணத்தின் போது இவ்விரு உடம்புகளையும் இணைத்திருக்கும் கம்பி அறுந்துவிட, பருவுடல் சடலமாகக் கீழே விழும். பிராணவுடம்பு (ஆவி) பருவுடல் போன்ற உருவத்தில் அதற்கு மேல் மிதந்து கொண்டிருக்கும். சடலம் புதைக்கப்பட்டால் அது மக்கிப் போய் மண்ணாகும் வரை ஆவியுடல் மிதந்து கொண்டிருக்கும்.
சூட்சும உடம்பு என்று வழங்கப்பெறும் இந்த ஆவியுடம்பே பலருக்குப் பேயாகத் தென்படுகிறது. இந்த உடம்பைத்தான் மாந்திரீகர், பூதகணங்கள் கெட்ட ஆவிகள் போன்றோர் பில்லி, சூனியம், ஏவல், செய்வினை போன்ற தீய செயல்களுக்குப் பயன்படுத்துவர். அவர்கள் சமாதியில் இருக்கும் சித்தர், சான்றோர் போன்றோரின் பிராணவுடம்பைப் பயன்படுத்தி, தீயசெயல் செய்ய முயன்று ஏதும் இயலாமல் தாமே துன்புறுவர். அப்பெருந்தகையரின் பிராணவுடம்பானது தம்மை வழிபடுவோர்க்கும் துயருறுவோர்க்கும் ஆசி வழங்கி நன்மை புரிகின்ற தன்மையாகின்றது. மரணத்தின் பின் உயிரானது பிராணவுடம்பில் சில காலம் மயங்கி கிடக்கும். மயக்கநிலை தெளிந்தவுடன் ஆன்மா பிதுர்லோகம் போய்விடும். எனவேதான் சவத்தைப் புதைப்பதை விட சிதையில் எரித்துவிடுவதே நல்லது என்பர்.
மனிதனுக்கு ஆத்மா என்று தனியாக உள்ளதா எனப் பலர் ஆராய்ச்சிகள் செய்திருக்கின்றனர். அறிவியல் வல்லுநர்கள். அவற்றில் பின்வரும் கொடூரமான ஆராய்ச்சியும் ஒன்று. மரணத்தின் தருணத்தில் இருந்த ஒருவனைச் செப்புக் கம்பிகளாலான கொசுவலை போன்ற ஒரு கூண்டில் கிடத்தி, கம்பிகளில் உயர் அழுத்த மின்சாரத்தைச் செலுத்தி, அவன் ஆத்மா உடலிலிருந்து பிரிந்தவுடன், அது அந்த மின்னடைப்பைத் தாண்டி வெளியே செல்ல இயலாமல் மின்சாரத்தால் தாக்குண்டு அவதிப்பட்டதைக் கண்டறிந்திருக்கின்றனர். ஆகவே, ஆத்மா மின்சக்தியால் பாதிக்கப்படக் கூடியது என்றாகிறது. ஆனால் கண்ணாடிப் பெட்டியாக இருந்தால் அது உடைத்துக் கொண்டு வெளியேறி விடுமாம்.
டாக்டர் ஹெளட் என்ற சிகாகோ மருத்துவர், ஆவிகளைப் பார்ப்பது கூட சாத்தியமே. பூதவுடலையும் ஆவியுடலையும் கயிறு போன்ற ஒன்று இணைத்திருக்கிறது; அது புதைமண்டலத்தில் இருக்கும் ஒளிரேகை போல் இருக்கிறது; மனிதன் மரணமடையும் போது, ஆவி போன்ற ஒன்று தலைப்பகுதியிலிருந்து வெளியேறி, பிறகு இறந்த மனிதனின் உருவம் பெற்று, சிறிது நேரத்தில் காற்றில் மறைந்து விடுகிறது; அத்தோற்றம் மறையும் வரை ஒளிக்கற்றாலான ஓர் இணைப்பு பூதவுடலையும் ஆவியுடலையும் இணைத்திருக்கும் என்று நம் ஆய்வில் ஆதாரத்துடன் கூறுகிறார்.
பாரா பிஸியாலஜி ஆய்வாளர்கள் பூதவுடலிலுள்ள நெற்றிக்கு அருகில் இருக்கும் பீனியல் சுரப்பியோடு ஆவியுடல் இணைப்பு கொள்கிறது என்பர். புவர்லோக அணுக்களால் மூன்றாவது உடலான இச்சையுடம்பு உருவாக்கப்படுவதால், இது பூலோகப் பொருள்களை ஊடுருவி நிற்கும். இது கோழிமுட்டை வடிவத்தில் மனிதனைச் சுற்றி சுமார் 2 அடி விரிந்திருக்கும். பலவித ஆசைகள் (நல்லவை மற்றும் கெட்டவை) உணர்வுகள், எண்ணங்கள் போன்றவை இந்த உடம்பில் செயல்படுகின்றன. ஆசைகள் இச்சையுடம்பிலும் எண்ணங்கள் அறிவுடம்பிலும் (இது இச்சையுடம்பின் ஒருபகுதி) தனித்தனியாக உணர முடியாத அளவுக்கு விரைவாகச் செயல்படும். இச்சை ஏற்படும்போது மனதில் ஒருவித எழுச்சியும், பருவுடலில் ஒருவித பரபரப்பும், ரத்த ஓட்டத்தில் ஒரு வேகமும் உண்டாகும். ஆனால் எண்ணம் மாத்திரம் ஏற்பட்டால் இவ்வித மாற்றங்கள் நிகழா.
இச்சையுடம்பு சற்று தடிப்பான புவர் அணுக்களால் உருவானாலும் நற்குணம் நிறைந்த சான்றோரின் இச்சையுடம்பு மிகவும் லேசாக நுண்மையான புவர் அணுக்களால் ஆனது. நற்குணங்களை வளர்த்துக் கொள்ளும் எவரது புவர் அணுவும் மென்மையாகவும் நுண்மையாகவும் மாறிவிடும். உணவில் சேர்க்கும் பொருள்களின் அணுக்கள் இச்சையுடம்பில் வந்து சேரும்.
தடிப்பான புவர் அணுக்களாலான இச்சையுடம்பிலிருந்து இழிவான அலைகளும் நுண்மையான இச்சையுடம்பிலிருந்து உயர்வான அலைகளும் நாற்புறமும் வீசிக் கொண்டிருக்கும். சத்துவ உணவே உட்கொண்ட போதிலும் - காம, குரோத, மத, மார்ச்சரிய, சிற்றின்பச் சிந்தனைகளும் உணர்வும் இருந்தால், அந்த இச்சையுடம்பு, இழிநிலையிலேயே இருக்கும்.
இச்சையுடம்பிலிருந்து வீசும் அலைகள், அந்த உடலுக்குரியோர் அடுத்தவர்களைப் பார்க்கும் தூரம் வரை அவர்களைச் சுற்றிச் சூழ்ந்து நாற்புறமும் வீசி, அந்த வட்டத்திற்கு உட்பட்ட அனைவரின் மேனி மற்றும் மனதைத் தாக்கி, இச்சையுடலுக்குரியோரின் எண்ணத்திற்கேற்ப நல்லனவற்றையோ கெடுதல்களையோ ஏற்படுத்தும். எனவேதான் "தீயோரைக் காண்பதும் தீதே, நல்லோரைக் காண்பதும் நன்றே" என்று கூறுவர்.
இச்சையுடம்பு பகலில் பருவுடலை ஒட்டி வேலை செய்து விட, இரவில் பருவுடலும் பிராணவுடலும் இளைப்பாற, மற்ற நுண்ணிய உடம்புகளுடன் பிரிந்து பிராணவுடம்புக்கு மேலாக மிதந்து கொண்டிருக்கும். அல்லது வெளியே உலாவிக் கொண்டிருக்கும். அப்போது அது ஒரு மெல்லிய சல்லாத் துணி போன்ற ஒரு வலையால் பிராணவுடலுடன் பிணைபட்டு இருக்கும். கீழே கிடக்கும் உடம்பிற்கு ஏதேனும் சிறு இடையூறு ஏற்பட்டால், கண்ணிமைக்கும் கணநேரத்திற்குள் அது பருவுடலுள் புகுந்து கொள்ளும். உறங்கும் போது உலவிக் கொண்டிருக்கும் நல்லோர் இச்சையுடம்பு தன்னைச் சார்ந்தோருக்கும் துயருறுவோர்க்கும் நல்லாசி வழங்கி, நல்லவை நல்கும்.
யோகியர் இச்சையுடம்பின் வலையைத் தூய்மை செய்து புவர்லோகத்தாரையும் இறந்தோரையும் நேரில் கண்டு உரையாடும் திறன் பெறுவர். இறக்கும் தருணத்தில் இருப்போரின் பிராணவுடம்பு நெகிழ்ச்சியுறுவதால், அவர்களும் பிராணவுடம்பின் வாயிலாக இறந்த உறவினரையும் முன்னோரையும் காணும் வாய்ப்பு பெறுவர். அவர்கள் தம்மை இறந்தவர் அழைப்பதாகக் கூறுவதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. நெற்றிக்கண் திறக்க வல்ல ஞானியர், ஒருவரின் இச்சையுடலை அவரது குணத்திற்கேற்ற வண்ணத்தில் அடர்த்தியில் காண்பர்.
இச்சையுடலின் கருப்புநிறம் பகையையும், கருஞ்சிவப்பு காமத்தையும், ரோஜாநிறம் அன்பையும், மஞ்சள் கலந்த சிவப்பு நிறம் மாறாத அன்பும் மனவல்லமை மற்றும் உறுதி ஆகியவற்றையும், மஞ்சள் அறிவையும், இருண்ட தவிட்டு நிறம் நயவஞ்சகத்தையும், சாம்பல் நிறம் அச்சத்தையும் குறிக்கும். இந்நிறங்களின் அடர்த்தியைப் பொருத்து அவரது குணங்களை அறியலாம். சோவியத் விஞ்ஞானியர் உயிருள்ளனவற்றில் இருந்து வெளியாகும் சக்திக்களம் பற்றியும் வெளிப்படும் ஓவியலைகள் பற்றியும் ஆய்வுகள் நடத்தி, பண்டைய மெய்ஞ்ஞானியரும் ஆன்மீகப் பெரியவர்களும் மனிதனிடமிருந்து வெளிப்படும் இந்த சக்தி வெளிப்பாட்டினை உணரும் ஆற்றல் பெற்றவராக இருந்ததை அறிந்தனர்.
நவீன மின் Kirilian Photography முறை மூலம் உயிருள்ளனவற்றைச் சுற்றி ஒளி வியாபித்திருப்பதை விஞ்ஞானியர் மெய்ப்பித்துள்ளனர். பயோ பிளாஸ்மிக் நிலையில் பூதவுடலைச் சுற்றி வேறொரு உடல் வியாபித்திருப்பது இதன் மூலம் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. உண்மையில், ஒவ்வொரு மனிதனைச் சுற்றிலும் வானவில்லின் வண்ணங்கள் போன்று பலவித வண்ணங்களில் ஒளியலைகள் பாதத்திலிருந்து சிர உச்சிவரை பரவிச் சுழன்று கொண்டே இருக்கின்றன. இதனை ஆரோ என்பர். ஆரோவின் நிறங்களும் பிரகாசமும் மனிதனின் அவ்வப்போதைய மனநிலைக்கும் உடலாரோக்கியத்திற்கும் ஏற்றவாறு மாறி கொண்டே இருக்கும். சாதாரணமானவர்களால் அத்தகைய ஆரோவைக் காண முடியாவிட்டாலும், ஞானதிருஷ்டி உள்ளோர் அதனைத் துல்லியமாகக் காண இயலும்.
Kririlian Photography மூலம் படம் எடுத்தால், உடலைச் சுற்றி சில அங்குலங்கள் வரை சுழன்று கொண்டிருக்கும் நிறமாலையை நன்கு காணலாம். இத்தகைய நிறமாலைப் புகைப்படங்களைக் கொண்டு பல்வேறு மனிதர்களின் குணப்பண்பைக் கண்டு பிடித்து விடலாம். ஆரோக்கள் வெவ்வேறு அதிர்வெண்கள் கொண்டவை. யோகியரின் ஆரோ ஐந்து அதிர்வெண்கள் சாதாரண மனிதனின் ஆரோ 50 முதல் 100 அதிர்வெண்களும் கொண்டவை ஆகும். உடலில் உயிருள்ள வரைதான் இந்த நிறங்களும் ஆராவும் தெரியும்.
யோக சாஸ்திரத்தில் சூட்சும சரீரமும் பூதவுடலும் இணையுமிடங்கள் சக்கரங்கள் என்று சொல்லப்படுகின்றன. அதீதமான மனிதசக்தியின் மனோநிலை மையங்கள் என்றும் வழங்கப்படுகின்றன. இந்தச் சக்ரா என்று சொல்லப்படும் பாகங்களிலிருந்துதான் ஒளி வெளிப்படுகிறது என்ற உண்மை அறிவியல் பூர்வமாக நிறுவப்பட்டிருக்கிறது.
பூதவுடலைப் பிரிந்த ஆவியுருவம் யோகியர் போன்ற அருளாளர் மனோசக்தி நிரம்பியவர். மற்றும் நாய் மாடு போன்ற உயிரினங்களின் கண்களுக்கும் நன்றாகத் தெரியும் என்பர்.
அக்கு பங்க்சர் மருத்துவ முறையில், நோயை எளிதில் குணப்படுத்த மேனியில் எந்தெந்தப் பகுதியை மருத்துவர் தேர்ந்தெடுக்கின்றனரோ, அந்தந்தப் பகுதியிலிருந்து வெளிப்படும் ஒளி மிகுதியாக இருக்கிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஆதலால் இம்முறையில் ஆவியுடலுக்குச் சிகிச்சையளிப்பதன் மூலம் பூதவுடலிலுள்ள தொந்தரவுகள் குணமாகின்றன என்றும் நம்ப இடம் உள்ளது. மனோலோக - சப்த பூத அணுக்களால் ஆக்கப்பட்ட உடம்பு மன உடம்பு எனப்படும். இச்சை என்பது மனதில் ஒரு பகுதியே. எனவேதான் இச்சையுடலும் மனவுடலும் சேர்ந்தது மனோமயகோசம் என்ற பெயரால் வழங்குகிறது. சித்தம், புத்தி, அகங்காரம் ஆகியவை மனதின் பாகங்களே. மனமே இவ்வாறாக வடிவெடுக்கும்.
மனவுடலானது 4வது உடம்பான உருவமன உடம்பு, 5வது உடம்பான அருவமன உடம்பு என இருவகைப்படும். உருவங்களை (மனிதன், கல், மரம், வீடு, ஆறு, மலை போன்றவை) நினைக்கும் அறிவு கொண்டது உருவமன உடம்பு; அருவங்களை (அன்பு, பாசம், காதல், ஈகை போன்றவை) நினைக்கும் அறிவு கொண்டது அருவமன உடம்பு. உருவத்தை நினைக்கும் போது அது சுவர்லோக அணுக்களால் ஆக்கப்பட்டுச் சஞ்சரித்து, உருவமன உடம்பில் தொழிற்படும். உருவமன உடம்பும் இச்சையுடலும் ஒரேவித விதிகளுக்கு உட்பட்டு வேலை செய்வன.
நல்ல இச்சை நல்லவனவற்றையும் தீய இச்சை தீயவற்றையும் அளிப்பதால், உருவமன உடம்பு நல்லனவற்றில் தொழிற்பட நல்லவையையே எண்ண வேண்டும் என்பர். அக்கருத்தில்தான் சுபநிகழ்ச்சிகளில் ஆசி வழங்குதலும் வாழ்த்துக்கள் சொல்லுதலும் ஏற்பட்டன.
தீய உருவமன உடம்பே பில்லி, சூனியம், ஏவல், செய்வினை போன்ற தீய செயல்களில் பயன்படுத்தப்படுகிறது. தீய உருவமன உடம்பு நல்ல உருவமன உடம்பை நெருங்க முடியாது. நெருங்கினாலும் செயலிழந்து திரும்பி விடுகிறது.
அருவத்தைச் சிந்திக்கும்போது அது மகர்லோக அணுக்களால் ஆக்கப்பட்டு, சஞ்சரித்து, அருவமன உடம்பில் செயல்படும். சாதாரண மனிதரால் பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம் ஆகிய மூன்று உலகங்களில்தான் மாறி மாறிச் செல்ல முடியுமே தவிர அதற்கு மேல் மகர்லோகம் செல்லவே இயலாது. அந்த லோகங்களும் நம் இடத்தைச் சுற்றியே இருப்பதால் யோகியர் தாம் இருந்த இடத்திலேயே சப்தலோகமும் செல்வர்.
ஆகவே அருவமன உடம்பை யோகப் பயிற்சி இயற்றுவதன் மூலமே, ஒருவன் மகர்லோகம் செல்ல முடியும். மகர்லோக அலைகள் இன்பம் பயக்குவன. இருந்த போதிலும், இவற்றில் அன்பு செலுத்துவோர், அன்பைப் பெறுவோர் என்ற பேதவுணர்ச்சிக்கு இடமுண்டு. பருவுடலும் பிராணவுடலும் தோற்றத்தில்தான் சிறிது வேறுபடுமே தவிர, அளவில் அவ்வளவு வேறுபாடு உடையன அல்ல. ஆனால் இவ்விரு உடல்கள் தவிர, ஏனைய ஐயுடல்களும் ஆன்மா பக்குவம் பெறப் பெற விரிந்து கொண்டே செல்லும் இயல்புடையன.
இந்த ஐயுடல்கள் சாதாரண மனிதனுக்கு ஒரு முழம் விரிந்திருக்கும். மகான், ஞானி, யோகி, அவதார புருஷர் போன்ற அருளாளர்களுக்கு மனவுடம்பானது பல்லாயிரக்கணக்கான மைல் விஸ்தீரணத்திற்கு விரிந்திருக்கும். ஆகவேதான் அவரது போதனை செயல், ஆசி ஆகிய யாவையும் உடனே நற்கதி நல்குகின்றன. அதேபோல் அவரது சாபமும் வெகுசீக்கிரமே பலிதமாகிறது. ஜானலோக அணுக்களால் ஆனது ஆறாவதான விஞ்ஞானமய உடம்பு (விஞ்ஞானமய கோசம்) ஜானலோகத்தில் ஒற்றுமையும் வேற்றுமையும் ஒரே காலத்தில் இருக்கும். விஞ்ஞான உடம்பில் நின்று இன்னொருவனைக் கவனிக்கும் போது அவன் மூலமாக நினைப்பது உணர்வது, சிந்திப்பது, செயலாற்றுவது என்ற அனுபவங்கள் உண்டாகும்.
அப்போது அவன் விஞ்ஞானமய உடம்பை இயக்குவோரின் ஓர் அங்கமாகவே தோன்றுவான்; அவன் தன்னில் ஒரு பாகம் என்ற உணர்ச்சிதான் உண்டாகுமே ஒழிய, அவனிடம் விஞ்ஞானமய உடலோன் அடங்கியவன் என்ற உணர்ச்சி ஏற்படாது. இவ்வுடம்பால் தீயோனைத் திருத்துவது மிக எளிதானது. அருவமன உடம்பு, விஞ்ஞானமய உடம்பு, ஆனந்தமய உடம்பு ஆகிய இந்த மூவுடல்களும் உலகங்களும் ஒன்றோடொன்று ஊடுருவி, விரவி, ஒன்றுக்குள் ஒன்றாக ஒவ்வொருவரையும் சுற்றியே இருக்கின்றன. இந்த மூவுடல்களிலும் சித்தர், ஜீவன் முக்தர் போன்ற மகான்களே செயல்பட வல்லவர்கள்.
இதுகாறும் கண்ட சப்த சரீரங்களும் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கின்றன என்று மெய்ஞ்ஞானியர் தகுந்த ஆதாரங்களோடு விளக்குவர். ஆனால், இவை ஏனைய உயிர்களுக்கும் உண்டா என்பது பற்றி தெளிவான கருத்துக்கள் இதுவரை வெளிவரவில்லை. மனிதனுக்கு மனிதன் 5 கோசங்களில் மாறுபடலாம். ஆனால் எல்லோரிடமும் உள்ளது "ஆத்மா" என்ற ஒன்றுதான் என்பதைதான் கைகுவித்து உணர்த்துகிறார்கள். ஒரு கை தன் 5 கோசங்கள்; மற்றொரு கை அடுத்தவரது 5 கோசங்கள் இரண்டையும் இணைப்பது ஆத்மா ஒன்றே என்று காட்டுகிறது. இறைவன் முன்னிலையில் இந்த உண்மையை பக்திப்பூர்வமாக (நம்பிக்கையோடு) ஒப்புக்கொண்டு உணர்ந்து செயல்படுவேன் என்று உணர்த்தவே கைகுவித்து வணங்குகிறார்கள்.
நன்றி..!! நிறைவு 🙏
படித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி..!!
மீண்டும் மற்றொரு தொடர் பதிவில் சந்திப்போம் நன்றி..!!

Comments

Popular posts from this blog

மனைக்கு ஆகா விருட்சங்கள், இரவிற்கு ஆகா போசனங்கள்..

சூரிய நமஸ்காரம்- தமிழரின் யோக பயிற்சி..!! {பாகம்-03}

"தாய்ப்பால்" எனும் அருமருந்து!  உலக தாய்ப்பால் வாரம் !!