சித்த மருத்துவத்தில் வெற்றி காண்பது எப்படி?

 சித்த புற மருத்துவ சிகிச்சை அறையின் அமைப்பு:



BSMS படித்து முடித்த உடனே புற மருத்துவ முறைகளை அடிப்படையாக கொண்டு சிகிச்சை தொடங்கினால் வெற்றி நிச்சயம். ஒவ்வொரு சித்த மருத்துவமனையிலும் கண்டிப்பாக புற மருத்துவ அறை அமைக்கப்பட வேண்டும். நோயாளிகளின் பல பிரச்சினைகளை சித்தா புற மருத்துவம் கொண்டு தீர்க்க முடியும். 

#சைனஸ் பிரச்சினைக்கு - நசியம், பற்று, புகை, வேது 
#முழங்கால் வலிக்கு - சீலை, சுட்டிகை, பற்று, தொக்கணம் 
#கழுத்து வலிக்கு - தொக்கணம், பூச்சு, ஒற்றடம், பற்று #தசைப்பிறட்சிக்கு - கட்டு, பற்று 
#தசை பூரிப்புக்கு - பொடிதிமிர்தல், சீலை
#மூலத்துக்கு - புகை, கசாய ஊறல்
#மனநோயிற்கு தாரை, எண்ணெய் ஊறல்
#கண்வலி, சுரத்துக்கு - கலிக்கம், பற்று
#வயிற்றுவலிக்கு - வமனம், பீச்சல் 
#கட்டிகள் தோல்நோய்களுக்கு - அட்டை, கீறல், குருதி வாங்கல், களிம்பு, காரப்பொடி
#பௌத்திரத்துக்கு - காரத்திரி, காரநூல், சுட்டிகை என எளிய முறையில் உள் மருந்துகள் வழங்காமலேயே வளி, அழல், ஐயக் குற்றங்களை சமப்படுத்தி குணப்படுத்த முடியும். 

#தேரையர் தனது தைல வர்க்க சுருக்கத்தில் மருத்துவமனையில் #கர்ம சாந்தி சாலை அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என குறிப்பிடுகிறார். மருத்துவ மனைக்குள் நுழைந்ததுமே யாகம் அல்லது ஹோமப் புகையை முகர்ந்து "கர்ம சாந்தி சாலையில்" முக்குற்றத்தை தணிப்பதற்கும் சமன மருத்துவம் என்ற "கர்ம சாந்தி மருத்துவம்" செய்ய அறை அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இதன்மூலம் தன்னிலை மிகுந்த குற்றங்கள் (வளி, அழல் மற்றும் ஐயம்) சமனம் செய்யப்படுகின்றன. 

#குற்றங்களை  சமனம் செய்ய உதவும் கர்ம சாந்தி சாலை புற மருத்துவ முறை சிகிச்சை அறைகளில் முதன்மை நிலையாக திகழ வேண்டும்.  

புற மருத்துவத்தில் சித்தர்கள் கூறிய பெரும்பாலான மருத்துவ முறைகள் சமன மருத்துவமுறையை (Balancing Therapy) ஒத்தே காணப்படுகின்றனத.  புற மருத்துவ சிகிச்சை அறையில் இருக்க வேண்டிய உபகரணங்களை பற்றி காண்போம். #ஒரு இலட்சம் ரூபாய் முதலீட்டில் புறமருத்துவ சிகிச்சை அறை அமைத்து விடலாம்.

#புற மருத்துவ அறையில் சமன மருத்துவத்திற்காக கீழ்க்கண்ட உபகரணங்களை வைத்திருப்பது நல்லது.

#தொக்கண மேசை:
7 அடி நீளம் 3 அடி அகலம்           2 1/2 அடி உயரம் உள்ள தொக்கண மேசை.  இந்த மேசை #எட்டி என்ற காஞ்சிரம் அல்லது #வாகை அல்லது #வேம்பு ஆகியவற்றால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்.  தொக்கணம் மட்டுமன்றி பூச்சு, தாரை, பற்று போன்ற மருத்துவம் செய்யவும் உதவுகிறது.

#வமன நாற்காலி:
முன்புறம் வாயகன்ற கோப்பை உள்ள வாந்தி எடுத்தால் துப்பும் வசதியுடன் கூடிய மேசை நாற்காலி வமன நாற்காலி ஆகும்.

#நசிய நாற்காலி:
பின்பக்கமாக சாய்ந்திடும் வசதியுடன் கூடிய நாற்காலி, நசியம்,கலிக்கம், மை மருத்துவம் செய்யப் பயன்படுகிறது.

#கழிச்சல் நாற்காலி
உட்கார்ந்த நிலையில் கழிச்சல் செய்யும் வசதியுடன் கூடிய நாற்காலி.

#மண் அல்லது செம்பினால் செயப்பட்ட தாரை எந்திரம்:
தாரை எந்திரமானது மையத்தில் ஒரு துளைவுடன் குழிவாக காணப்படும்.  இந்த துளையின் வழியாக சொட்டு சொட்டாக எண்ணெய் அல்லது திரவ மருந்து நெற்றியில் சொட்டக் கூடிய தன்மையுடையதாகும்.  நெற்றியில் மட்டுமன்றி உடல் முழுவதும் அல்லது தலையில் தாரை செய்வதற்கு இது பயன்படுகிறது.  ஒரு நூல் திரியை முடிச்சுப் போட்டு தொங்கவிட்டு தாரை செய்யலாம்.

#பீச்சல் எந்திரம்:
ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பீச்சல் எந்திரம் பயன்படுத்துவது நல்லது. பீச்சல் எந்திரம் என்பது ஒரு குழிவான குழலும், பீச்சக்கூடிய கனமான குழலும் ஒன்றுடன் ஒன்று சொருகுவது போல், சிரிஞ் போன்று காணப்படும் எந்திரமாகும்.  இந்த பீச்சல் எந்திரத்தில் பெரும்பாலும் 20 முதல் 200 மில்லி அளவு திரவ வடிவிலான மருந்துகளை அடைத்து வைத்து குறிப்பிட்ட பகுதிக்குள் பீச்சுவது போல் பீச்சாங்குழல் தன்மையுடன் காணப்படும். குறிப்பிட்ட மருந்தை பீச்சாங்குழலில் நிரப்பி, பிறப்பு உறுப்பு பகுதி, மலவாய் பகுதி, ஆகிய ஏதேனும் ஒன்றில் மருந்தை செலுத்துவது பீச்சல் எனப்படும். இது அந்த பகுதியை கழுவுவதற்கோ அல்லது குறிப்பிட்ட பகுதியில் மருந்தை செலுத்தி,  அதன் மூலம் கழிச்சலை ஏற்படுத்துவதற்கோ பயன்படுகிறது. பீச்சாங்குழலானது வளையக்கூடிய தன்மையுடன் மூச்சுக்குழல் அல்லது வாய் வழியாக உணவு பாதைக்குள் செலுத்தி இரைப்பையில் உள்ள நஞ்சு அல்லது கழிவு பொருட்களை கழிவுவதற்கும் பயன்படும்.  நீண்ட வளையக்கூடிய பீச்சாங்குழல் அந்த காலத்தில் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தது. 

#நசிய கோப்பை அல்லது சங்கு கோப்பை:
பால் சங்கினால் செய்யப்பட்ட நசிய கருவி அல்லது சங்கு வடிவத்தில் காணப்படும் உலோகத்தால் செய்யப்பட்ட கருவி அல்லது சொட்டு மருந்து எடுப்பதற்காக பயன்படும்.

 #சொட்டாங்குழல் 
நீண்ட குழலும் ஒரு பக்கத்தில் இரப்பரால் செய்யப்பட்ட விசையுடைய அழுத்தானும் அமைந்தது. இது நசிய குழலாகவும், கலிக்க குழலாகவும் மற்றும் செவியுரை குழலாகவும் பயன்படுகிறது. 10 முதல் 20 சொட்டுகள் இந்த மருந்தை எடுத்து 2,4,6 மற்றும் 8 சொட்டுகள் நாசி துவாரங்களில் அல்லது கண்களில் அல்லது செவியில் விடுவது போன்ற வசதியுடன் காணப்படும்.  ஒரு முறை பயன்படுத்தி எறியக்கூடிய சொட்டாங்குழல் எந்திரத்தை பயன்படுத்தலாம் அல்லது சுத்தம் செய்யக் கூடிய உலோக நசிய எந்திரத்தை பயன்படுத்தலாம். சங்கு நசிய எந்திரம் பயன்படுத்துவதற்கு சிறந்ததாகும்.

#வேது எந்திரம்:
வேது எந்திரம் என்பது மருந்து பொருட்கள் சேர்த்து கொதிக்க வைத்த திரவத்திலிருந்து எழும் ஆவியை அறை முழுவதும் அல்லது குறிப்பிட்ட பகுதியில் செலுத்தும் எந்திரமாகும்.  மின் சக்தியால்  சூடாகக் கூடிய எந்திரத்தில் மருந்து பொருட்கள் மூட்டையாக கட்டி, ஒரு வடிகட்டியில் போடப்பட்டு, நீரில் ஊற வைக்கப்பட்டு தண்ணீர் குறிப்பிட்ட அளவு சூடாக்கப்பட்டு அதிலிருந்து வெளியேறும் ஆவி ஒரு குழல் மூலமாக வேது அறைக்குள் செலுத்தப்படுகிறது. வேது எந்திரம் (Steamer) மற்றும் வேது அறை (Chamber) தனித்தனியாக இருக்க வேண்டும். வெப்பநிலை கட்டுப்படுத்தக்கூடிய வெப்ப உணர்வான்களும் வேது எந்திரத்தில் காணப்படுகின்றது.

#ஊறல் குளியல் தொட்டி:
குளியல் தொட்டி என்பது ஒரு ஆழமான தொட்டியாகும். ஆறு அடி நீளத்துடன் ஒன்றரை அடி ஆழத்துடன் உள்ளே படுத்துக் கொள்வதற்கு வசதியாக கழுத்துக்கு கீழ், கால் வரை நீருக்குள் ஊறும் வசதியுடைய காணப்படும். கசாயம், பால் அல்லது மூலிகை சாறுடன் உடம்பை ஊற வைக்க இது பயன்படுகிறது.

#புகை எந்திரம்:
புகை எந்திரம் என்பது புளியீர்க்கு, கரி அல்லது மின் சக்தியால் இயக்கக் கூடிய, மருந்துகளை போட்டவுடன் புகை வரக்கூடிய புகை எந்திரமாகும்.  கரி பயன்படுத்தாமல் மருந்து பொருட்களை மட்டும் போட்டு புகையை ஏற்படுத்தக்கூடிய நவீன புகை எந்திரங்களும் தற்சமயம் காணப்படுகின்றன.

#அஞ்சனக்கோல்:
மரக்குச்சி அல்லது செப்பு குச்சியால் கண்களுக்கு அட்சரம் என்ற மை தீட்டலாம்.

#கலிக்க எந்திரம்:
கண்களுக்கு சொட்டு மருந்து விடுவதற்காக அழுத்தானுடன் கூடிய கலிக்க எந்திரம், சொட்டு மருந்து எந்திரம் கலிக்க எந்திரமாகும்.  

#வமன நாற்காலி
வமன நாற்காலியில் அமர்ந்து வமன மருந்தை உட்கொண்ட பின் கீழிருந்து மேல் நோக்கி, நடு மார்பிலிருந்து, நடு முதுகிலிருந்து மேல் நோக்கி தொக்கணம் செய்து வாந்தியை எளிமை படுத்தும் வசதி கொண்ட அமர்ந்த நிலையிலேயே வாந்தி எடுப்பதற்கு வசதியாக வாந்தியை சேகரிக்க வைக்கும் ஒரு ஆழமான பள்ளத்துடன் காணப்படும்.

#சுட்டிகை எந்திரம்
சூடு போடுவதற்கு மின்னாற்றல் உடைய அல்லது சாதாரண உலோகம் அல்லது மரக்குச்சியால் ஆன சுட்டிகை எந்திரங்கள் பயன்படுத்தலாம்.

#சொம்பு வைத்தல்
உலோகக்குப்பி, எருமைக்கொம்பு அல்லது நெகிழி குப்பியால் ஆன பிடிக்கும் தன்மையுடைய கப்பிங் எந்திரங்களை பயன்படுத்தலாம்.

இவைதவிர கரலாக்கட்டை, மண்மூட்டை, கொல்லன் சக்கரம், சிலம்பக்கம்பு ஆகியனவும் புற மருத்துவ அறையில் இருக்க வேண்டும்.

இந்த எந்திரங்கள் #எஸ்டீம் கேரளீய ஆயுர்வேதா ஏஜன்சி, திருச்சூரில் கிடைக்கின்றன. 

#புறமருத்துவம் செய்ய தேவைப்படும் மருந்துகள்:
காயத்திருமேனி தைலம், வாத கேசரி தைலம், உளுந்து தைலம், பிண்டத் தைலம், சுக்குத் தைலம், நொச்சித் தைலம், பீனிச தைலம், சித்தாதி எண்ணெய், மூலக்குடோரி எண்ணெய், சந்தனாதி தைலம், அஸ்வகந்தாபாலா லாட்சாதி தைலம், அரக்கு தைலம், மயனத் தைலம், மத்தன் தைலம், பிரம்மி இதலம், கருவேலம்பட்டை தைலம், சூரணங்கள்: அமுக்கரா சூரணம், காவிக்கல் சூரணம், தயிர் சுண்டி சூரணம், ஏலாதி சூரணம், திரிபலா சூரணம், அஷ்ட சூரணம், திரிகடுகு சூரணம், வசம்பு பற்ப சூரணம், மயிலற காதி சூரணம், கொள்ளுப்பொடி, ஆளி விதைப்பொடி, குழம்பு: அகத்தியர் குழம்பு, கெளசிகர் குழம்பு, விடக் குழம்பு, தீ சம்பீர குழம்பு, இளகம்: வெண்பூசணி இளகம், அஸ்வகந்தி இளகம், பஞ்ச தீபாக்கினி இளகம், தேற்றான் கொட்டை இளகம், மை: நீலாஞ்கன மை, இளநீர் குழம்பு, கலிக்கம்: படிக பன்னீர், மெழுகு: நவ உப்பு மெழுகு, கும்மட்டி மெழுகு.

#சிகிச்சை அறை அமைப்பு:
புற மருத்துவம் மற்றும் சமன மருத்துவம் செய்வதற்கான அறை, போதுமான அளவில் சிகிச்சை மேற்கொள்வதற்கு வசதியாக இருக்க வேண்டும். ஆண், பெண் சிகிச்சை பெற என தனித்தனியாக சிகிச்சை அறை அமைத்துக் கொள்ள வேண்டும்.  உரிமம் இதனால் மற்றும் மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் பெறுவதற்கு ஏற்பாடு செய்ய முடியும்.

#ஆண்களுக்கான சிகிச்சை அறை:
#தொக்கண அறை 14 அடி X 12 அடி. (குளியல் மற்றும் கழிப்பறை இணைந்தது)
#வமன அறை 14 அடி X 12 அடி. (முகம் கழுவும் கோப்பை இணைந்தது)
#கழிச்சல் மற்றும் பீச்சு அறை 10 அடி X 10 அடி (கழிப்பறை இணைந்து)
#எண்ணெய் முழுக்கு அறை 10 அடி X 10 அடி.(குளியல் மற்றும் கழிப்பறை இணைந்தது)
#வேது அறை 10 அடி X10 அடி.(குளியலறை இணைந்தது)
#புகை அறை 10 அடி X 10 அடி.

#பெண்களுக்கான சிகிச்சை அறை:
#தொக்கண அறை 14 அடி x 12 அடி.
#வமன அறை 14 அடி X 12 அடி,
#கழிச்சல் மற்றும் பீச்சு அறை 10 அடி x 10 அடி,
#எண்ணெய் முழுக்கு அறை 10 அடி x 10 அடி,
#வேது அறை 10 அடி X 10 அடி,
#புகை அறை 10 அடி X 10 அடி.

ஒரு மருத்துவமனையில் புற மருத்துவ சிகிச்சை அறை தனியாக இருக்க வேண்டும்.  சற்று பெரிய புற மருத்துவப் பிரிவாக இருந்தால், நோயாளிகள் தங்குவதற்கு வசதியாக கழிப்பறை கூடிய குறைந்தது 100 சதுர அடி உடைய நான்கு அறைகள், 300 சதுர அடியுடன் புற நோயாளிகள் பிரிவு, 400 சதுர அடியுடன் மருந்துகள் தயார் செய்து வழங்கும் அறை.  150 சதுர அடியில் உணவு தயாரிக்கும் அறை,100 சதுர அடியில் உணவு சேமிப்பு அறை, 150 சதுர அடியில் உணவு பரிமாறும் அறை இருக்க வேண்டும்.  முதற்கட்ட மருத்துவ பரிசோதனை செய்வதற்காக 150 சதுர அடியில் ஆய்வகம் மற்றும் அலுவலக பணிக்காக 200 சதுர அடி உள்ள அறை ஆகியன சமன மருத்துவம் மற்றும் புற மருந்துவத்திற்காக தேவைப்படுகிறது.

#தேவைப்படும் மனித ஆற்றல்:
மருத்துவமனை கண்காணிப்பாளர்- 1
புற மருத்துவ சிகிச்சை செய்யும் ஆண் மருத்துவர்- 1
புற மருத்துவ சிகிச்சை முறையில் முதுநிலை பட்டம் பெற்றவர்- 1
புற மருத்துவ சிகிச்சை செய்யும் பெண் மருத்துவர்- 1
உடனுறை மருத்துவர் - 1
ஆண் புற மருத்துவ சிகிச்சையாளர் - 2
பெண் புற மருத்துவ சிகிச்சையாளர் - 2
24 மணி நேரமும் பணியில் இருக்கக் கூடிய செவிலியர்கள் - 3
உணவு தயாரிப்பு மற்றும் பரிமாறும்     பணியாளர்கள் - 2
மருத்துவமனை சுத்தம் செய்ய பணியாளர்கள் - 4
மருந்தாளுநரர்- 2
மருத்துவ ஆவண காப்பாளர்- 1
அலுவலக பணியாளர்-2
பாதுகாப்பு உத்தியோகஸ்தர்- 2

#பயிற்சியின் ஆரம்ப நிலையில் 3 அறைகளுடன் புறமருத்துவ சிகிச்சை அறை அமைக்கலாம். வர்மம், தொக்கணம், முக்குற்றங்களை சமனப்படுத்தும் சமனமருத்துவத்துடன் (வமனம், கழிச்சல், நசியம், பீச்சல், கலிக்கம், மை, வேது, ஒற்றடம், தாரை போன்ற சிகிச்சை முறைகள்), காரநூல், சுட்டிகை, குருதி வாங்கல், அட்டை மருத்துவம் ஆகியவற்றை சிறப்பு சிகிச்சை முறைகளாக பயன்படுத்தினால் தனியார் பயிற்சியில் வெற்றி பெறலாம்.

#doctorsiddha 

Comments

Popular posts from this blog

மனைக்கு ஆகா விருட்சங்கள், இரவிற்கு ஆகா போசனங்கள்..

சூரிய நமஸ்காரம்- தமிழரின் யோக பயிற்சி..!! {பாகம்-03}

"தாய்ப்பால்" எனும் அருமருந்து!  உலக தாய்ப்பால் வாரம் !!