சூரிய நமஸ்காரம்- தமிழரின் யோக பயிற்சி..!! {பாகம்-03}
இயற்கை அன்னையின் மகோன்னதமான படைப்புகளில் ஒன்று மனித உடல். நமது சாத்திரங்கள் நம் உடலை நூறு வருடங்களுக்கும் மேலாக மிகவும் சிறப்பாக, அதே வேளையில் இயல்பாகவே முறையாக இயங்கும் எந்திரமென வருணிக்கின்றன. அதே வேளையில் முறையான உணவு. உடற்பயிற்சி மற்றும் ஓய்வு ஆகியவற்றின் துணையோடு நம் உடலைப் பேணிப் பாதுகாக்கும் பொறுப்பு நம்மிடம்தான் உள்ளது. இவற்றுள் உடற்பயிற்சி என்பதன் அடிப்படையில் ஆசனங்கள், பிராணயாமங்கள், மற்றும் தியானத்தினை உள்ளடக்கிய யோகப் பயிற்சிகள் உடலையும் மனதையும் உறுதியாக செயல்படப் பெரிய அளவில் துணை புரிகின்றன. எனவே வாழ்வில் நம்முடைய குறிக்கோளை அடைந்திட, நமது முதன்மையான கடமை, இந்த மனித உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதேயாகும்.
சூரிய நமஸ்காரம் என்பது ஓகப் பயிற்சிகளை உள்ளடக்கிய ஒரு முழுமையான பயிற்சியாகும். நம் இந்திய கலாசாரத்தில் மனித குலத்திற்கென, குறிப்பாக உடல், மனம் மற்றும் ஆத்மாவினை உள்ளடக்கிய தனிமனித மேம்பாட்டிற்குக் கிடைத்துள்ள ஒரு மாபெரும் பரிசு என சூரிய நமஸ்காரத்தினைக் கூறலாம். சாதி, மதம், மொழி, இனம் மற்றும் தேசியத்தையெல்லாம் கடந்த ஒரு பொதுவான பயிற்சியே சூரிய நமஸ்காரம்.
சூரிய நமஸ்காரம் என்பது மனிதனுடைய கட்டுப்பாட்டில் சுவாசத்தினை முறைப்படுத்தி, உடலின் வெளியே நாம் இயக்குகின்ற உறுப்புகளோடு உள்முகமாக தானே இயங்கக்கூடிய சூட்சும உறுப்புக்களையும் முறையாகச் செயல்படச் செய்து முழுமையாகப் பலன் அளிக்கும் ஒரு அற்புதமான பயிற்சியாகும். எட்டு வயதிற்கு மேற்பட்டு எண்பது வயதிற்கு உட்பட்ட எந்த ஒரு சாதாரண உடல்வாகுள்ள மனிதரும் இதனைச் செய்ய முடியும். இந்த சூரிய நமஸ்காரம் வளரும் குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் பேரளவில் நன்மை பயக்கின்றது.
தொடர்ச்சியாக சூரிய நமஸ்காரம் செய்வோருக்குக் கீழ்க்கண்ட பலன்கள் கிடைக்கின்றன.
1. கட்டுப்பாடுடன் கூடிய சீரான உடல் வளர்ச்சி.
2. ஆரோக்கியத்துடன் கூடிய திறன்மிகுந்த உடல்.
3. அமைதியுடன் கூடிய சமநிலையான மனநிலை.
4. ஆழ்ந்த கவனத்துடன் கூடிய கூடுதலான செயல்திறன்.
5. நினைவாற்றலுடன் கூடிய உணர்வுகளின் மீதான கட்டுப்பாடு.
சூரிய நமஸ்காரம் நமது உடலின் முக்கியமான மண்டலங்களாகிய சுவாச மண்டலம், ஜீரண மண்டலம், இரத்த ஓட்ட மண்டலம், நரம்பு மண்டலம், தசை நார்கள், நாளமில்லாச் சுரப்பிகள் மற்றும் மூளை உள்ளிட்ட புலன்களை வலிமையாக வைத்திருக்க உதவும் ஒரு பயிற்சியாகும்.
ஒரே நேரத்தில் பன்னிரண்டு நமஸ்காரங்கள் செய்வதென்பது சிறப்பான செயலாகும். இதற்கு சாதாரணமாகப் பதினைந்து நிமிட நேரமாகும். ஒவ்வொரு நமஸ்காரமும் மொத்தம் 12 நிலைகளை உள்ளடக்கியது. இதில் ஒவ்வொரு நிலையும் குறிப்பிட்ட சிறப்பான பலன்களைத் தரும் வல்லமை வாய்ந்தது.
நன்றிகள் :
கு.ராம்கிஷன்
யோகாசன ஆசிரியர்
#DoctorSiddha #Yoga #SiddhaMedicine #SpecialMedicine #SooriyaNamaskaram #Body #Mind #Relaxation #Health #Exercise

Comments
Post a Comment