மனிதர் வாழ்வில் ஐவகை நிலங்களின் தாக்கம்..!!
மக்களின் தன்மையானது அவர்கள் வசிக்கும் நிலம், காலம் ( பொழுது ) இவைகளுக்கேற்ப அமையும். ஆகையால், நோயின்றி வாழ விரும்புவோர் நிலம், காலம் ஆகிய இவ்விரண்டு முதற் பொருள்களைப் பற்றி முதலில் அறிய வேண்டும். யாவற்றிற்கும் நிலமே ஆதாரமாய் இருப்பதால், முதலில் நிலத்தைப் பற்றியும் அதில் அமையும் ஊர்களைப் பற்றியும் ஆராய்வோம்.
'' வரைவே சுரமே புறவே பழனத்
திரையே யவையவை சேர்க்கு மிடனே
எனவீரைந்து மியம்பிய நிலன் அவை
குறிஞ்சி முதலா வகனைத் திணைக்கும்
உறுந்திர முறையா னிரண்டின் டுரிய ''
சங்க இலக்கியங்களில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐவகை நிலங்கள் குறிப்பிடப்படுகின்றன. இவை சாதாரணமாக மலை, காடு, வயல், கடல், பாலைவனம் என்பவையும், இவற்றைச் சார்ந்த ஐந்து இடங்களும் என பத்தாக கூறப்படும். இவை முறையே மலையும் மலை சார்ந்த இடமும், காடும் காடு சார்ந்த இடமும், வயலும் வயல் சார்ந்த இடமும், கடலும் கடல் சார்ந்த இடமும், மணலும் மணல் சார்ந்த இடமும் என பத்தாக வழங்கப்படுகின்றது. ஆக ஒவ்வொரு திணைக்கும் ( நிலத்துக்கும் ) இரண்டிரண்டு இடங்கள் உரியனவாகும்.
ஒவ்வொரு திணையின் இடத்தன்மையினால், ஆங்காங்கு வசிப்பவருக்கு ஏற்படும் நன்மை தீமைகளை நம் முன்னோர் கீழ்க்காணும் செய்யுள்களால் விளக்கினர்.
குறிஞ்சி நிலத்தின் குணம் :
'' குறிஞ்சி வருநிலத்திற் கொற்றமுண் டிரத்தம்
உறிஞ்சி வருசுரமு முண்டாம் - அறிஞரைக்
கையமே தங்குதரத் தாமைவல்லை யுங்கதிக்கும்
ஐயமே தங்கு மறி ''
கபத்திற்கு இருப்பிடமான குறிஞ்சி நிலத்தில் விளைகின்ற மூலிகைகளுக்கு நோய்களைப் போக்கும் வன்மையுண்டு. ஆயினும் அங்கு வசிப்பவர்க்கு, உதிரத்தை முறிக்கும் காய்ச்சலும், வயிற்றில் ஆமைக் கட்டியும், வழலைக் கட்டியும் உண்டாகும்.
நெய்தல் நிலத்தின் குணம் :
'' நெய்தனில மேறுவர்ப்பை நீங்கா துறினுமது
வெய்தனில் மேதங்கு வீடாகும் - நொய்தன்
மருங்குடலை முக்காக்கு வல்லுறுப்பை வீக்குங்
கருங்கடலைக் கீழீறக்குங் காண் ''
நெய்தல் நிலம் மிகுந்த உவர்ப்பை அகலாதிருந்தாலும் அது பித்த வாயு தங்குவதற்கு இடமாம். அதில் வசிப்பவருக்குத் தேகத்திலுள்ள நுட்ப இடங்களில் கபநீரானது பெருகித் தடித்தலை உண்டாக்குவது தவிர, பாதம் முதலிய வன்மையான உறுப்புகளில் சீலிபாத ரோகத்தையும் யானைக் காலையும் குடலண்ட விருத்தியையும் உண்டாக்கும்.
முல்லை நிலத்தின் குணம் :
'' முல்லை நிலத்தமைய முரிநிரை மேவினுமவ்
வெல்லை நிலைத்தபித்த மெங்குறுங்காண் - அல்லையெனின்
வாதமொழி யாததனுண் மன்னுமவை வழிநோயப்
பேதமொழி யாதறையப் பின்பு ''
முல்லை நிலம், எருமை, பசு, ஆடு இவைகளின் கூட்டத்தை உடையதாயிருப்பினும், அது பித்தம் பெருகுதற்கு இடமாம் அன்றியும், அப்பித்தத்துடன் வாதமும் நீக்கமின்றிப் பொருந்தும் அவ்விருவகைத் தோடங்களால் பல நோய்கள் உண்டாகும். அந் நோய்களின் பேதங்களைத் தனித்தனியாக கூறுவது அரிதாகும்.
மருத நிலத்தின் குணம் :
'' மருதநில நன்னீர் வளமொன்றைக் கொண்டே
பொருதநில மாதியநோய் போக்குங் - கருதநிலத்
தாறிரதஞ் சூழவருந் துவரென்றாற் பிணியெல்
லேறிரதஞ் சூழ்விக்கு மில் ''
மருதநிலம் நல்ல நீர் வளப்பம் வாய்ந்த ஒன்றாதலால், வாத பித்த கபங்களால் உண்டாகின்ற நோய்களைப் போக்கும் அன்றியும், அந்நிலத்தில் விளைகின்ற அறுசுவைப் பதார்த்தங்கள் சேர்ந்த உணவை உண்பவர்தம் பேரைச்சொன்னாலும் நோய்கள் இவ்வுலகத்திலேயே இல்லாதொழியும்.
பாலை நிலத்தின் குணம் :
'' பாலை நிலம்போற் படரைப் பிறப்பிக்க
மேலைநில மியாது விரித்ததற்கு - வேலைநில
முப்பிணிக்கு மில்லா முறையே யவற்றாலா
மெப்பிணிக்கு மில்லாமஃ தெண் ''
பாலைநிலம், துன்பம் தருதற்கிடமாயிருத்தல் மட்டுமேயன்றி, உலகிற் கொல்லும் வாத பித்த கபங்களுக்கும் அவைகளால் முறையே ஏற்படும் மற்றெல்லாப் பிணிகளுக்கும் இடமாயுள்ளது.
ஆகவே மேற்குறிப்பிட்ட செய்யுட்களினால், மக்கள் வாழ்வதற்குத் தக்க நிலம் மருதம் என்றும், அறவே தகாத நிலம் பாலை என்றும், மற்றவை மத்திமம் என்றும் உணரலாம்.
அத்துடன்
'' மருதநில நன்னீர் வளமொன்றைக் கொண்டே
பொருத நில மாதியநோய் போக்கும் ''
என்றதாலும்,
'' நீரின்குணமெல்லாம் மண்ணின் குணமல்லால்
மற்றுமுண்டோ? ''
என்றதாலும்,
நிலத்தின் பயனை நீரின் வழியாய் மக்கள் பெறுகின்றனர் என்பது விளங்குகிறது. நீரின் வழியால் மட்டுமன்றி, வெப்பம் காற்று இவைகளின் வழியாலும் நிலத்தின் பயனை அடையலாம். இம்மூன்றின் உதவியின்றி மக்கள் நிலத்தின் பயனை அடைய முடியாது எனலாம்.

அருமையான தகவல்.
ReplyDeleteஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏
Delete