சித்தமருத்துவத்தில் உணவின் அவசியம்..!!
தொழில் புரிவதற்கு வேண்டிய சக்தியைக் கொடுக்கவும், உடலை நிலைப்பெறச் செய்யவும், வளர்க்கவும் ஒருவர் புசிப்பதே உணவு அன்றி உடலில் தோன்றும் குற்றங்களை நீக்குவதற்கும் குணப்படுத்துவதற்கும் உண்பவைகள் உணவாகா.
மேற்கூறிய மூன்று குணங்களைப் பெற்றிருக்கும் சத்துக்கள் உணவுகளில் நிறைந்திருக்க வேண்டியதுமன்றி, அவை சீரணமாகி உடலில் பொருந்தக் கூடியவைகளாயுமிருக்க வேண்டும். இங்ஙனம் உள்ள பொருள்களை நம் முன்னோர்கள் ஆராய்ந்து எடுத்துள்ளார்கள். அவைகளுள் சில குற்றங்களைப் பெற்றும் இருக்கின்றன. இக்குற்றங்களை நீக்கும் பொருட்டு அவைகளுடன் உப்பு, எதிரிடை குணமுள்ள பண்டங்கள், வாசனைத் திரவியங்கள், திரிதோட சமத்திரவியங்கள் முதலியவற்றைத் தக்கவாறு சேர்த்துப் பாகஞ் செய்யும் முறைகளையும் நன்கு கூறியிருக்கிறார்கள். நம் உணவுப் பொருள்கள் தாது, தாவர, சங்கமம் எனும் முப்பெரும் பிரிவுகளுள் அடங்கும்.
அற உணர்ச்சியை ஒழித்து, மற உணர்ச்சியைத் தரும் ஊன் வகைகள் தீண்டாப் பொருள்களாகவே நம் தமிழ்நாட்டில் பண்டைய காலந்தொட்டு கருதப்பட்டன என அறியப்படுகிறது. உணவுப் பொருட்களிலிருந்து ஊனை வேறுபடுத்தி ''ஊனும் ஊணும்'' எனப் புறநானூற்றில் உரைக்கப்படுதலால், இவ்வுண்மையை உணரலாம். ஆசிரியர் இளங்கோவடிகள் ''ஊணூண் துறமின்'' எனத் தெளிவாகச் சிலப்பதிகாரத்தில் செப்பியுள்ளார். திருவள்ளுவரும் புலால் மறுத்தல் என்னும் அதிகாரத்தில் பத்து குறட்பாக்களால் புலால் உண்ணுதல் கூடாது என வற்புறுத்தியுள்ளார். அக்காலத்தில் புலால் உண்ணாதவர்களே நம் நாட்டில் அநேகராயிருந்தார்கள். வேளாளர் முற்றும் புலாலை மறுத்தனர். இப்பொழுதோ பல தலைமுறைகளாக ஊன் மறுத்திருந்தவர் கூட ஊன் உண்ணத் தொடங்கிவிட்டனர். ஆகையால் ஊன் வகைகளைக் குறித்தும் நோக்குதல் அவசியம் ஆகின்றது.
தாதுப் பொருள்கள் :
உடலுக்குத் தேவையான இரச உபரச லோக உப்பு பாஷாணங்களாகிய தாதுப் பொருள்களுடைய சத்துகள், நாம் உண்ணும் தாவர விலங்கு உணவுகளில் போதுமான அளவு இருப்பதால், தாதுப் பொருள்களை பாகஞ்செய்து உணவாகக் கொள்வது அவசியமில்லை. மேலும் இவ்வுணவுகளில் இருக்கும் தாதுப் பொருள்கள் சிரமமின்றிப் பூரணமாக உடலிற் பொருந்தும். தனித் தாதுப் பொருள்களை உடலிற் பொருந்துமாறு தயாரிப்பது கடினமாகும். ஆகையால் நாம் அவைகளைத் தாவர விலங்கு உணவுகளின் மூலமாகப் பெறுவதே சிறந்ததாகும்.
இவ்வாறு இருப்பினும் சுண்ணாம்பு, நீர், உப்பு இம்மூன்று தாதுப் பொருள்களையும் நாம் தினந்தோறும் உட்கொள்கின்றோம். ஈரமுள்ள கற்சுண்ணத்தைச் சிறிதளவு தாம்பூலத்தில் சேர்த்து உண்பதால் சீரண சக்தி அதிகப்படும். நீரைக் குடிக்கின்றோம். அன்றியும் பொருள்களைப் பாகப்படுத்தவும் உபயோகிக்கின்றோம்.
உப்பை நாம் உணவாகக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. தாவரம், விலங்கு உணவு பொருள்களிலுள்ள உப்புகளே நம் உடலுக்கு போதுமானவை. ஆயினும் உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்றவாறு உப்பில்லாமல் செய்த உணவு சுவையாக இருப்பதில்லை. சுவை அற்ற பண்டங்களைத் தேவையான அளவு உண்ண முடியாததாகையால் உணவுகளுக்கு நற்சுவை உண்டாகும் பொருட்டு உப்பைச் சேர்க்கின்றோம். சித்தர்கள் இந்த உப்பால் தான் நரை திரை முதலியன உண்டாகின்றனவென்றும், உப்பைக் கசிவு நீக்கி கட்டி உபயோகிக்க கூடிய சித்தி உண்டாகுமென்றும் கூறினார்கள். உப்பை கட்டுவது கடினம். ஆகையால் சாதாரண உப்பையே உபயோகிக்க வேண்டியிருத்தலின், வாததேகிகள் கல்லுப்பையும் பித்ததேகிகள் கடலுப்பையும் கபதேகிகள் இந்துப்பையும் பயன்படுத்த வேண்டும். இன்றேல் மூவித தேகிகளும் இந்துப்பையே உபயோகிக்கலாம்.
'' வாதபித்தை யெனறே வருதேகர்க்குக் கல்லுப்
போதவுப் பிந்துப்பா முணர் முறையோ - யோதவெள்ளம்
வற்றியவிந் துப்பதனை வாதமுத லோரருந்தக
குற்றமிலைக் குற்றமிலைக் கூறு ''
என்று பதார்த்த குணசிந்தாமணி நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாவரப் பொருள்கள் :
தாவரப் பொருட்களும், இவைகளைத் தின்று உயிர் வாழும் விலங்கு ( சங்கமப் பொருள் ) களும் தாம் தமக்கு உணவாகின்றன. விலங்குப் பொருள்களைவிடத் தாவரப் பொருள்களே அதிகமாக உபயோகிக்கப்படுகின்றன. இவை மரம், செடி, கொடி, புல் என நான்கு வகைப்படும். இவைகளின் கிழங்கு, தண்டு, கீரை, பூ, காய், பழம், வித்து முதலிய பல அங்கங்களும் உணவாகின்றன.
இவைகளும் பல இனத்தைச் சேர்ந்த பயிர் தானியங்களுமே தொன்று தொட்டுப் பிரதான உணவாக இருந்து வருகின்றன. பிரதான உணவுக்கு இவைகளைத் தவிர வேறு எந்தப் பொருளும் அவ்வளவு சிறந்தது அன்று; என்று தற்கால ஆராய்ச்சியினாலும் விளங்குகிறது. இச்சிறு பயிர் தானியங்களில் நீர்க்கூறு அதிகமின்றி உடலுக்கு வேண்டிய சூட்டையும், வன்மையையும் அளிக்கவல்ல சத்துக்கள் நிறைந்து, சிரமமின்றி சீரணமாகி உடலில் பொருந்தும்படி அமைந்துள்ளனவாகத் தெரிகிறது. ஆகையால் நம் முன்னோர்கள் பிரதானமாக உபயோகித்து, வழக்கத்தினால் நன்று என்று கண்ட பயிர் தானியங்களே இன்றும் நம் உணவுப் பொருள்களுள் முதன்மையானவைகளாகக் கருதப்படுகின்றன.
பயிர் தானியங்கள் :
நெல், கோதுமை, கேழ்வரகு, கம்பு, சோளம், வரகு, தினை ஆகிய இவை முதலிய பயிர் தானியங்களாகும். இத்தானியங்கள் யாவும் இந்தியாவில் விளைகின்றன. கோதுமை தவிர மற்ற தானியங்கள் தென் இந்தியாவில் பயிரிடப்படுகின்றன. இக்காரணத்தினாலேயே வட இந்தியர்களுக்குக் கோதுமை பிரதான உணவாகவும், தென்னிந்தியர்களுக்கு அரிசி பிரதான உணவாகவும் பயன்படுகின்றன. தற்காலத்தில் தென்னிந்தியர்களுடைய உணவில் போதிய சத்துகள் இல்லை என்று கருதி கோதுமையும் முக்கிய உணவாகக் கொள்ளும்படி சிலர் கூறுவதால், அக்கொள்கையை அனுசரித்துச் சில தென்னிந்தியர்கள் கோதுமையை முதல் உணவாகக் கொள்ளுகிறார்கள்.

Comments
Post a Comment