சித்த மருத்துவம் கூறும் நோய்களின் வகை..!!


" நாளடா நாற்பத்து நாலு நூறு 
          நயமுடனே நாற்பத்து எட்டு ரோகம் ''

பன்நெடுங் காலத்துக்கு முன்னரே வருங்காலத்தில் இவ் உலகில் தோன்ற கூடிய நோய்களின் மொத்த எண்ணிக்கையை அகத்தியர் தனது செய்யுட்களில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். இதில் மொத்தம் 4,448 வகையான நோய்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றை விபரமாக நோக்குவோம்.

" பாரப்பா வாதமது எண்பத்து நாலு 
          பருக்கவே பித்தமது நாற்பத்தி எட்டு 
தாரப்பா சேத்துமங்கள் தொண்ணூற் றாறு 
          தனுர்வாயு முந்நூறு சயமோ ஏழு 
வேரப்பா பெருவயிறு எட்ட தாகும் 
          வெகுசூலை இருநூறு பாண்டு பத்து 
நாரப்பா நேத்திரநோய் தொண்ணூற் றாறு 
          நறுசிலந்தி அறுபதுவுங் குன்ம மெட்டே " 

" எட்டப்பா சந்நிவகை எழுபத் தாறு 
          எழுவையுடன் பொருகழலை தொண்ணூற் றைந்து 
மட்டப்பா சுரமதுவே எண்பத் தைந்து 
          மகோதரநோய் ஏழுக்கும் சிரசில் வீக்கம் 
முட்டப்பா அஞ்சுக்கு முடம்பில் வீக்கம் 
          உதிரவே பதினாறு பிளவை பத்து 
குட்டப்பா படுவனது பதினொன் றாகும்
          குமிழிநோய் ஏழுக்கும் பீலி எட்டே " 

" பீலியுட னுறுவசிய மஞ்ச தாகும் 
          பொரிகரப்பான் தொண்ணூறு கெண்டை பத்து 
காலிநோய் குட்டமது இருப தாகும் 
          கதிர்வீச்சு மூன்றாகுந் திட்டை யஞ்சு 
சேலிநோய் சோபமது பதினா றுக்கும் 
          சொல்லிசுவு ஆறுக்கு மூர்ச்சை ஏழு 
வேலிநோய் படுவதிலே நாற்பத் தாறு 
          வெகுமூல மொன்பதாங் கழல்நோய் பத்தே ''

" பத்தான பீனிசங்கடி விஷமெழுபத் தாறு 
          பிணிநாக்குப் பல்லுநோய் எழுபத் தாறு 
சுத்தாகுங் கிராணியது இருபத்  தைந்து 
          கண்ணுடனே மாலையது இருப தாகும் 
கொத்தாகு மதிசார மிருபத் தைந்து
          கொள்கட்டி பனிரெண்டு கிருமி யாறு 
முத்தாகு மூட்டுநோய் முப்ப துக்கும் 
          முதிர்ந்த நோய் இருபது சத்தி அஞ்சே " 

" அஞ்சாகுங் கல்லடைப்பு எண்ப தாகும் 
          அதிர்வாயு தொண்ணூறு திமிர்நோய் பத்து 
மஞ்சாகும் விப்புருதி பதினெட் டுக்கும் 
          வளர்மேக மிருபத்தோர் நீரோ வைந்து 
பஞ்சாகும் விடபாகம் பதினா றுக்கும் 
          பகர்காது நோய்பத்து விக்கல் பத்து 
துஞ்சாகு மரோசியங்க அஞ்ச தாகும் 
          சொல்மூக்கு நோய்பத்து உலகத் தாரே " 

" குத்தாகுங் கடிதோஷம் ஐநூ றுக்கும் 
          குறிகாயங் குத்துவெட்டு எழுநூறுக்கும் 
பத்தாகுங் கிரந்தியுமே நாற்பத் தெட்டு 
          பறக்கின்ற பொறிவிடமோ எண்ணூ றுக்கும் 
முத்தாகும் நாள்கிட்டும் பிறநீர்க்  கோர்வை 
          முதிரவே இருநூறு துடிநோய் நூறு 
கொத்தாகும் பிள்ளைநோய் நூற தாகும் 
          கூறினேன் வியாதியுட விவரந் தானே "

மேற்கூறப்பட அகத்தியர் இரத்தினச் சுருக்க நாடியில் மொத்தம் 4,448 பிணிகள் உள்ளதென்றும் அவற்றைப் பின்வருமாறு பிரித்துள்ளதாகவும் செய்யுளில் கூறப்பட்டிருக்கிறது.
  1. வாத நோய் - 84 
  2. பித்த நோய் - 48
  3. சேத்தும நோய் - 96 
  4. தனுர்வாயு - 300 
  5. காசநோய் - 7 
  6. பெருவயிறு - 8 
  7. சூலைநோய் - 200 
  8. பாண்டு - 10 
  9. கண் நோய் - 96 
  10. சிலந்தி - 60 
  11. குன்மம் - 8
  12. சன்னி - 76
  13. எழுவை, கழலை - 95
  14. சுரம் - 85
  15. மகோதரம் - 7
  16. தலையில் வீக்கம் - 5
  17. உடம்பு வீக்கம் - 16
  18. பிளவை - 10
  19. படுவன் - 11
  20. கொப்புள் நோய் - 7
  21. பீலி நோய் - 8
  22. உறுவசியம் - 5
  23. கரப்பான் - 90
  24. கெண்டை - 10
  25. குட்டம் - 20
  26. கதிர் ( அலகு ) வீச்சு நோய் - 3
  27. திட்டை ( பல்லீறு ) நோய் - 6
  28. சோபை - 16
  29. இசிவு - 6
  30. மூர்ச்சை நோய் - 7
  31. படு ( சூலை ) நோய் - 46
  32. மூல நோய் - 9
  33. அழல் நோய் - 10
  34. பீனசம் - 76
  35. கடிவிஷம் - 76
  36. நாக்கு, பல் நோய் - 76
  37. கிராணி - 25
  38. மாலைக்கண் - 20
  39. அதிசாரம் - 25
  40. கட்டி - 12
  41. கிருமி - 6
  42. மூட்டு ( கீல் ) நோய் - 30
  43. முதிர்ந்த நோய் - 20
  44. சத்தி ( வாந்தி ) - 5
  45. கல்லடைப்பு - 80
  46. வாய்வு ரோகம் - 90
  47. திமிர் நோய் - 10
  48. விப்புருதி - 18
  49. மேக நீர் - 21
  50. நீர் நோய் - 5
  51. விஷ பாகம் - 16
  52. காது நோய் - 10
  53. விக்கல் - 10
  54. அரோசிகம் - 5
  55. மூக்கு நோய் - 10
  56. கடிதோடம் - 500
  57. காயம், குத்து, வெட்டு - 700
  58. கிரந்தி - 48
  59. பொறி ( பறவை ) விஷம் - 800
  60. புறநீர்க் கோவை - 200
  61. துடி ( உதடு ) நோய் - 100
  62. பிள்ளை நோய் - 100
ஆகமொத்தம் 4,448 

மேலும் மொத்த கணக்கில் சற்று வித்தியாசமிருப்பதையுங் காணலாம். இந்தக் கணக்கின்படி 34 நோய்கள் அதிகம் தெரிவதில், பித்த நோய் 42, சுரம் 64 என வைத்துகொண்டால் அதில் 27 குறையும். அப்படியிருந்தும் ஏழு அதிகமாயிருக்கிறது. ( 4,455 ) இதனைச் சுருக்கி ஐநூறு தொகையாகவும், மற்றும் பல கணக்காகவும் பற்பல நூலாசிரியர்கள் நோய்களை வகுத்துள்ளார்கள். 

இது பற்றியே, 

" வாளடா பெருநூலைச் சுருக்கி யானும் 
வகையாக ஐநூறு தொகையாகச் சொன்னேன் '' 

என்பதாக இரத்தினச் சுருக்க நாடியில் கூறியுள்ளார்.

எவ்வகையாகயிருப்பினும், தற்கால நிலைமைக்கேதுவாக எழுதியுள்ள சிறந்த மருத்துவ நூல்களில் காணப்படும் நோய்களின் தொகுப்பை அறிந்து, அவற்றின் குறி குணங்களை எண்வகைத் தேர்வுகளாலறிந்து கொள்ளும் சிறந்த வழிகளை மாணவர்கள் கவனித்துக் கற்றுக் கொள்ளல் சிறந்த சாதனமாக அமையும்.

Comments

Popular posts from this blog

மனைக்கு ஆகா விருட்சங்கள், இரவிற்கு ஆகா போசனங்கள்..

சூரிய நமஸ்காரம்- தமிழரின் யோக பயிற்சி..!! {பாகம்-03}

"தாய்ப்பால்" எனும் அருமருந்து!  உலக தாய்ப்பால் வாரம் !!