பூவுலகிலுள்ள நாகங்களின் பேதங்கள்..!!


காசிபன் மனைவியாகிய கத்துரு என்பவளின் வயிற்றிலுதித்த விஷப்பிராணிகள் அளவிலாதனவாயினும் இந்த அண்டகோடிகளுக்குள்ளே சர்ப்பங்களில் தலைமையாயும், உத்தம ஜாதியாயுமுள்ள சர்ப்பபேதங்களைப் பற்றி ஆராய்வோம்.

உத்தம ஜாதி சர்ப்பங்களின் பெயர்கள் :
  1. அநந்தன்
  2. குளிகன்
  3. வாசுகி
  4. சங்கபாலன்
  5. தக்கன்
  6. மகாபதுமன்
  7. பதுமன் 
  8. கார்க்கோடகன் 

ஜாதி பேதம் :

அநந்தன், குளிகன் எனும் நாகங்கள் பிரம ஜாதி நாகங்களாகவும்,
வாசுகி, சங்கபாலன் க்ஷத்திரிய ஜாதி நாகங்களாகவும்,
தக்கன், மகாபதுமன் வைசிய ஜாதி நாகங்களாகவும்,
பதுமன், கார்க்கோடகன் சூத்திர ஜாதி நாகங்களாகவும் கருதப்படுகின்றன.

மேலும் இவை ஒவ்வொன்றையும் விபரமாக பார்ப்போம்.

உத்தம ஜாதி சர்ப்பங்களிருக்கும் இடங்களும், அவைகளினுடைய மணமும், ஆடுந் திசையும், படத்தின் குறியும், நிறமும், வயதும் :

1. அநந்தன் :
  • அநந்தனென்னும் சர்ப்பமானது தென்கிழக்குத் திக்கில் தெய்வ ஸ்தலத்தில் வாசமாயிருக்கும். 
  • அது இருக்குமிடத்தில் நாவிப்பூ மணம் வீசும்.
  • அண்ணாந்து பார்த்து ஆடும். 
  • படத்தில் சங்குபோல் குறியும், வெண்டாமரைப் பூப்போல் புள்ளிகளுமிருக்கும்.
  • அது பசி வேளையில் காற்றைப் பிடித்து உணவுகொள்ளும்.
  • அதன் தேகம் சிவந்த நிறமாயிருக்கும்.
  • அதற்கு வயது 1008

2. குளிகன் :
  • குளிகனென்னும் சர்ப்பமானது மேற்குத் திக்கில் பாழடைந்த தேவாலயங்களில் வாசமாயிருக்கும். 
  • அது இருக்குமிடத்தில் மலர்மணம் வீசும்.
  • அண்ணாந்து பார்த்தாடும்.
  • வாயுவைப் பிடித்து ஆகாரமாய்க் கொள்ளும். 
  • அதன் தேகம் சிவந்த நிறமாயிருக்கும். 
  • அதற்கு வயது 1008

3. வாசுகி :
  • வாசுகியென்னும் சர்ப்பமானது கிழக்குத் திக்கில் விருக்ஷத்தடியிலிருக்கும்.
  • அது இருக்குமிடத்தில் தாழம்பூ வாசனை வீசும். 
  • மனிதரைப் பார்த்தபடி நோக்கி ஆடும். 
  • அதன் படத்தில் சக்கரம் போல் குறியும் கருங்குவளைப் பூப்போல் புள்ளிகளுமிருக்கும்.
  • கிழங்கு, வண்டு இவைகளைப் புசிக்கும். 
  • அதன் தேகம் பொன்னிறமாயிருக்கும். 
  • அதற்கு வயது 800
 
4. சங்கபாலன் :
  • சங்கபாலனென்னும் சர்ப்பமானது தென்மேற்குத் திக்கில் மரத்தடியில் வாசமாயிருக்கும். 
  • அது இருக்குமிடத்தில் தாழம்பூ வாசனை வீசும். 
  • எதிர்நோக்கி ஆடும். 
  • அதன் படத்தில் திரிசூலம் போலாவது அல்லது பிறை போலாவது குறியிருக்கும். 
  • கிழங்கு தினுசுகளைப் புசிக்கும். 
  • அதன் தேகம் பொன்னிறமாயிருக்கும். 
  • அதற்கு வயது 800

5. தக்கன் :
  • தக்கனென்னும் சர்ப்பமானது தெற்குத் திக்கில் பாழ்மனையில் வாசமாயிருக்கும். 
  • அது இருக்குமிடத்தில் பாதிரி வாசனை வீசும். 
  • நான்கு திசைகளையும் நோக்கியாடும். 
  • அதன் படத்தில் வில்லைப்போல் குறியும், துவாதசத்தின் வடிவான புள்ளிகளுமிருக்கும். 
  • அதன் தேகம் கம்மிய வெண்மை நிறமாகும். 
  • ஓணான், எலி இவைகளை உணவாகக் கொள்ளும். 
  • அதற்கு வயது 500

6. மகா பதுமன் :
  • மகா பதுமனென்னும் சர்ப்பமானது வடக்குத் திக்கில் பாழ்மனைகளில் வாசமாயிருக்கும். 
  • அது இருக்குமிடத்தில் பாதிரிப்பூ வாசனை வீசும்.
  • பல திசைகளையும் நோக்கியாடும். 
  • அதன் படத்தில் தனுசைப்போல் குறியும் ராஜவர்த்தனைக் கல்லைபோல் பிரகாசமான புள்ளிகளுமிருக்கும். 
  • அதற்கு ஆகாரம் ஓந்தி, தவளை, எலி, நத்தை இவைகள். 
  • அதன் தேகம் வெண்மை நிறமாயிருக்கும். 
  • அதற்கு வயது 500

7. பதுமன் :
  • பதுமனென்னும் சர்ப்பமானது வடமேற்குத் திக்கில் புற்றுகளிலிருக்கும். 
  • அது இருக்குமிடத்தில் இலுப்பைப்பூ வாசனை வீசும். 
  • பூமியைப் பார்த்தபடி ஆடும். 
  • அதன் படத்தில் புள்ளடி போல் குறியும் பஞ்சகோணப் புள்ளிகளுமிருக்கும்.
  • அதன் தேகம் கருமை நிறமாயிருக்கும். 
  • மீன், தவளைகளைப் புசிக்கும். 
  • இதன் வயது 300 

8. கார்க்கோடகன் :
  • கார்க்கோடகனென்னும் சர்ப்பமானது வடகிழக்குத் திக்கில் புற்றுகளில் வாசமாயிருக்கும். 
  • அது இருக்குமிடத்தில் இலுப்பைமலர் வாசனை வீசும். 
  • பூமியைப் பார்த்தபடி யாடும். 
  • படத்தில் புள்ளடிபோல் குறியும் மூன்று கண்களைப்போல் புள்ளிகளுமிருக்கும்.
  • ஜலத்திலும் குளக்கரையிலுமுள்ள ஊர்வனவாகிய ஜீவன்களைப் புசிக்கும்.
  • தேகம் மிகவும் கறுத்த நிறமாயிருக்கும். 
  • இதன் வயது 300

Comments

Popular posts from this blog

மனைக்கு ஆகா விருட்சங்கள், இரவிற்கு ஆகா போசனங்கள்..

சூரிய நமஸ்காரம்- தமிழரின் யோக பயிற்சி..!! {பாகம்-03}

"தாய்ப்பால்" எனும் அருமருந்து!  உலக தாய்ப்பால் வாரம் !!