சிவப்பேரறிவியலின் அடிப்படை என்ன..?
சைவசித்தாந்தம் எனும் சிவப்பேரறிவியல் தோன்றிய நாள் எதென கூறக்கூடா நாளாயினும் பன்னிரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் குமரிநாட்டை ஆண்ட செங்கோன் எனும் மன்னன் பெயரால் வரைந்த “செங்கோன் தரைசெலவு” என்னும் நூலில் “ஆகமம்” என்பதை பற்றிச் சில குறிப்புக்கள் அடங்கியுள்ளதெனக் கூறியுள்ளமையாலும், இன்றைக்கும், தென்கடைக்கோடி தமிழ்நாடாகிய இலங்கை முதல் வட எல்லையாகிய இமயம் வரையிலும் சிவவழிபாடு, அதனைக் பின்பற்றி வந்த வைணவ, சாங்கிய, புத்த, சமண முதலிய வழிபாடுகளும் நிலைத்திருத்தலாலும், எல்லாம் வல்ல செம்பொருளைத் தமிழர் சிவமென வழங்கியதை, பின் தோன்றியோர் பல பெயர்களால் அழைத்து, அதனைத் தொழத் தொடங்கினர் என்பது “மலைமேற்பதி விளக்கம்” என இவ்வுண்மையை எடுத்துக்காட்டும்.
“சிவம்” எனும் சொல் சிவப்பு, செம்மை என்னுஞ் சொல்லின் அடிப்படையாகத் தோன்றியதெனக் கொள்ளுதற்கு, “செம்பழம் ஆனது முதிர்ந்த பழம்”, “செங்கோல் ஆனது மேன்மை தங்கியகோல்” என வழக்கிலும், “தேமொழி உரைத்தது”, “செவ்வை நற்சிலம்பு” என சிலப்பதிகாரத்திலும், “செம்பொருள் கண்டவர் வாய்ச்சொல்” என திருக்குறளிலும் ஆகிய இவ்விரண்டு பண்டை நூற்களை நோக்கின் “சிவ”, “செம்”, “செவ்” எனுஞ் சொற்களை அடைமொழியாகப் பொருள்கட்கு அமைப்பது அவைகளின் மேன்மையைக் காட்டும் பொருட்டே என தெளியக் கிடைக்க, இதனை “சிவம்” வடமொழித்து என கூறுதல் எவ்வாறு பொருந்தும்? மேலும்,
“பவழ மானது கனிந்து பழுத்தசெம் பழமி தென்ன
உவமமில் லாமற் றோன்று உயர்பொரு ளதனை யார்க்கும்
சிவமெனும் பொருளி தென்னச் செப்புமே மகுநன் மைந்தா
நவமணி நவம ணிப்பொன் நவநிதி என்ன லாமே”
என தேரையர் ரசமணியை (குருகுளிகையை) கூறவந்தவர் அதனைப் பவழம் (இயற்கையிலேயே செந்நிறமாயினும்) அது பழுத்துக் கனிந்து செம்பழம் போல் முதிர்ச்சியடையுமானால் எவ்வளவு அழகாய் இருக்குமோ அவ்வாறு ரசமணி ஒப்பில்லாப் பொருளாகிய சிவப்பொருள் ஒன்றுளது இது என சொல்லத்தக்கதாகும் என கூறியதாலும் அறிக.
இவ்வாற்றலையுடைய சிவம், அவர் தோற்றிய பொருள்களில் தானுங்கூடி உயிருக்குயிராய் இருப்பார் என்றதும் சித்த மருத்துவத்திற்கு உடன்பாடுடையதாகும். அது எவ்வாறெனின், சைவ நூலிற் கூறிய முப்பத்தாறு உண்மையுரையோடு (தத்துவத்தோடு) அறுபதுங் கூட்டித் தொண்னூற்றாறாக, உடல் அமைப்பிற்காவன,
“முப்பத்து முப்பத்து முப்பத் தாறுவரும்
செப்ப மதிகளுடைக் கோயிலுள் வாழ்பவர்
செப்ப மதிகளுடைக் கோயிற் சிதைந்தபின்
ஒப்ப வனைவரும் ஓட்டெடுடத் தாரே”
எனத் திருமூலர் கொண்டதும்,
“சீரிய வீசனார்க்குஞ் சீவர்க்கு முபாதி யொன்றேல்
சீவனென்னச் சிவனென்ன வேறிலை”
எனக் கைவல்லிய நூலாரும்,
திருமூலரும் சிவனுக்கும் சீவனுக்கும் வேற்றுமை கொள்ளாததும்,
சிவஞானபோதம் முதல் நூற்பாவில்,
“அவன வளதுவெனு மவைமூ வினைமயிற்
றோற்றிய திதியே யொடுங்கி மலத்துளதா
மந்த மாகி யென்மனார் புலவர்”
என்றும்,
சிவஞானபோதம் இரண்டாம் நூற்பாவில்,
“அவையே தானே யாயிரு வினைமையிற்
போக்கு வரவு புரிய வாணையி
னீக்க மின்றி நிற்குமன்றே”
என்றும்,
சிவஞானபோதம் பத்தாம் நூற்பாவில்,
“அவையே தானே யாகிய யந்நெறி”
எனவும் கூறப்பட்டுள்ளதாவது,
ஆண், பெண், ஆணும் பெண்ணும் இல்லாததான மற்றைய பொருட்களும், கடவுளின் முத்தொழிலால் தோற்றப்பட்டு, நிலைத்து, அழிவது அவற்றின் இழுக்கத்தாலென்றும், தோற்றமடைந்த அவற்றில் தோற்றப்படுபவனும் (கடவுளும்) அதனுள் அமைந்து, “நான்”, “தான்” எனக் கூறுமாறு. நீக்கமின்றி நிற்குமேயாயினும் தோற்றம் பெற்ற பொருள்களின் இருவினையால் அழியும் என்றும்,
“வாதமாய்ப் படைத்துப் பித்த
வன்னியாய்க் காத்துச் சேட்பச்
சீதமாய்த் துடைத்துப் பாராற்
தேகத்திற் குடியா மைந்து
பூத விந்தியமா மைவர்
பூசைகொண்ட வர்பால் விந்து
நாதமாங் கிருட்டிண மூர்த்தி
நமக்கென்றும் துணையா வாரே”
எனத் தாமியற்றிய மருத்துவ பாரதத்தில் தேரையர் கூறியதும் காணின்,
ஐம்பொருட்களால் ஆக்கப்பட்ட எல்லாப் பொருட்களிலும் இறைவன் நீக்கமின்றி நிலைத்துத் துணையாக, நின்று அவற்றின் வாதமாகப் படைத்தும், பித்தமாக காத்தும், ஐயமாய்த் துடைத்தும் உயிருக்குயிராய் இருந்து அவைகளால் போற்றப்படுமாறு போல் கடவுளாகிய கிருஸ்ணன் ஐவராகிய பாண்டவரிடத்தில் இணைபிரியாது உயிருக்குயிராய் நின்றனன் எனப் பொருள்படக் கூறியதால் அறியக் கிடைக்கும்.
சிவப்பேரறிவியல் தொடரும்…!!

Very much informative💯👌✨
ReplyDeleteThank you very much 🙏
Deleteதொடரட்டும்🙏
ReplyDeleteநன்றி 🙏
Delete