நோய் என்பதென்ன..? உண்டாகும் விதம் எங்ஙனம்..?
(1) ஏழு உடற்தாதுக்களாலான சரீரத்திற்கு வெளிப்புறமிருந்து ஒழுங்கீனமான ஆகாரத்தினாலும்,
(2) வளி, அழல், ஐயம் என்ற மூன்று சக்திகள் ( முக்குற்றங்கள் ) மிகுதி, குறைவுகளுக்குக் காரணமான தொழிலைச் செய்தலாலும்,
(3) சரீரத்திற்கு அன்னியமான கபம் - பித்தம் - வாதம் போன்ற ஆகாரச் சத்துக்கள் அளவுக்கு மிஞ்சியும், குறைந்தும் உட்செல்லுமாயினும் நோய்கள் உண்டாகும்.
அளவுக்கு மிஞ்சியிருப்பின், அவைகளுடன் தேகத்தினிடத்தேயுள்ள மூன்று சக்திகளில் ஒன்று அல்லது இரண்டு அல்லது அனைத்துமோ போராடி, அன்னியமான மிகுதியை வெளிப்படுத்த முயலும். அவை பலவீனப்பட்டிருப்பின், எளிதில் போக்கியும்; மிகுந்திருப்பின் சப்த தாதுக்களின் தொழிலை மாறுபடச் செய்தும்; அவற்றிற்குரிய தன்மைகள் மிகுந்தும் குறைந்தும் போகும். அப்போது தேகத்தின்கண் உண்டாகும் குணங்களின் காரியமே "நோய்" எனப்படும்.
இக்கருத்தினைப்பற்றியே தெய்வப்புலமை திருவள்ளுவனாரும் :
" மிகினுங் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா வெண்ணிய மூன்று ''
என்றருளிச் செய்வாராயினர்.
ஆதலால் "நோய்" என்பது ஸ்தூல சூக்கும சரீரங்களாகிய சப்த தாதுக்களும், வளி -- தீ -- ஐயமாகிய முக்குற்றங்களும் தத் தம் இயற்கைத் தன்மையினின்றும் வேறுபடும் போது "நோய்" எனப்படும்.
பிணிக்கப்பட்ட குற்றத்தினளவாக நோயின் பெயரும் அமையும்.
மேலும் கூறியதாவது:
" தன்வினை புறவினை தாழினும் மிகினும்,
உடலைப் பிணிக்கு முண்மையிது தாமே "
என்பதனால்,
அகக் காரணம், புறக்காரணங்கள் மிகினும், குறையினும் நோய் சம்பவிக்கும் என்பர். அதாவது உணவுப் பொருள்களை அளவு கடந்து உண்ணல்; அல்லது உடற்கு வேண்டிய அளவு கொள்ளாது சிறு உணவு கொள்ளல், தன் வன்மைக்கு மிகுந்து உழைத்தல்; அல்லது வேலை ஒன்றுமில்லாது சோம்பிக்கிடத்தல் ஆகிய இவ்விருவகைக் காரணங்களால் வளி, அழல், ஐயம் ஆகிய மூன்றும் தத்தம் நிலையில் மிகுந்தேனும் குறைந்தேனும் ( தாழ்ந்தேனும் ) பிணிக்கப்படும். அப்போது தேகத்தின்கண் உண்டாம் குறி குணங்களை நோய், பிணி, வியாதி, வினை, தாதுதோட வேறுபாடு, அசெளக்கியம் எனப் பலபெயர்களால் அழைக்கப்படும்.

சிறந்த தகவல் நன்றி 🙏
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி 👍
Deleteதகவலுக்கு நன்றி
ReplyDeleteமகிழ்ச்சி 🙏
Delete