சித்தர் என்பார் யாவர்..?
அறத்தோடு வாழும் கலையை எளிய பாடல்களில் விளக்கி, பிறரின் நலன்களை மட்டுமே மனதில் வைத்து சேவை செய்த மகான்களைத் தான் நாம் சித்தர்கள் என்கின்றோம். இதனை அகத்தியர் கீழ்வருமாறு கூறுகின்றார்.
“பேறாக மவுனத்தே முத்தி முத்தி
பேரண்டஞ் சித்தண்டந் தேகஞ் சித்தி
கூறாக சுழிமுனையில் நினைத்தால் பத்தி
கொண்டேறும் நிராகார ஒளிகள் பற்றி
நேராக ரவிமதியை உற்றுப் பார்த்து
நெய்யோடு கரிசாலை நிமைக்குள் ளாக
ஆறாகும் வரைஏறி ஆறுங் கண்டால்
அவனல்லோ ஞானியென்ற நாமந் தானே”
சித்தர்கள் என்ற சொல்லுக்கு பலவகை உள்ளார்ந்த அர்த்தங்கள் உள்ளன. அவற்றில் “உலகியலைத் துறந்தவர்கள்”, “உலக நடப்பிலிருந்து வேறுபட்டவர்கள்”, “சித்துக்கள் ஆடுவதில் வல்லமை பெற்றவர்கள்” ஆகியவை முக்கியமானவையாக கருதப்படுகின்றன.
கடவுளை காண முயல்பவர்கள் பக்தர்கள் என்றால், கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள். சிலப்பதிகாரத்தில் ‘நாடுகாண் காதை’ யில் இடம்பெறும் ‘சித்தன்’ என்ற சொல்லுக்கு “கன்மங்களை கழுவியவன்”, “எட்டுவகை சித்துக்களை உருவாக்கியவன்” என்று அடியார்க்கு நல்லார் பொருள் உரைக்கின்றார். மேலும் “ஜீவன் முக்தர்கள்” என்றும், “பிறப்பறுத்தவர்கள்” என்றும் அவரே அர்த்தம் கூறுகின்றார். ‘சித்தித்தல்’ என்பதற்கு அடைதல் என பொருள் கொண்டால் “இறைநிலையை முழுமையாக அடைந்தவர்கள்” என்றும் பொருள் கொள்ளலாம்.
இதனை சிலப்பதிகாரத்தில்,
“அணிமாதி யட்டசித்திகளையும் பெற்றவர்களே
செய்யவேண்டுவன வற்றைச் செய்து முடித்தவர்களே
எண்வகை கன்மங்களையும் ஜெயித்தவர்களே சித்தர்கள்”
எனவும்,
கருவூரார் வாதகாவியம் 700 இல்,
“பாரப்பா வெகுகோடி காலமட்டும்
பண்பாக சடத்தோடே இருப்பதற்கும்
நேரப்பா கற்பமது கொள்ளவேனும்
நேர்மையுடன் பத்தியமா இருக்கவேணும்
காரப்பா உப்பு வகைகளைக் கட்டவேணும்
சீரப்பா இவையாவும் முடித்தோன் சித்தன்
செகத்தினிலே நெடுநாளும் இருப்பான் பாரே”
எனவும் பகன்றுள்ளனர்.
சித்தர்கள் வேதாந்த சித்தாந்த சமரசநெறியில் நின்றவர்கள் ஆதலால் வேதாந்தம், சித்தாந்தம், நியாயம், வைசேடிகம், சாங்கியம், யோகம் போன்ற அடிப்படைத் தத்துவங்களை அறிந்திருத்தல் வேண்டும்.
இந்து தத்துவங்களை ஆராய்ந்து பார்ப்போமானால் அவை ஒவ்வொன்றும் ஆன்மாவின் முத்தியை அதாவது ஆன்ம ஈடேற்றத்தை முக்கிய குறிக்கோளாக கொண்டவையாக இருப்பதை காணலாம். இவ் உயரிய நிலையை நோக்கியே சித்தமருத்துவம் மக்களை நெறிப்படுத்துகின்றது.
சித்தமருத்துவமானது வாதம், வைத்தியம், யோகம், ஞானம் எனும் நான்கு பகுதிகளை உள்ளடக்கிய ஒரு விசாலமான பரப்புடைய மருத்துவம் ஆகும். இவற்றுள் வாதம், வைத்தியம் இரண்டையும் “ஏமவைத்தியம்” என்றும் யோகம், ஞானம் இரண்டையும் “பிரம்மவைத்தியம்” என்றும் அழைப்பர்.
பிறக்கும் ஒவ்வோர் உயிரும் பேரின்ப நிலையை அடையவேண்டும் என்றும், அந்நிலையை அடையும் முயற்சியில் நோய்களால் தடை ஏற்படாவண்ணம் தங்களைக் காத்துக்கொள்ள பல்லாயிரம் மருந்துகளையும், அம்மருந்துகளின் பயன்படு முறைகளையும் சித்தர்கள் தெளிவாக விளக்கியுள்ளனர்.
அவற்றுள் சிலமுறைகள் கீழ்வருமாறு,
- ஏக மூலிகை பிரயோகம் - சில மூலிகைகளை ஐம்பூத முறைகளின் படி சேர்த்து மருந்தாக்கிப் பயன்படுத்துவது.
- மாரண பிரயோகம் - மருந்துகளை உருவாக்கப் பயன்படும் பொருட்களின் நட்பு, பகை குணங்களை கொண்டு மருந்து செய்யும் முறை.
- திராவக பிரயோகம் - உபரசங்களைக் கொண்டு திராவகம் செய்து, அதன் உதவியால் பொருட்களை மடிய வைத்து, மருந்து செய்யும் முறை.
- செயநீர் பிரயோகம் - சில மருந்துப் பொருட்களை நீர் வடிவாக மாற்றி, தீயில் புகையும் பொருட்களை தடுத்து, மருந்து செய்யும் முறை.
- முப்பு பிரயோகம் - பூநீறு எனும் உப்பை எடுத்து அதை சுண்ணமாக மாற்றி, தீராத நோய்களுக்கும், ரசவாதம் எனும் தாழ்ந்த உலோகங்களை உயர் உலோகமாக மாற்றுவதற்கும் பயன்படுத்துவதாகும்.
இத்தகைய பிரயோக முறைகளில் கைதேர்ந்து விளங்கிய சித்தர்கள், ரசம் (பாதரசம்) ரச கலப்புள்ள மற்றும் பாடாண மருந்துகளின் சுத்தி முறைகளையும், மருந்தாக்கும் முறைகளையும், முறையாக முடிக்கப்படாத மருந்துகளின் பக்க எதிர் விளைவுகளையும், அத்தகைய எதிர் விளைவுகளுக்கான பரிகார முறைகளையும் நன்கு தெளிவுபெற அறிந்து அவற்றைப் பதிவும் செய்துள்ளனர். ஒரே மருந்தை வெவ்வேறு அனுபானங்களில் (பால், மோர், தேன், வெந்நீர், தண்ணீர்) பல்வேறு நோய்களுக்குக் கொடுத்தும் சித்தர்கள் குணமாக்கியுள்ளனர்.
சித்தர்கள் பார்வை தொடரும்…!!

Comments
Post a Comment