மனமறியாத ரகசியங்கள்..!! (பகுதி-1)


(அன்னமயகோசம், பிராணமயகோசம்)
இதுவரை நம் மனம் அறிய முடியாத பல அபூர்வ ரகசியங்களை இப்போது புரிந்து கொள்ள போகிறோம். இந்த பிரபஞ்சத்திலும், இந்த உலகத்திலும் காணப்படும் அதிசயங்கள் அனைத்தும், மனித உடலிலும் இருப்பதாக சித்தர்கள் அனுபவமாக சொல்லியுள்ளனர். அதனை குறிப்பிடும் வகையில் "அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்தில்" என்ற வாக்கியம் உருவானது.
வேதங்களை விளங்கிக்கொள்வதற்காக உருவானவையே உபநிடதங்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த உடலைப் போய் ஏன் பை என்றார்கள்? பை என்றால் அழகு என்றல்லவா அர்த்தம்? இப்படி உள்ளுறுப்புகள் அழகாக இருந்தால் தானே உடல் எனும் பையும் ஒழுங்காக அழகாக இருக்கும்! ஆமாம்! உடலுக்கு மெய்ப்பை என்றும், உயிர்ப்பை என்றும் தோல்பை என்றும் பல பெயர்கள் இருக்கின்றனவே! இப்படிப்பட்ட உயிர்ப்பைக்குள், தோல்பைக்குள், மெய்ப்பைக்குள் எத்தனை எத்தனை உண்மைகளும், நுண்மைகளும், அதிசயங்களும், ஆற்றல்களும் அடங்கிக் கிடக்கின்றன தெரியுமா?
நமது உடலை ஒரு மாளிகைக்கு ஒப்பிட்டுப் பார்ப்போம். ஒரு வீட்டின் அடிப்படைப் பொருளாய் அமைந்திருப்பது செங்கல், செங்கற்களை செம்மையாய் அடுக்கி வைத்தால், சுவராகிறது. உபநிடதங்கள் மனித உடலை, பகுத்துக் கூறுகின்றன. தைத்ரிய உபநிடதம் என்பதில், மனித உடல் பஞ்ச கோசங்களாக பிரித்து கூறப்பட்டுள்ளது.
💥 உடலை இயக்கும் பஞ்ச கோசங்கள் :
‘கோசம்’ என்பதற்கு ‘உறை’ என்றும்,
‘பஞ்ச’ என்பதற்கு ‘ஐந்து’ என்றும் பொருள்.
மனித உடலில் இருக்கும் ஐந்து விஷயங்கள் என்று இதனை எடுத்துக் கொள்ளலாம். அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் ஆகிய ஐந்தையும்தான் ‘பஞ்ச கோசங்கள்’ என்கிறார்கள்.
இந்த உடல் பற்றிய ரகசியங்களை அறிந்தால் தான் அடுத்த கட்ட ரகசியங்களை அறிய முடியும், நம்மில் உள்ள ஆத்மா ஏன் மறைந்து காணப்படாமல் உள்ளார் என்கிற ரகசியத்தையும் அறிய முடியும்.
உலகத்தில் உள்ள எல்லாப் பொருள்களும் பஞ்ச பூதங்களின் கலப்பால் ஆனது தான் ஆனால் அளவுகள் வேறுபடலாம். அதை பஞ்சகோசங்கள் என்று கூறுவர்.
5 விரல்கள் 5 கோசங்களை காட்டுகிறது எனவும், மனிதன் உருவாக காரணமாக உள்ள 5 கோசங்களாக அன்னமய கோசம், மனோமய கோசம், பிராணமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் என்பன ஆகும்.
வேதாந்தம் எனப்படும் தத்துவம் உபநிடதங்களின் சாரம். வேதங்களின் அந்தமாக விளங்கும் உபநிடதங்கள் இந்தப் பிரபஞ்சம் குறித்தும் அதன் ஆதாரம் குறித்தும் தேடலை மேற்கொள்கின்றன. இந்தத் தேடலில் பல்வேறு தத்துவங்களும் கருதுகோள்களும் முன்வைக்கப்படுகின்றன. கவித்துவமான முறையில் மிகச் சுருக்கமாகச் சொல்லப்படும் இந்தக் கருத்துகள் பல விதமான விவாதங்களுக்கும், விளக்கங்களுக்கும் வழிவகுக்கின்றன.
மனித வாழ்வையும் இந்தப் பிரபஞ்சத்துக்கும் அதற்கும் உள்ள தொடர்பையும் பற்றிச் சிந்திக்க விரும்புபவர்களுக்குப் பல விஷயங்களை அள்ளித் தருவது வேதாந்தம்.
ஆத்மா, பிரம்மம் ஆகிய விஷயங்கள் பற்றியும் உபநிடதங்கள் ஆழமாகப் பேசுகின்றன.
உபநிடத சிந்தனைகள் ஆத்மாவைப் பற்றி விளக்குவதற்கு முன்பு நம் உடலைப் பலவாறாகப் பகுக்கின்றன. மனித உடலை ஐந்து கோசங்களாகப் பிரித்துப் பார்க்கும் ஒரு பகுதி தைத்ரிய உபநிடதத்தில் வருகிறது.
உதாரணமாக,
உறை கத்தியை சொல்லலாம், ஓடு புளி, உமி அரிசி, போல் இந்த கோசங்கள் இந்த ஆத்மனை காணபடாமல் செய்வதால் கோசங்கள் என பெயர் உண்டானது.
💥 உடலும் உயிரும்:
நமது உடம்புக்குள்ளே உயிர் இருக்கிறது. இந்த உயிரைச் சுற்றியே ஐந்து உடம்புகள் மூடிக் கொண்ருக்கின்றன.
அவற்றை,
(1) தூல சரீரம்
(2) சூக்கும சரீரம்
(3) குண சரீரம்
(4) கஞ்சுக சரீரம்
(5) காரண சரீரம் என்பா்...
இவற்றை,
(1) அன்னமய கோசம்
(2) பிராணமய கோசம்
(3) மனோமய கோசம்
(4) விஞ்ஞானமய கோசம்
(5) ஆனந்தமாய கோசம் என்றும் சொல்வது உண்டு.
பஞ்ச கோசங்கள் என்று இவை குறிப்பிடப்படுகின்றன. கோசம் என்றால் உறை; பஞ்ச என்றால் ஐந்து. அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் ஆகியவையே இந்த கோசங்கள். இவற்றைப் பற்றி இனி நமக்கு தேவையான விடயங்களை விளக்கமாக பார்ப்போம்...
💠 (1) அன்னமய கோசம் (Physical body)
தாய் தந்தையர்கள் புசித்த அன்னத்தினால் உண்டான சுக்கில, சுரோணிதங்களால் தாயின் உதரத்தில் சிசு தரித்து பிறந்து, பால் அன்னம் முதலிய ஆகாரங்களால் தினம் தினம் விருத்தி அடைந்து தூலமாகிய கை கால்கள் நீண்டும் சரீரம் மாறுபாடு அடைவது, அதிகரித்தல் குறைதல் நசித்தல் முதலான மாற்றம் உண்டாய் சப்த தாதுமயமாய் காணப்படும். ஆதலால் இந்த தூல சரீரம் "அன்னமய கோசம்" என்பர்.
இது மரணமடைந்த பின் அன்னமாகிய பிருத்வி (பூமியில்) ஒடுங்கும். (சில வாக்கியங்கள் திரும்ப திரும்ப வரும் புரிந்து கொள்வதற்காகவே) மனித உடல் அன்னத்தால் ஆனது. இதை குறிப்பது அன்னமய கோசம். எனவேதான் "உண்டிதற்றே உணவின் பிண்டம்" என்பார்கள். உண்ணும் உணவு மனிதனின் உடம்பை மட்டுமல்ல நம் சிந்தனையையும் நிச்சயிக்கிறது.
நம் ஸ்தூல உடல் அன்னம் அதாவது உணவால் தோன்றி, உணவால் வளர்ந்து, உணவின் மூலமாகிய மண்ணில் சிதைந்து அழிகிறது. இதுவே அன்னமய கோசம் எனப்படுகிறது. உடலுக்கும் வாழ்வுக்கும் உணவின் முக்கியத்துவம் என்னவென்பதை இது உணர்த்துகிறது.
"அன்னம்" என்பது உணவைக் குறிக்கும். கண்ணுக்கு புலப்படும் நமது உடலானது, உணவால் தோன்றி உணவால் வளர்கிறது. பின் உணவின் அடிப்படையாக இருக்கும் மண்ணில் சிதைந்து அழிகிறது. உடலுக்கும், வாழ்வுக்கும் உணவின் முக்கியத்துவதை உணர்த்துவதே "அன்னமய கோசம்" ஆகும். சூரிய கிரகத்தினால் உண்டான மேகங்கள் சூரியனை மூடிக்கொண்டு எப்படி காணப்படாமல் செய்கிறதோ, அக்கினியினால் உண்டாகிய புகை அக்கினியை மூடி கொண்டு காணப்படாமல் செய்கிறதோ, சத்தானது அனுசரித்து விருத்தி அடைந்து கோசங்களோடு இந்த பரமாத்மாவை மூடும் படியான சக்தி உண்டானது.
சரி இந்த அன்னமய கோசம் எப்படி உண்டானது? என்று கேள்வி எழலாம். ஒரு வஸ்துவின் குணங்கள் மற்றொரு வஸ்துவில் தோன்றுவதால் சேர்வதால் உண்டாயிற்று,
அதாவது,
நான் ஜீவன் என்பது – ஜீவாத்தியாசம்,
நான் மனுஷன் என்பது – ஜாத்யாத்தியாசம்,
நான் பிறந்து வளர்ந்து ஜனித்து மரித்து போகிறேன் என்பது – விகாரத்தியாசம்,
நான் சத்திரியன், சூத்திரன் என்பது- வர்ணாஸ்த்தியாசம்,
நான் ஆந்திரன், மஷாரஷ்டிரன் காஷ்யப கோத்திரன் பிரம்மச்சாரி சந்தியாசி என்பது-நாமஸ்தியாசம்
நான் கறுத்தவன், வெளுத்தவன் என்பது - ரூபாஸ்தியாசம்,
இவையாவும் அன்னமய லட்சணங்கள் தான். பரமாத்மாவிடமிருந்து உருவான புலன்கள் நமது ஐந்து கோசங்களில் ஒன்றான பிராணமய கோசத்தின் ஒரு பகுதி என்றும் அவை நமது பருவுடலிலிருந்து வேறுபட்டவை என்றும் விளக்குகிறது.
பருவுடல், நுண்ணிய உடல் மற்றும் காரண உடல் என்ற நமது மூன்று உடல்களை ஐந்து கோசங்களாக பிரித்து காண்பிப்பதன் மூலம் நுண்ணிய உடலின் செயல்பாடுகளை மேலும் ஆழமான முறையில் வேதம் நமக்கு விவரிக்கிறது.
உணவினால் உருவான பருவுடல் முழுவதும் அன்னமய கோசம் என்ற பெயரில் வழங்கப்படும். பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே உள்ள உருவ ஒற்றுமைக்கு காரணம் இந்த பருவுடல் பெற்றோர் உண்ட உணவின் மாறுபாட்டிலிருந்து தோன்றியது என்பதை காண்பிக்கும். உடலின் பௌதீக அடிப்படையின் காரணமாக தோன்றும் அனைத்து வியாதிகளும் வழிவழியாக தொடர (hereditary) வாய்ப்புகள் அதிகம். இவ்விரண்டைத்தவிர வேறு எந்த குணமும் பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு வராது.
பிள்ளைகளின் புத்திசாலித்தனம், மனபக்குவம், பாட்டுபாடும் திறன், விளையாட்டில் ஈடுபாடு போன்றவற்றிற்கு பெற்றோர்கள் காரணமல்ல. ஏனெனில் இவையனைத்தும் முந்தய பிறப்பில் செய்த காரியங்களின் விளைவாக ஒவ்வொருவராலும் தன் சொந்த முயற்சியால் ஈட்டப்பட்ட குணங்கள். இவற்றிற்கும் பெற்றோர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. பிள்ளைகள் பெற்றோர்கள் மூலமாக இவ்வுலகிற்கு வருகிறார்களே தவிர வேறு எதுவும் பெற்றோர்களிடமிருந்து வருவதில்லை. பெற்றோர்களிடமிருந்து பெறுவது அன்னமயகோசம் ஒன்று மட்டுமே.
மற்ற நான்கு கோசங்களும் ஒவ்வொரு உயிரினத்தின் தனிச்சொத்து.
எனவே முகசாடை மற்றும் தோலின் நிறம் தவிர பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே இருக்கும் மற்ற ஒற்றுமைகள் அனைத்தும் நண்பர்களிடையே இருக்கும் ஒற்றுமை போல காரண காரிய சம்பந்தம் இல்லாதவை. நம் கண்களுக்குத் தெரிகிற உடம்பைத் தூல சரீரம் அல்லது அன்னமய கோசம் என்பா்.
இந்த உடம்பு உணவினால் கட்டப்பட்ட வீடு. தோல், மாமிசம், இரத்தம், எலும்பு ஆகியவற்றின் தொகுதி இது!
பிறப்புக்கு முன்போ, இறப்புக்குப் பின்போ இந்த உடம்பு கிடையாது. இது நிலையற்றது. இதற்கு உறுதியான குணம் இல்லை. அறிவும் இல்லை. இந்த உடம்பையே பலா் "நான்" என்று அறியாமையால் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பு - உயர்ந்த ஆன்மீக தத்துவங்களை குஹ்யம்-ரகசியம் என்றும் குறிப்பிடுவார்கள். இவற்றை தகுதியும்-நாட்டமும் உடையவர்களுக்கு மட்டும் தனிமையில் உபதேசிக்க பட வேண்டியவை!!
💠 (2) பிராணமய கோசம் (Energy body)
நாம் அடுத்து பார்க்கப்போவது இந்த ஐந்து கோசங்களுக்கும் இணைப்பாக விளங்கும் பிராணமய கோசம் பற்றி.!
காற்றை சுவாசிப்பதால் உடம்பு வளர்கிறது. இது பிராணமய கோசம்.
அதை எப்படி சுவாசிப்பது?
அதனால் எந்த வகையான ஆற்றலை பெறுவது? என யோக நூல்கள் சொல்கின்றன.
வாக்கு, கைகள், கால்கள், எருவாய், கருவாய் என்ற ஐந்து தொழிற்கருவிகளுடன் பிணைக்கப்பட்ட காற்று மயமான உடம்பு பிராணமய கோசம் எனப்படும். இது காற்றால் அமைந்த உருவம். இது போவதும், வருவதுமாய் இருப்பது. காற்றைப் போல உள்ளும் புறமுமாய் இருப்பது இந்தக் காற்றுடம்பை ஆட்டி வைப்பது மனம்.
வாயு (காற்று) உடலின் உள்ளும் புறமும் இருக்கிறது. உடலுக்குள் இது மூச்சுக் காற்றாக உள்ளது. இதன் இயக்கத்தாலேயே உடலின் எல்லா உறுப்புகளும் இயங்குகின்றன. அனேகமான யோகசாத்திரம் தொடர்பான பதிவுகளில், நூற்களில் பிராணமய கோசத்தினை இரண்டாவது கோசம் எனக்குறிப்பிட்டு விளக்கம் அளிக்கப்படுகிறது.
அதாவது பஞ்ச கோசங்களை ஒன்றின் மேல் ஒன்றான அடுக்குகளாக உருவகிக்கப்படுவதாக விளக்கபடம் இருக்கும். படத்தில் உள்ளது போலவே அப்படியே இருக்கும் என கொள்ளல் வேண்டாம். உண்மையில் அப்படி இல்லை. ஸ்தூல உடலாகிய அன்னமய கோசம் தவிர்ந்த மற்றைய நான்கும் சூஷ்மதன்மை நிறைந்ததாகும். அவை பிரபஞ்சத்தில் எங்கும் பரவும் தன்மை வாய்ந்தவை. இதன் மூலம் செயலாற்றும் புலன்கள், உயிர் வாழ்வதற்கு அவசியமான உள் உறுப்புகள், அவற்றின் இயக்கங்கள், ஆகியவை பிராணமய கோசம் என வகைப்படுத்தப்படுகின்றன.
காற்று அனைத்து இடங்களிலும் உள்ளது. இது மனித உடலிலும் மூச்சுக் காற்றாக இருக்கிறது. இந்த காற்றின் இயக்கத்தினால்தான், உடலின் அனைத்து உறுப்புகளும் சுதந்திரமாக இயங்குகின்றன. காற்றின் மூலம் செயலாற்றும் புலன்கள், உயிர் வாழ்வதற்கு அவசியமான உள் உறுப்புகள், அவற்றின் இயக்கங்கள் ஆகியவை "பிராணமய கோசம்" என்று சொல்லப்படுகின்றன. பிராணமயகோசம் பருவுடலை உள்ளிருந்து ஆளும் நுண்ணிய உடல் மூன்று கோசங்களாக பிரிக்கப்படுகிறது. அவை பிராணமயகோசம், மனோமயகோசம் மற்றும் விஞ்ஞானமயகோசம் ஆகியவை.
நுண்ணிய உடலில் உள்ள 19 உறுப்புகளில் புத்தி, அகங்காரம், மனம், சித்தம் ஆகிய நான்கைத்தவிர எஞ்சியுள்ள பதினைந்து உறுப்புகளை உள்ளடக்கியது பிராணமயகோசம். உடலுக்கும் + பிராணாவுக்கும் + பரமாத்மாவிற்கும் சேர்க்கை உண்டாகும்!
இது எப்படி என்கிற சந்தேகம் எழலாம்.
எப்படி எனில், வாக்கு, பாணி, பாதம், பாயுரு, உபஸ்தம் என்னும் பஞ்ச கர்மேந்திரியங்களும், அபானன், உதானன், சமானன், வியானன் என்னும் பஞ்ச பிராணன்களும் சேர்ந்தது பிராணமய கோசம், பிராணவாயு முதலான பத்துவித வாயுக்களும் அன்னமய கோசத்தில் சஞ்சரிக்கும்போது, பிராணமய கோசத்திற்கும் பரமாத்மாவிற்கும் சேர்க்கை உண்டாகும்.
பரமாத்மாவில் உள்ள சத்து, சித்து, ஆனந்தம் என்னும் குணங்கள் பிராணமய கோசத்தில் உண்டாகியிருப்பதால் மனிதன் பிராணன் உடையவனாகிறான். நான் பசியும் தாபமும், ஆசையும், சாமர்த்தியமும், பலமும், வீரதீரமும் உள்ளவன்.
இந்த பிராணமய கோசத்தின் முக்கிய இயல்புகளை மூன்று பகுதிகளாக பிரிக்கலாம்;
முதலாவதாக, பிரபஞ்சத்தினையும் தனியொருவரையும் இணைத்தல்; பிராணனே தனியொரு மனிதனையும் பிரபஞ்சத்தினையும் இணைக்கும் இணைப்பாகும்.
இரண்டாவது, தன்மையான ஸ்தூலத்தினையும் சூட்சுமத்திற்கும் இடையில் இணைப்பாக இருத்த‌ல். பிராண‌ன் அதி சூஷ்ம‌மான‌து ம‌ற்றைய‌ நான்கு கோச‌ங்க‌ளையும் ஊடுருவும் த‌ன்மை வாய்ந்த‌து. அதாவ‌து ம‌ற்றைய‌ கோச‌ங்க‌ளுக்கு உயிர்ப்பினை/ச‌க்தியினை வ‌ழ‌ங்குவ‌து இந்த‌ப் பிராண‌ம‌ய‌ கோச‌மே! இன்னும் விள‌க்க‌மாக‌ அறிவ‌தானால் ஆன‌ந்த‌ம‌ய‌, விஞ்ஞான‌ம‌ய‌, ம‌னோம‌ய‌ கோச‌ங்க‌ள் அன்ன‌ம‌ய‌ கோச‌த்தில் செய‌ற்ப‌டுவ‌த‌ற்கான‌ ஆற்ற‌லையும் இணைப்பையும் வ‌ழ‌ங்குவ‌து இந்த‌ பிராண‌ம‌ய‌கோச‌மே! பிராண‌ன் ப‌ல‌ப்ப‌ட்டால் ம‌ட்டுமே எல்லா கோச‌ங்க‌ளில் உள்ள‌ ஆற்ற‌ல்களும் வெளிப்ப‌ட‌முடியும்.
யோக‌ப்ப‌யிற்சி மூல‌ம் ம‌னித‌னது சூஷ்ம‌ ச‌க்திக‌ளை விழிப்பிக்க‌ ஆதார‌மாக இருப்பதாக கொள்ளல்.
ஆகிய‌ இந்த‌ மூன்று இய‌ல்புக‌ளுமே பிராண‌ம‌ய‌ கோச‌த்தின் முக்கிய‌ இய‌ல்புக‌ளாகும். அதாவது அணு முதல் அண்டம் வரையிலான அனைத்திலும் அசைவாக இருப்பது பிராணனே! அதன் அதிசூட்சும அசைவு அணுவிலும், பௌதீகத்தில் ஒளி, ஒலி, வெப்பசக்தியாகவும், பூமியின் அசைவாகவும், அண்டங்களின் அசைவாகவும் காணப்படுகிறது.
இதனை வைத்தே சித்தர்கள் அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் என்றார்கள், யோக சாதனையின் அடிப்படையே எம்மில் உள்ள பிராணனின் அசைவை உணர்ந்து அறிவதன் மூலம் அண்டத்தின் சக்தி இயக்கத்தினை அறிவதே!
அதுபோல் எமது பிராணன் கட்டுப்படும் அளவிற்கேற்ப அண்டத்திலுள்ளவற்றை கட்டுப்படுத்தும் தன்மை பெறுவதே அஷ்டமா சித்திகளின் அடிப்படை ஆகும்.
அடுத்து இந்த‌ப் பிராண‌ன் ஸ்தூல உட‌லில் உற்ப‌த்தியாவ‌து இல்லை. வெளியிலிருந்து பிராண‌ம‌ய‌ கோச‌த்தால் ஏற்க‌ப்ப‌ட்டும் 72000 நாடிக‌ளால் உட‌லிற்கு விநியோகிக்க‌ப்ப‌டுகிற‌து.
மூன்றாவது இயல்பு, சித்தர்கள் பிராணசக்தி எல்லாக்கோசங்களையும் ஊடுருவும் என்று அறிந்திருந்தார்கள், அதனைப் பயன்படுத்தி மனிதன் எப்படி தன்னை உயர்த்திக்கொள்வது என்று கண்டறிந்ததே சித்தர்களது அட்டாங்க யோகம், கிரியா யோகம் என்பவையெல்லாம்.
இதன் மூலம் யோக‌ப்ப‌யிற்சிகள் எல்லாம் ம‌னித‌னது சூஷ்ம‌ ச‌க்திக‌ளை விழிப்பிக்க‌ ஆதார‌மாயிருத்த‌ல் என்ப‌து பெறப்படுகிறது.
பிராண‌னுட‌ன் எதைக்க‌ல‌ந்தாலும் அத‌ன்மூல‌ம் ஸ்தூல, ம‌ன‌, புத்தி, ஆன‌ந்த‌ம‌ய‌கோச‌ம் மாறுத‌லடையும் என்ப‌த‌ன் அடிப்ப‌டையிலேயே யோக‌ப்ப‌யிற்சிக‌ள் அனைத்தும் உள்ள‌ன‌.
நான் வாயாடி, ஊமை, முடவன், குருடன் என்னும் இவை போன்றவை பிராணமய கோசத்தின் குணங்களாகும்.
இது உடலில் உச்சிமுதல் உள்ளங்கால் வரை எங்கும் அந்தரங்கமாய் வியாபித்து கண் முதலான இந்திரியங்களுக்கு பலத்தை உண்டாக்கி அவற்றை, நல்வழியிலோ தீய வழியிலோ நடத்திச் செல்கிறபடியால் இதுவும் ஆத்மன் அல்ல... நமது புலன்களும் கரணங்களும் பிராணன்களும் சேர்ந்த இந்த பிராணமய கோசம் மனோமயகோசத்திற்கும் அன்னமயகோசத்திற்கும் பாலமாக அமைந்துள்ளது. இதுவே அனைத்தையும் இணைக்கும் உயிர் சக்தி, இது மூச்சின் மூலம் பிரதானமாக கட்டுப்படுத்தப்படுகிறது. பிராணன் என்பது மூச்சு அல்ல, உடல், மனம், புத்தியாலும் கட்டுப்படுத்தக் கூடியது. எனவேதான் பிராணாயாமம் என்கிற முறையாக மூச்சை உள்ளிழுத்து வெளியிடும் உடல்பயிற்சியால் மனதை அமைதிபடுத்த முடிகிறது என்று சொன்னார்கள்.
அடுத்து பகுதி இரண்டில் மனோமய கோசம் பற்றி விரிவாக பார்ப்போம்...
எங்கள் பதிவுகளை தொடர்ந்து படிக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்..!!

Comments

Popular posts from this blog

மனைக்கு ஆகா விருட்சங்கள், இரவிற்கு ஆகா போசனங்கள்..

சூரிய நமஸ்காரம்- தமிழரின் யோக பயிற்சி..!! {பாகம்-03}

"தாய்ப்பால்" எனும் அருமருந்து!  உலக தாய்ப்பால் வாரம் !!