சித்த மருத்துவம் ஓர் அறிமுகம்..!!

“தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி”
எனும் வாக்கிற்கிணங்க சிவனையே முதற் கடவுளாக கொண்ட நெறி சித்தநெறி. சித்தர்களின் முதல் சித்தன் என போற்றப்படுகின்ற சிவபெருமானிடமிருந்தே சித்த மருத்துவம் தோன்றியது.
திருமந்திரத்தில் திருமூலர்¸
“சீவனென்னச் சிவனென்ன வேறிலை
சீவ னார்சிவ னாரை யறிகிலர்
சீவ னார்சிவ னாரை யறிந்தபின்
சீவ னார்சிவ னாயிட் டிருப்பரே”
சீவனும் சிவனும் வேறில்லை¸ சீவனே சிவன் சிவனே சீவன் எனக் கொண்டதே நமது தமிழ் மருத்துவம். மக்கள் நீடூழி பல்காலம் வாழவும்¸ பிறவாநிலை எய்தலின் பொருட்டும் சித்தர்கள் மணி, மந்திரம், ஒளடதம் எனும் மருத்துவ நூல்களை தமிழ் மொழியிலேயே செய்தருளினர்.
நாட்டுப்புற மருந்து¸ வீட்டு வைத்தியம்¸ பாட்டி வைத்தியம்¸ பரம்பரை வைத்தியம்¸ வழக்கு மருத்துவம் என்றெல்லாம் அழைக்கப்படும் சித்த மருத்துவமானது தொன்மையான நாகரீகங்களுள் ஒன்றான திராவிட நாகரீகத்தின் வளர்ச்சியினிடையே தோன்றியது. முதலில் செவிவழியாக சொல்லப்பட்டுவந்த மருத்துவமுறைகள் மரபு வழியாக பரவி பின் சித்தர்களால் வளர்க்கப்பட்டு அதன் மருத்துவ¸ யோக¸ ஞான¸ வர்ம¸ வாத முறைகள் கல்வெட்டுக்களிலும்¸ ஓலைச்சுவடிகளிலும் பாடல்களாகவும்¸ மறைபொருள் பாடல்களாகவும் எழுத்துருவாக்கம் பெற்றன.
மருந்தென்பது உடல்பிணியையும்¸ உள்ளப்பிணியையும் தீர்த்து வைப்பதோடு மட்டுமல்லாமல் நோய் வருவதற்கு முன்பே காத்து¸ இறக்காத நிலையை உடலுக்கும் உள்ளத்துக்கும் தரவேண்டும் என்ற உயர்ந்த கருத்தை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொன்னவர்கள் சித்தர்கள்.
சித்தர்களின் மருத்துவ முறைகள் உடல்¸ மன பிணிகளை தீர்ப்பதில் பெரும்பங்காற்றி உள்ளன. இதனையே திருமூலர்¸
“மறுப்பது உடல்நோய் மருந்தெனலாகும்
மறுப்பது உளநோய் மருந்தெனசாலும்
மறுப்பது இனிநோய் வாராதிருக்க
மறுப்பது சாவை மருந்தெனலாமே”
அதாவது¸ சா/மரணம் வராமல் தடுப்பதே மருந்து அல்லது மருத்துவமாகும். சித்த மருத்துவத்தின் படி ஒருவரின் பூரண ஆயுட்காலம் நூறு ஆண்டுகளாம். எனவே மரணம் வராமல் தடுத்தல் என்பதன் பொருள் வாழ்நாளின் இடையில் ஏற்படும் மரணம்¸ ஒருவரின் ஆயுள் முடிந்து ஏற்படும் மரணம் எனும் இரண்டையும் தடுப்பது என்றே கொள்ளவேண்டும். ஏனெனில் சித்தர்களின் முக்கிய குறிக்கோள் இப்பிரபஞ்சம் அழியும் பிரளயகாலம் வரை இவ்வுடலுடனே ஈசனுக்கு இணையாக வாழ்தல் வேண்டும் என்பதாம். அவ்விதம் கற்பகாலமளவும் காயமாகிய இவ்வுடலை அழியாது பாதுகாப்பதற்காகவே காயகற்ப மருத்துவ முறைகளை சித்தர்கள் கூறிவைத்துள்ளனர்.
சித்த மருத்துவத்தை பின்பற்றியவர்கள் சித்தர்கள். இவர்கள் மருத்துவ முறைகள் மட்டுமன்றி யோகம்¸ ஞானம்¸ சோதிடம்¸ பஞ்சபட்சி சாஸ்திரம்¸ மனையடி சாஸ்திரம்¸ வான சாஸ்திரம்¸ நோயின்றி வாழும் முறைகள் மற்றும் சமூகவியல் சிந்தனைகளிலும் சிறப்புற்று விளங்கினர். சித்தர்கள் தம்மையும்¸ புற உலகத்தையும் திறம்பட உணர்ந்தவர்கள். மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலுள்ள ஒருங்கிணைந்த நிலையே நோயற்ற நிலை என்றும் அந்நிலையை அடையும் வழிமுறைகளையும் தெளிவாக எடுத்துரைத்துள்ளனர்.
சித்த மருத்துவம் மக்கள் நோயுற்ற போது அதனை தீர்ப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் நோய்வராமல் காப்பதிலும் சிறந்து விளங்குகின்றது. சித்த மருத்துவ முறைகளில்தான் நோயை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து மருத்துவம் செய்து குணப்படுத்தும் வழிமுறைகள் காணப்படுகின்றன. வயது முதிர்ந்தவர்களுக்கான பக்கவிளைவுகள் அற்ற மருத்துவமும்¸ நோய் வராமல் காக்கும் யோக முறைகளும் சித்த மருத்துவத்தின் தனிச்சிறப்புக்களாகும்.
உணவையே மருந்தாகக் கொண்டு உணவின் மாறுபாடுகளும்¸ அளவும்¸ அதன் தன்மையுமே பெருமளவு நோய்க்கு காரணம் என்பதை உணர்ந்து உணவிற்கு பெரும் முக்கியத்துவம் தந்தவர்கள் சித்தர்கள். பொது மருத்துவம் மட்டுமன்றி அக்காலத்திலேயே அறுவைசிகிச்சையிலும் சிறந்து விளங்கினர். சித்த மருத்துவ மூலிகைகள் எந்தவித பக்கவிளைவுகளும் இன்றி நோயை தீர்ப்பதனால் இது கற்றறிந்தவர்களினால் பெரிதும் விரும்பப்படுகின்றது.
ஆகவே பல்காலங்களுக்கு முன் தோன்றிய முதன் மொழியாம் தமிழ் மொழியுடனும்¸ அதன் நாகரீகத்துடனும் பிறந்து வளர்ந்த சித்த மருத்துவத்தின் நன்மையையும்¸ மேன்மையையும் உலகம் என்றும் இழந்துவிடாது காப்பது நம் அனைவரினதும் கடமையாகும்.

Comments

Post a Comment

Popular posts from this blog

மனைக்கு ஆகா விருட்சங்கள், இரவிற்கு ஆகா போசனங்கள்..

சூரிய நமஸ்காரம்- தமிழரின் யோக பயிற்சி..!! {பாகம்-03}

"தாய்ப்பால்" எனும் அருமருந்து!  உலக தாய்ப்பால் வாரம் !!