சித்த மருத்துவதில் தொக்கணம்..!!


வெளிப்பிரயோக மருந்துகளும் (உடலுக்கு வெளியே பூசிக் கொள்ளும் மருந்துகள் உள்பட) முப்பத்து இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
இம்மருந்துகளை புறமருந்துகள் என்றும் சொல்வார்கள். - புறமருந்துகளில் ஒன்றான தொக்கணம் என்பது, உடலில் மருந்து எண்ணெய்களை ஒரு குறிப்பிட்ட வெதுவெதுப்பான பதத்தில் தேய்த்து அழுத்துவதும், பிடித்து விடுவதுமாகும்.
தொக்கணம் செய்யும் போது பயன்படுத்தும் மருந்து எண்ணெய்கள் பொறுத்து வாத, பித்த, கப நோய்கள் தீரும் என்றாலும், வாத நோய்களுக்கென்றே சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது.
தொக்கணத்தை ஒன்பது வகைகளாக விளக்கியுள்ளனர்.
  1. தட்டுதல் அல்லது குத்துதல் : நோயுற்ற இடத்துக்குத் தகுந்தவாறு நோயாளியை உட்கார வைத்தோ, படுக்க வைத்தோ, ஒரு பக்கமாகப் படுக்க வைத்தோ, மருத்துவ எண்ணெய்கள் தடவி தட்டவோ குத்தவோ செய்யலாம். இந்தத் தட்டுதலை மந்தம், மத்திமம், சண்டகம் என கொடுக்கப்படும் வேகத்தைப் பொறுத்து மூன்றாகப் பிரிக்கலாம்.
  2. இறுக்குதல் : குறிப்பிட்ட பாகங்களில் மருந்து தைலங்களைத் தடவி இறுக்குவதாகும். மென்மையான பாகங்களையும், மெலிந்த எலும்புகளை உடைய பகுதிகளையும் இறுக்குவது கூடாது.
  3. பிடித்தல் : மருந்து தைலங்களைத் தடவி, பாதிக்கப்பட்டுள்ள தசைகளை அல்லது உறுப்புகளையோ பிடித்து விடுவதாகும்.
  4. முறுக்கல் : கை, கால்களை, பாதிக்கப்பட்ட பிற பகுதிகளையோ, நோயாளியை உட்காரவைத்து அல்லது படுக்க வைத்து முறுக்குவதாகும்.
  5. கைகட்டல் : மருந்து எண்ணெய்கள் பூசி கைகளால் இறுக்கிக் கட்டுவதாகும். பழு (விலா) எலும்புகளை இறுக்கிக் கட்டுதல் கூடாது
  6. அழுத்துதல் : உடலில் பாதிக்கப்பட்ட இடத்தில் அழுத்துவது. நோயாளிகளை உட்காரவைத்து, நிற்க வைத்து, படுக்க வைத்து இவ்வாறு செய்யலாம். ஆனால், விலா எலும்புகள், உச்சந்தலை, கணுக்கால் போன்ற பகுதிகளில் அழுத்தக் கூடாது.
  7. இழுத்தல் : தைலங்களைப் பூசி பாதிக்கப்பட்ட இடங்களை இழுப்பது. வாயுப் பிடிப்புகள், சுளுக்குகள், தசை பிறழ்ச்சி போன்றவை நீங்கும்.
  8. மல்லாத்துதல் : உட்கார்ந்திருக்கும் போது தான் இதைச் செய்ய வேண்டும். இதன்மூலம் உடல் நன்றாக வளைக்கப்படுவதால் வாதம், பித்தம், கபம் தன்னிலைப்படும். மலடு நீங்கும்.
  9. அசைத்தல் : நோயாளியை படுக்க வைத்தும், உட்கார வைத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளை அசைக்கலாம். தைலம் தேய்த்து, தேய்க்காமலும் செய்யலாம். இதனால் உடல் வலி, உடல் கடுப்பு, திமிர்த்தல் (மந்தமாக இருத்தல்) போன்றவை நீங்கும்.
நாள்பட்ட பக்கவாதம், முகவாதம், கை கால்களில் தோன்றும் வாதம் இவற்றுக்கு உள்மருந்துகளுடன், தொக்கணத்தையும் சேர்த்துச் செய்யும் போது மிக எளிதிலும், விரைவாகவும் நோய் தீரும்.
தொக்கணம் செய்யும் இடம், எப்போதும் சுத்தமான, வெதுவெதுப்பான.
காற்றோட்டமுள்ள, போதுமான வெளிச்சமுள்ள, தூசுகள் அற்ற, ஈரப்பதம் இல்லாததாக இருக்க வேண்டும்.
உணவுகள் :
தொக்கணம் செய்யும் காலத்தில், நோயாளி எளிய உணவுகளைச் சாப்பிட வேண்டும். பாசிப் பயறும், பசும் பாலும் சேர்த்து செய்த கஞ்சி, அவரை, கத்தரி, முருங்கைப் பிஞ்சுகளை சேர்க்கலாம். கால் வயிறு உணவும் கால் வயிறு நீர் கொடுத்திருக்க வேண்டும்.
தொக்கணம், உடலுக்கு ஈரப்பதம், லேசான தன்மை, மனத்துக்கு மகிழ்ச்சி, வலிமை, அமைதி, மனத்தெளிவு, ஞாபகசக்தி போன்றவற்றை அளிக்கும்.
தொக்கணத்தின் போது நரம்புகள், தசைகள், எலும்புகள் வலிமை பெறுவதோடு, ரத்தம், நிணநீர் இவற்றின் ஓட்டமும் அதிகரிக்கும்.
பொதுவாக, தூக்கத்தின் போது அதிக அழுத்தம் கொடுத்து மருந்து எண்ணெய்களால் தேய்த்துவிட வேண்டும். சில குறிப்பிட்ட நோய்களில் அதிக அழுத்தம் கொடுக்காமல் லேசாக தடவி விடுவதையும், பிடித்து விடுவதையும் செய்ய வேண்டும்.
செய்ய கூடாதவை :
வாத, பித்த நோய்களுக்கு, அதிக அழுத்தமும், நீவி விடுவதையும் சேர்த்துச் செய்ய வேண்டும். கப நோய்களுக்கு, எண்ணெய் தேய்த்து லேசாகப் பிடித்தும், திருகியும், லேசாக அழுத்தியும் விட வேண்டும், மருந்து எண்ணெய்கள் தேய்க்கும் போது, லேசான வெதுவெதுப்பாகத் தேய்க்கும் போது அதிக பலன் தரும். நோயாளியும், நோயைத் தீர்க்கும் மருத்துவரும், மாதவிலக்கு காலங்களிலும் பசியோடிருக்கும் போதும், பயம், கவலை, கோபம் போன்ற எண்ணங்களில் இருக்கும் போதும், சாப்பிட்ட உடனேயும், வயிற்று நோய்கள் இருக்கும் போது, சிறுநீர்ப்பை நிறைந்திருக்கும் போதும் மலம் கழிக்காத நிலையிலும் தொக்கணத்தைச் செய்யக் கூடாது.

Comments