சித்தர்கள் என்பவர்கள் யார்..?


பன்னிரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சைவப்பேரறிவியலுக்கு துணையாக தோன்றிய சித்தமருத்துவம், அப் பேரறிவியலை வரைந்த சித்தர்களே, அதனை எம் மக்களுக்கும் கற்பித்து நீடுழி வாழச்செய்தனர் என்றால் மிகையாகா. இதனை திருமூலர் திருமந்திரத்தில் இவ்வாறு கூறுகின்றார்.
“தமிழ்மண் டலமைந்தும் தாவிய ஞானம்
உமிழ்வது போல வுலகந் திரிவார்
அவிழு மனமுமெம் மாதி யறிவுந்
தமிழ்மண் டலமைந்துந் தத்துவ மாமே”
தமிழ்நாட்டில் தோன்றிய மொழி, பேரறிவியல், மருத்துவம் ஆகிய முந்நூற்கள் சிவனால் செய்யப்பட்டவை எனக் கொண்டவையாகவும், சிவன் நந்திக்குக் கற்பித்தார் எனவும், நந்தி திருமூலருக்கும், திருமூலர் மற்ற சித்தர்கட்கும் கற்பித்தார் எனவும் ஒரு சாரார் கூறுவர்.
இதற்கு சான்றாக திருமூலர் திருமந்திரத்திலும் மருத்துவத்தைப் பற்றி பலபாக்களில் கூறியுள்ளார்.
“வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும்
நாரி மருந்தென்று நந்தி யருள் செய்தான்
ஆதி மருந்தென் றறிவ ரகலிடஞ்
சோதி மருந்திது சொல்லவொண் ணாததே”
“நூறு மிளகு நுகருஞ் சிவத்தனீர்
மாறு மிகற்கு மருந்தில்லை மாந்தர்காள்
தேறி லிதனைத் தெளியுச்சி கப்பிடின்
மாறு மிதற்கு மறுமயி ராகுமே”
மற்றொரு சாரார், தமிழ் மருத்துவத்தை சிவன் அம்மைக்கும், அம்மை முருகனுக்கும், முருகன் அகத்தியருக்கும், அகத்தியர் புலத்தியருக்கும், அவர் ஏனையோருக்கும் கூறினார் எனக் கொள்வர்.
சித்தர்கள் தங்கள் மன வலிமையை எட்டு வகைச் செயல்கள் மூலம் படிப்படியாக உயர்த்தி பேரின்பம் என்னும் சிவநிலையை அடைந்தவர்கள். அவை ‘அட்டாங்க யோகங்கள்’ எனப்படுகின்றன.
அவையாவன,
  1. இயமம் - நல்ல எண்ணங்களை எண்ணுதல்.
  2. நியமம் - நல்ல செயல்களை செய்தல்.
  3. ஆசனம் - குறிப்பிட்ட இருக்கை முறையில் அமர்தல்.
  4. பிரணாயாமம் - யோகமுறை மூச்சுப்பயிற்சி செய்தல்.
  5. பிரத்யாகாரம் - நிலையான எண்ணத்துடன் இருத்தல்.
  6. தாரணை - நிலையான பொருளான இறையை நினைத்திருத்தல்.
  7. தியானம் - மூச்சுப் பயிற்சியையும், இறையை நினைத்தலையும் தொடர்ந்து செய்து மனதை ஒருநிலைப்படுத்தல்.
  8. சமாதி - உலக பந்தங்களிலிருந்து விடுபட்டு சம ஆதிநிலையை அடைதல்.
இப்படி பலவித நிலைகளையும் படிப்படியாக அடைந்து அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைக் கடந்து வீடுபேறு நிலையை அடைந்தனர். முக்திநிலை அல்லது வீடுபேறு என்பது துன்பமின்றி இன்பத்தை மட்டுமே உடலும், உடலில் உறைந்திருக்கும் உயிரும் எந்நாளும் துய்க்கும் பேரின்ப நிலையாகும்.
இந்நிலையை அடைந்த சித்தர்கள், கீழ்கண்ட பேராற்றல்கள் உடையவர்களாக விளங்கினர்.
  1. அனிமா - அணுவைப்போல மிகச்சிறியதாக மாறுதல்.
  2. இலகிமா - காற்றில் பஞ்சுபோல் மிதத்தல்.
  3. மகிமா - மலையைப் போல் பெரிய தோற்றம் கொள்ளுதல்.
  4. கரிமா - நீரின் மேல், நெருப்பின் மேல் நடத்தல்.
  5. பிரகாமியம் - வேண்டியவர்களுக்கெல்லாம் வேண்டியதைக் கொடுத்தல்.
  6. பிராப்தி - வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்ளுதல்.
  7. வசித்துவம் - எல்லோரும் விரும்பும் நிலையை அடைதல்.
  8. ஈசத்துவம் - ஈசனின் குணங்களையும் ஆற்றல்களையும் அடைதல்.
உடலும் உலகமும் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்ற ஐம்பூதங்களால் ஆனவையே என்றும், இரண்டுக்கும் தொடர்பு உண்டு என்பதையும்
“அண்டத்தில் உள்ளதே பிண்டம்
பிண்டத்தில் உள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே”
என்று சட்டைமுனி விபரிக்கின்றார். உடல் இயங்கும் முறைக்கும் உலகம் இயங்குவதற்கும் பெரும் தொடர்புண்டு என்றும் விளக்குகின்றார்.
இதை விளக்கும் போது,
  • தமரகம் என்றழைக்கப்படும் இதயம் - சூரியனைப் போல் இயங்குவதாகவும்,
  • மூளை - சந்திரனைப் போல் இயங்குவதாகவும்,
  • பித்தப்பை - செவ்வாய் கிரகத்தைப் போல் இயங்குவதாகவும்,
  • சிறுநீரகமும், பிறப்பு உறுப்புக்களும் - சுக்கிரன் (வெள்ளி) கிரகத்தைப் போல் இயங்குவதாகவும்,
  • நுரையீரல் - புதன் கிரகத்தைப் போல் இயங்குவதாகவும்,
  • கல்லீரல் - குரு என்றழைக்கப்படும் வியாழன் கிரகத்தைப் போல் இயங்குவதாகவும்,
  • மண்ணீரல் - சனி கிரகத்தைப் போல் இயங்குவதாகவும்
சித்த மருத்துவம் கூறுகிறது.
எனவே யோகமுறைகளில் வல்லமைபெற்ற சித்தர்கள் தமது எட்டுவகை யோகமுறைகளால் தம் உடலையும், உறுப்புக்களையும் அறிந்து, அதன் மூலம் மேற்சொன்ன கிரகங்களையும் அவற்றின் இயக்கங்களையும் அறியும் திறன்பெற்று இருந்தனர்.
சித்தர்கள் பார்வை தொடரும்...!!

Comments

Post a Comment

Popular posts from this blog

மனைக்கு ஆகா விருட்சங்கள், இரவிற்கு ஆகா போசனங்கள்..

சூரிய நமஸ்காரம்- தமிழரின் யோக பயிற்சி..!! {பாகம்-03}

"தாய்ப்பால்" எனும் அருமருந்து!  உலக தாய்ப்பால் வாரம் !!