சித்த மருத்துவத்திற்கும் சிவனிற்கும் இடையிலான தொடர்பு..!!
சைவப்பேரறிவியலை வரைந்த சித்தர்களே சித்த மருத்துவத்தையும் வரைந்தனரெனின் சைவப்பேரறிவியலில் கூறிப் போந்த நுட்பங்களையும் மருத்துவத்திற்குப் பொருந்துமளவில் அமைத்து வரைந்தனரெனக் கூறுதல் மிகையாகா.
சித்தர்கள் கொண்ட சிவம், சக்தி, மாயை ஆகிய மூன்றும் ஒன்று கூடியதான சிவத்திற்கு,
“கோளில் பொறியிற் குணமிலவே எண் குணத்தான்
தாளை வணங்காத் தலை”
என திருவள்ளுவர் கூறியாங்கு,
எண்குணங்களாகிய இயல்பாக அறிதல், எல்லாவற்றையும் அறிதல், மயக்கமின்மை, பேரிரக்கம், அளவில்லா வன்மை, எல்லையில்லா இன்பம், தூய்மையுடல், யாவையும் கடந்த நிலை எனும் ஆற்றல்கள் உடையவர் எனக் கொண்டனர்.
சிவபெருமான் எல்லா உயிர்களிலும் உயிருக்கு உயிராய், ஆன்ம நாயகனாய் நின்று நிலவுவார். அவர் எங்கள் அறியாமையை போக்கி அறிவை தந்தருளுகின்றார். சிவபெருமானின் உயிர்களை வளர்க்கும் தன்மையினை,
“பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே”
என்று மாணிக்கவாசகர் சுவாமிகள் பாடியருளியுள்ளார்.
அத்துடன் எங்களை வளர்க்கும் இறைவன் எம் அம்மை அப்பனாய் இருக்கின்றார். அவரின் எங்கும் நிறைந்து நிலவும் தன்மையினை,
“விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறைந்தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்
பொல்லாவினையேன் புகழுமா றொன்றறியேன்”
என்று மாணிக்கவாசகர் சுவாமிகள் போற்றுகின்றார்.
தமிழ் மறையோர் கடவுள் ஒன்றெனக் கொண்டவராயினும், கடவுளின் செயலுக்கேற்ப, ஆக்கல் செயலுள்ள போது பிரம்மன் என்றும், காத்தல் தொழிலுள்ள போது திருமால் என்றும், அழித்தல் தொழிலுள்ள போது உருத்திரன் என்றும் பெயரினை அமைத்தனரோ, அவ்வாறே சித்தர் மருத்துவத்திலும், உடலின் கண் அமைந்து உடலையும், மனதையும் இயங்கச் செய்யும் சீவன், உயிர், ஆன்மா என்றும் சிவத்தன்மையுடைய பொருள் ஒன்றேயாயினும், இயங்கும் தன்மையில் ஆக்கல் செயலுள்ள போது வளி (வாதம்) எனவும், காத்தல் (நிலைத்தல்) செயலுள்ள போது அழல் (பித்தம்) எனவும், அழிக்குங் செயல் பெற்ற போது ஐயம் (கபம், சிலேத்துமம்) எனவும் பெயர்களை அமைத்து, சிவத்தைப் போலவே உடலின் கண்ணமைந்த சீவனும், உடலமைப்பிற்கு வேண்டிய ஏழு உடற்கட்டுக்களினால் இரசம், குருதி, சதை, கொழுப்பு, என்பு, மூளை, வெண்ணீர் ஆகிய இவைகளுக்கு வேண்டிய பொருட்களை ஆக்குவதற்கான சக்தியையும், அவை நிலைத்தற்கான சக்தியையும், அழித்தற்கான சக்தியையும் பெற்றுள்ளதாகையால், அவை வளி, அழல், ஐயம் எனப் பெயர் பெற்றன.
எடுத்துக்காட்டாக கூறின் சக்தியானது உடற்கு வன்மை தரவேண்டிய குருதி நுண்ணனுக்களைத் தோற்றுவிக்குந் தன்மையையும், அவற்றை நிலைக்கச் செய்யும் தன்மையையும், அவைகளை அழிக்கும் தன்மையையும், உடலின் கண்ணமைந்த சீவன் உள்ள வரையில் உலகப் பொருள் தோன்றுவதும், நிலைத்தலும், அழித்தலும் போல் உடலில் உயிர் உள்ள வரை தோன்றி நிலைத்தழியும் எனவும்,
“அவையே தானே யாயிரு வினைமையிற்
போக்கு வரவு புரிய வாணையி
னீக்க மின்றி நிற்கு மன்றே”
என சிவஞான போதத்திலும்,
தோன்றிய அவையே (உயிர் பொருளில் சீவனே) சிவனை ஒத்திருப்பினும் அவற்றின் இருவினைக்கேற்ப உடலோடு புகுந்திருத்தலும் வெளியாடுதலுமாய், சிவனது கட்டளையின் படி சக்தியோடு இணைபிரியாது இருக்கும் எனக் கூறியவாறே உடலின் கண்ணமைந்த சீவனின் (உயிரின்) செயலாகிய வளி, அழல், ஐயமாகிய இம்மூன்றும் தத்தம் தொழிலைச் செய்து உடலோடு கூடி இருப்பினும் இருவினையின் பயனால் (போக்குவரவு) உடலைவிட்டு உயிர் ஏகுவதும் (இறப்பதும்) மீண்டும் வேறோர் உடலில் வந்து அமைவதுமாக இருக்கும் எனக் கூறியதால், இவ்வாறு ஆன்மா போக்குவரவு புரிவது, ஆன்மாவோடு கூடிய ஆணவம், கன்மம், மாயை என்னும் இவற்றோடு கூடி உழன்று இன்ப துன்பங்களிலே ஈடுபட்டுவரும் ஆன்மா தன் இயற்கையை அறியாது நிற்கும். ஆதல் பற்றியே, ஆன்மா தன் இயற்கையை அறியுமாறு,
“ஐம்புல வேடரின் அயர்ந்தென வளர்ந்தெனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினி லுணர்த்தவிட்
டன்னிய மின்மையி னரன்கழல் செலுமே”
என சிவஞானபோதத்தின் எட்டாம் நூற்பாவில்,
அறிவில்லாத வேடர் போன்ற ஐம்பொறி புலன்களோடு கூடிவாழ்ந்த ஆன்மாவும், அவற்றைப் போலவே வேடத்துவத்தோடு வளர்ந்தமையைப் போக்க, தம் மனது சித்தமே குருவாய்த் தோன்றி ஆன்மாவைத் தன்னை அறியும்படி உணர்த்தி, சிவநிலை எய்தும்படி செய்விக்கும் எனவும் கூறப்பட்டுள்ளதை அறியலாம்.
சிவப்பேரறிவியல் தொடரும்…!!

Comments
Post a Comment