சைவசித்தாந்தம் என்பது யாது..?
சைவசித்தாந்தத்தை “சைவசமய சாத்திரம்” எனவும் “மெய்கண்ட சாத்திரம்” எனவும் வழங்குவர். சைவம் சிவசம்பந்தம் உடையது. சித்தாந்தம் முடிந்த முடிபு என்பது. எனவே சைவசித்தாந்தம் என்றால் “சைவசமயத்தின் முடிந்த முடிபு” என பொருள் தருவது.
இந்த உபதேச பரம்பரை ஒரு பெருநெறி பற்றிய மரபின் வழிவந்தது. அது “திருக்கைலாய பரம்பரை” எனப் போற்றப் பெறுவது. அதைக் கைலாய மரபு எனவும் போற்றுவர். “கைலாய மரபு தழைக்க மாதோ” என்று பெரியவர்கள், ஞானிகள் வாழ்த்தியுள்ளனர்.
சைவசமயத்தவரின் தத்துவக் கோட்பாட்டையே “சைவசித்தாந்தம்” என வழங்குவர். சைவசித்தாந்தம் சற்காரிய வாதத்தை அடிப்படையாகக் கொண்டது. அதாவது,
“உள்ளது போகாது, இல்லாதது வராது”
இக்கொள்கையின் வண்ணம் உலகில் எப்பொருளும் அழிதல் இல்லை. எனவே முத்தி நிலையிலும் முப்பொருட்களும் உண்டு என்பது தேற்றம். ஆணவ மலம் தான் மாயாமல் தன் சக்தி மாத்திரம் மாய்ந்து தேய்ந்து செயலற்று நிற்கும்.
சைவசித்தாந்தம் வெறும் தத்துவம் மட்டுமன்றி அது ஒரு வாழ்க்கை முறையாகவும் உள்ளது. அது கடவுள் ஒருவரே முழுமுதல் என்று கூறுவதோடு, மனித சமுதாயத்தை மையமாகக் கொண்டு விளங்கும் நெறி நம்பிக்கையிலும் நல்லறிவிலும் சிறந்து விளங்குவது.
சைவசித்தாந்த கோட்பாடுகள் பெரும்பாலும் உளச்சார்புள்ளவையாக அமைந்துள்ளன. தத்துவ விளக்கத்தில் தோன்றுவது இறையருளின் இன்பக்காட்சி சிந்தையுள் தெளிவுமாய், தெளிவினுள் சிவமுமாய் என்பர்.
சைவசித்தாந்தம் சிவாகமநெறியின் பாற்பட்டது. அதில் “சிவாத்துவிதம்” என்னும் தத்துவக்கொள்கை தனிச்சிறப்புடையது.
சைவசமய தத்துவ முறையில் முன்னேறி “சீவன் முத்தர்” எனும் பெருநிலையில் வாழும் ஞானிகளை பந்தபாசங்கள் தாக்குவதில்லை. அவர்களுக்கு துக்க மகிழ்ச்சி நிகழ்ச்சிகள் கிடையா. அவர்கள் திருவருள் ஒளியினாலும் தியானத்தினாலும் தூய்மையடையப் பெற்றவர்கள்.
சைவசித்தாந்தம் எனும் தத்துவக்கொள்கை தமிழ்மக்களின் பேரறிவின் பெரும்பயன் ஆகும். இந்தியாவிலுள்ள சமயங்கள் எல்லாவற்றிலும் சைவசமயமே மிக விரிந்ததும், பெருஞ்சிறப்பு வாய்ந்ததும், பெரும் பான்மையினரின் நம்பிக்கையாயிருப்பதும் ஆகும்.
அதனை மெய்கண்டார், அருணந்தி சிவாச்சாரியார், உமாபதி சிவாச்சாரியார் முதலான சந்தனாச்சாரியர்கள் தருக்கநெறி முறைகளுக்கு ஏற்ப வரையறை செய்து விளக்கியுள்ளனர்.
சைவசித்தாந்த சாத்திரங்களுக்கு தனிச்சிறப்புக்கள் பல உள்ளன. அது விஞ்ஞானத்துக்கும் மனோதத்துவத்திற்கும் ஒத்து விளங்குவது. உலக அனுபவத்தோடு இயைந்துள்ளது. பொது அறிவிற்குப் பொருத்தமானது.
“ஏகான்மவாதம்” எனும் கொள்கையைப் பரப்பிய சங்கராச்சாரிய சுவாமிகளே செயல்முறையில் சித்தாந்தியாகவும், பெரும் பக்திமானாகவும் பணிபுரிந்தார்.
சைவசித்தாந்தம் பதி,பசு,பாசம் என்னும் முப்பொருள் உண்மையைக் கூறுவது. உயிருண்மையை அமைவாக எடுத்துக்காட்டுவது. ஆன்மா எனும் உயிர் “உள்பொருள்” என்பதை டேக்கார்ட் என்னும் ஐரோப்பிய தத்துவசாத்திர விற்பன்னர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இக்கருத்தையே மெய்கண்டதேவரும் எழுநூறாண்டுகளுக்கு முன்பே அருமையாக விளக்கியுள்ளார். அவர் ஆன்மா இயங்கும் வகையை விளக்கிய வண்ணம் வருமாறு:
“உளநில தென்றலின் எனதுடல் என்றலின்
ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின் கண்படில்
உண்டிவினை யின்மையின் உணர்த்த உணர்தலின்
மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா”
இந்த உயிர் எனும் ஆன்மா முப்பொருட்களின் நடுவில் உள்ளது. அது இடைப்பட்ட நிலை. சத்து, சதசத்து, அசித்து என்னும் மூன்றில் ஆன்மா மாயையுமல்ல, தற்பரமுமல்ல.
இந்த உயிருக்கு மூன்று நிலைகள் உள்ளன. அவை கேவலம், சகலம், முத்தி என்பனவாம். இவற்றுள் கேவலம் என்பது உடல், பொறி இன்றி அறியாமையாகிய இருளிற் கிடந்த நிலை. ஆணவ மலத்தில் அழுந்தி அதனொடு அத்துவிதமாகக் கிடந்த நிலை.
சகலம் என்பது வினை வசத்தால் கிடைத்த உடம்பை ஏற்று உலாவுகின்ற நிலை. முத்தி என்பது பாசத்தை விட்டு பரத்தோடு அத்துவிதமாகச் சேரும் நிலை.
ஆன்மாவின் உய்திக்காகவே தனு கரண புவன போகங்கள் கிடைத்துள்ளன. “அம்மை அப்பனாய் உயிர்க்கு ஆதாரமாய் நிறைந்த செம்மை சிவன் தாள் என் சிரம்” என்பதே சித்தாந்த தரிசனத்தின் அடிப்படை ஆகும்.
சைவசித்தாந்தம் தொடரும்…!!

Comments
Post a Comment